யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் புதன்கிழமை
2017-02-01




முதல் வாசகம்

ஆண்டவர் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-7,11-15

சகோதரர் சகோதரிகளே, பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை. தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: ``பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே. தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.'' திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ? இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர். எனவே, ``தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்.'' அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும். அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள்; தூய்மையை நாடுங்கள். தூய்மையின்றி எவரும் ஆண்டவரைக் காணமாட்டார். உங்களுள் எவரும் கடவுளின் அருளை இழந்துவிடாமலிருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள். கசப்பான நச்சுவேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து, தொல்லை கொடுக்காதபடியும் அதனால் பலர் கெட்டுப் போகாதபடியும் பார்த்துக்கொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சுவோர் மீது அவரது பேரன்பு நிலைத்திருக்கும்.
திருப்பாடல் 103: 1-2. 13-14. 17-18

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி 13 தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். 14 அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவில் உள்ளது. பல்லவி 17 ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீது இருக்கும். 18 அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிலிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ``இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், ``சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர, வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இவர் தச்சர் அல்லவா”!

மாற்கு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடைக்கம் ஓர் அபூர்வமான செய்தி இது. பிற நற்செய்தியாளர்கள் இயேசு தச்சரின் மகன் என்பதைப் பதிவு செய்திருக்கும்போது, மாற்கு மட்டுமே இயேசுவும் ஒரு தச்சர் என்று எழுதியுள்ளார். இயேசு தன் முப்பதாவது வயதில் பணிவாழ்வைத் தொடங்கும் முன், தன் குடும்பத்தில் ஓர் உழைப்பாளியாக, தன் தந்தையின் தொழிலாகிய தச்சுத் தொழிலையே செய்து வந்தார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். மாற்கு அதனைப் பதிவு செய்துள்ளார். ஆம், இயேசு ஒரு தச்சர், உழைப்பாளி. உழைப்பின் மேன்மையை அனுபவமுறையில் அறிந்தவர்.

இந்தத் தகவல் நம் உள்ளங்களில் பல எண்ணங்களை மலரச் செய்கிறது.

1. இறைவன் உழைப்பை மேன்மைப்படுத்துகிறார். நாம் உழைக்க வேண்டும். உழைக்காதவர் உண்ணலாகாது.

2. எந்தத் தொழிலும் இழிவானது அல்ல. நேர்மையுடன் செய்யப்படும் எந்தத் தொழிலும் இறைவனுக்கு ஏற்றதே.

3. ஒரு மனிதரை அவர் செய்யும் தொழிலைக் கொண்டு மதிப்பிட்டு, இழிவு படுத்தாமல், அவரது பண்புகள், இயல்புகளுக்காக அவரை மதிக்க வேண்டும்.

4. உழைப்பின் அருமையை உணர்ந்தவர்கள்தான் பிறரின் சுமைகளை உணர முடியும். சுமை சுமந்து சோர்ந்திருப்போர், வாருங்கள் என்று இறைப்பாறுதல் தரமுடியும். உழைப்பவர் மட்டுமே உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் புரிய முடியும். இன்றைய நாளில் உழைப்பாளிகள் பற்றிய நம் பார்வையை ஆழப்படுத்திக்கொள்வோம்.

மன்றாட்டு:

உழைப்பின் மாண்பை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் ஒரு தச்சராகப் பணி செய்து, உழைப்பவர் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர். நானும் பிறரின் உழைப்பை மதிக்கவும், உடல் உழைப்பில் ஈடுபடுவோர்மீது அக்கறை கொள்ளவும் அருள் தாரும். ஆமென்.