யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2017-01-15

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 49:3,5-6,பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்., திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-3,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:29-34)




இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.


திருப்பலி முன்னுரை

இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.

மாட்சிக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நம் ஆண்டவரின் மாட்சிமிகு செயல்களை நம் வாழ்வில் அனுபவிக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நம்மிடையே குடிகொண்ட இயேசுவை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளிக்கும் இறைவன், உலகம் முழுவதும் அவருடைய மீட்பை அடைவதற்கு நம்மைப்; பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன் எனக் கூறுவதன் மூலம் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள நம்மிடம், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையடும் பொறுப்பை ஒப்படைக்கின்றார்.

பலியையும் காணிக்கையையும் அவர் விரும்பவில்லை: எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் அவர் கேட்கவில்லை: நம்முடைய தூய்மையான வாழ்வையும், பணி வாழ்வையுமே அவர் விரும்புகின்றார். எனவே நாம் அனைவரும் உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது, உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன். என்னும் இலட்சிய தாகத்தை இதயத்தில் சுமந்து சென்று இறைவனை மகிமைப் படுத்துவோம், இறைவனின் சாட்சிகளாய் வாழ்வோம்.



முதல் வாசகம்

உலகம் முழுதும் மீட்பு அடைய, உன்னை ஒளியாக ஏற்படுத்தினோம்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 49:3,5-6

ஆண்டவர் என்னிடம், "நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன் " என்றார். யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்: ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்: என் கடவுளே என் ஆற்றல்: அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

திபா: 40: 1,3. 6-9
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.

நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்: அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்: பல்லவி:

பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை: எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை: ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். எனவே, 'இதோ வருகின்றேன்: பல்லவி:

என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது: என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்: உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' என்றேன் நான். பல்லவி:

என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்: நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை: ஆண்டவரே! நீர் இதை அறிவீர். பல்லவி:

இரண்டாம் வாசகம்

நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-3

கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்: நம்மிடையே குடிகொண்டார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:29-34

இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்: ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்: தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் " என்றார். தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: "தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் "தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் " என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்: இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அன்புத் தந்தையே இறைவா!

உமது திருவுளம் நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி அடைந்து பணிசெய்ய நீர் நியமித்திருக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: தூய ஆவியின் நிறை வல்லமையால் அவர்களை நிரப்பி, தீமைகளை முறியடிக்க வேண்டிய சக்தியையும், ஆற்றலையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பேரன்பு நிறைந்த தந்தையே!

உமது திருச்சட்டத்தை எம் உள்ளத்தில் இருத்தி, உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்து, அன்பு நிறைந்த சமுதாயமாக வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்திருக்கும் எம் அன்பு இறைவா!

இந்த நல்ல நாட்களில் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழும் எம் உழைக்கும் மக்களின் வாழ்வில் விவசாயம் பெருகவும், அதன் மூலம் ஏழை எளியோர்கள் பொருளாதரம் பல்கிப்பெறுகிடவும், அவர்தம் பிள்ளைகள் கல்விச்செல்வங்கள் நிறைவாய் பெற்றிடவும், இயேசுவின் வருகையால் மாற்றங்கள் பெற்றிடவும் இறைவா அருள் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. தந்தையே இறைவா!

இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள் என்று கூறினீரே. அதுபோல எம் இளைஞர்களைத் தீய வழிகளில் திசை திருப்பும் அனைத்துத் தீமைகளிலிருந்தும் அவர்களைக் விடுவித்து, அவர்களை ஆன்மீகத்திலும் அருள்வாழ்விலும் உறுதிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.எங்களை உமது உரிமைச் சொத்தாகத் தேர்ந்து கொண்ட எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் இறைமகனின் வருகையை உணர்ந்திடவும், தெளிவற்று திகைத்து நிற்பவர் தெளிவு பெறவும், கொள்கைப் பிடிப்பின்றி வாழ்பவர் கொள்கைப் பிடிப்புடன் வாழவும், பிறரன்பில் தழைத்திடவும் உமது அருள்வரங்களை நிறைவாய் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. அரசருக்கெல்லாம் அரசரே எம் இறைவா!

