யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
கிறிஸ்து பிறப்புக்காலம்
2017-01-05




முதல் வாசகம்

தம் சகோதரர் சகோதரிகனை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்.
யோவான் முதல் திருமுகம் 3:11- 21

11 நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்த செய்தி இதுவே: நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும்.12 காயினைப்போல் நீங்கள் இராதீர்கள்: அவன் தியோனைச் சார்ந்தவன்: ஏனெனில் தன் சகோதரரைக் கொலை செய்தான். எதற்காக அவரைக் கொலை செய்தான்? ஏனெனில் அவன் செயல்கள் தீயனவாக இருந்தன. அவன் சகோதருடைய செயல்கள் நேர்மையானவையாக இருந்தன.13 சகோதர சகோதரிகளே, உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் நீங்கள் வியப்படைய வேண்டாம்.14 நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோமென அறிந்துள்ளோம்: அன்பு கொண்டிராதோர் சாவிலேயே நிலைத்திருக்கின்றனர்.15 தம் சகோதரர் சகோதரிகனை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள். எந்தக் கொலையாளிடமும் நிலைவாழ்வு இராது என்பது உங்களுக்குத் தெரியுமே.16 கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால் அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.17 உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் ககோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?18 பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.19 இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்து கொள்வோம்: நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும்.20 ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்: அனைத்தையும் அறிபவர்.21 அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்
திருப்பாடல்கள் 100:1-5

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! 4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்!

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:43-51

43 மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, ' என்னைப் பின்தொடர்ந்து வா ' எனக் கூறினார்.44 பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள். 45 பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, ' இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர் ' என்றார்.46 அதற்கு நத்தனியேல், ' நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? ' என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், ' வந்து பாரும் ' என்று கூறினார்.47 நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ' இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர் ' என்று அவரைக் குறித்துக் கூறினார்.48 நத்தனியேல், ' என்னை உமக்கு எப்படித் தெரியும்? ' என்று அவரிடம் கேட்டார். இயேசு, ' பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன் ' என்று பதிலளித்தார். 49 நத்தனியேல் அவரைப் பார்த்து, ' ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர் ' என்றார்.50 அதற்கு இயேசு, ' உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர் ' என்றார்.51 மேலும், ' வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்று அவரிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

-"நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?"-

"நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்பது கேள்வி அல்ல. அது பதில். எதுவுமே வராது என்பதுதான் அதில் அடங்கியிருப்பது. இந்த மாதிரி கேள்விகளில் பதிலை உள்ளடக்கி பேசும்போது அந்த நகரை, ஆட்களை, நிகழ்ச்சிகளை அலட்ச்சியப்படுத்துகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் இயேசு இவ்வாறு அலட்ச்சியப்படுத்தப்படும் அல்லது அவமானப்படுத்தப்படும் ஊர்களையும் மனிதர்களையும் உயர்த்துகிறார், மேன்மைப்படுத்துகிறார். கர்வம் கொண்ட மனிதரையும் நகர்களையும் தரை மட்டும் தாழ்த்துகிறார். "பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்!" (மீக்கா 5 :2) இவ்வாறு பெத்லகேம் கணிக்கப்பட்டது. ஆனால் இயேசு தன் பிறப்பால், "யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை"(மத் 2'6); என்று உயர்த்தினார். நம் அன்;னை மரியாள் அறிமுகம் இல்லாது தாழ்நிலை நின்ற தன்னை எல்லாத் தலைமுறையும் போற்று பேருடையாள் என உயர்த்திதை மறக்க முடியாது. இவ்வாறு இறை வல்லமையால் சிறியதும் தாழ்ந்தவைகளும் அற்பமானதும் உயர்த்தப்படும்போது, "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்ற ஐயத்திற்கு இடமே இல்லை. அதுபோல நாமும் முகவரி இல்லாதவர்களாக இருந்தாலும் இறை அருளோடு ஒத்துழைத்தால் பெரியவற்றைச் சாதிக்க முடியும். சாதியுங்கள். வாழ்த்துக்கள்.

மன்றாட்டு:

அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உலக இன்பங்களைவிட உம்மைத் தேடவும், உம்மோடு தங்கியிருந்து நேரம் செலவழிக்கவும் எங்களுக்கு அருள்தாரும். ஆமென்.