தாங்கள் அரசாகளாய் இருந்தும்: மெசியா என்னும் மீட்பரைக்காண, ஏற்றுக்கொள்ள, வழிபட ஆவலோடு நீண்ட பயணத்தை மேற்கொண்டனர். அதேபோன்று எங்களை வழிநடாத்த நீர் கொடுத்துள்ள அனைத்துத் தலைவர்களும் தாழ்ச்சி, உண்மை, நீதி, நேர்மை, தன்னலமின்மை போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், மூன்ற அரசர்களையும், இயேசுவையும் தங்கள் பணி வாழ்வுக்கு மாதிரிகையாகக் கொண்டு எல்லா மக்களின் நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ஆவலுடன் உழைக்கத் தேவையான அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

7. அன்பே உருவான இயேசுவே,

இன்றைய நாட்களில் உலகமெங்கும் நிலவும் போட்டிகளுக்கும், பயங்கரவாதத்திவிற்கும் முக்கிய காரணமான அன்பில்லாமையைப் போக்கிடவும், அகதிகளாய் பிறநாடுகளுக்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு வேண்டிய அடைக்கலமும், அவர்களின் தனித்தன்மைகள் போற்றப்படவும், எல்லோரையும் தம் சகோதர சகோதரிகளாய் ஏற்றுக்கொள்ள நல் எண்ணங்களை அருளவேண்டி உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

'இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்...' என்றார்'' (யோவான் 1:29)

இயேசு யார் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் விதத்தில் சான்றுபகர்ந்தவர்கள் பலர் இருந்தனர். அவ்வாறு சான்று பகர்ந்தவர்களில் மிகச் சிறந்தவர் திருமுழுக்கு யோவான் என்றால் மிகையாகாது, யோவான் இயேசு யார் என்பதைப் பல உருவகங்கள் வழியாக விளக்கினார். அவற்றுள் ஒன்றுதான் ''ஆட்டுக்குட்டி'' என்பதாகும். இதன் பொருள் என்ன? கால்நடைகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த அக்கால மக்கள் நடுவே ''ஆட்டுக்குட்டி'' என்பதற்கு ''அன்பார்ந்த குழந்தை'' என்றொரு பொருள் உண்டு. நாம் ''செல்லப் பிள்ளை'' என்பது இதைப் போன்றதுதான். இயேசு உண்மையிலேயே கடவுளின் அன்பார்ந்த மகன் என்பது இதனால் உணர்த்தப்படுகிறது. ஆட்டுக்குட்டி யூதர்கள் நடுவே இன்னொரு சிறப்புப் பொருளையும் கொண்டிருந்தது. அதாவது, கோவிலில் பலி செலுத்துவதற்காகப் பயன்பட்ட சிறந்த பலிப்பொருள் ஆட்டுக்குட்டி. இயேசு இப்பெயரால் அழைக்கப்படுவது அவர் தம்மையே கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார் என்பதைக் குறிக்கிறது.

ஆட்டுக்குட்டி பலியாக்கப்படுவது கடவுளிடமிருந்து பாவ மன்னிப்பை இறைஞ்சுவதற்காக. எனவே, இயேசு என்னும் ஆட்டுக்குட்டி பாவங்களைப் போக்குபவர் ஆவர். ஆக, யோவான் இயேசுவைக் கடவுளின் ஆட்டுக்குட்டி என்று அடையாளம் காட்டியதன் மூலம் இயேசு ஆற்றவிருந்த பணியைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறிவிட்டார். தம்மையே பலியாகக் கையளித்த ஆட்டுக் குட்டி தம் சாவின் வழியாக நமக்கு வாழ்வளித்தார். உலகத்தின் கண்களுக்குத் தோல்வியாக முடிந்த அவருடைய சாவு கடவுளின் திட்டத்தில் வெற்றியாக மாறியது.

மன்றாட்டு:

இறைவா, உலகின் நல்வாழ்வுக்காக எங்களையே பலியாகக் கையளித்திட எங்களுக்கு அருள்தாரும்.