யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






கிறிஸ்து பிறப்புக்காலம்
2016-12-27

புனித யோவான் - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா




முதல் வாசகம்

நிலைவாழ்வு பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம்
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-4

சகோதரர் சகோதரிகளே, தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டு உணர்ந்தோம். வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த `நிலைவாழ்வு' பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம். தந்தையுடனும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவுடனும் நாங்கள் கொண்டுள்ள நட்புறவை நீங்களும் கொண்டிருக்குமாறு நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களது மகிழ்ச்சி நிறைவடையுமாறு உங்களுக்கு இதை எழுதுகிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.
திருப்பாடல்: 97: 1-2. 5-6. 11-12

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி

11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன. 12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 2-8

வாரத்தின் முதல் நாளன்று மகதலா மரியா சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ``ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு மகதலா மரியாவிடம், 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' என்று கேட்டார்'' (யோவான் 20:15)

மரியா மகதலா யார்? இக்கேள்விக்கு வரலாற்றில் பல பதில்கள் தரப்பட்டதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டில் மகதலா மரியா மனம் திரும்பிய ஒரு பாவியாகச் சித்தரிக்கப்பட்டார். முதலில் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இயேசுவைச் சந்தித்ததிலிருந்து அவர் மனம் மாறி, கடின தபசு மேற்கொண்டு வாழ்நாள் முழுவதும் தம் பாவத்திற்காகத் தவம் செய்ததாகவும் வரலாறுகள் எழுந்தன. ''ஏழு பேய்கள் நீங்கப் பெற்ற மகதலா மரியா'' இயேசுவின் சீடராக மாறினார் என லூக்கா நற்செய்தியில் வருகின்ற குறிப்பின் அடிப்படையில் (காண்க: லூக் 8:1-3), மரியா பெரிய பாவியாக இருந்தவர் என முடிவுசெய்தனர் சிலர். ஆனால் நோய்களுக்குக் காரணம் தீய ஆவிகளே என்னும் நம்பிக்கை நிலவிய அக்காலத்தில் மரியாவை இயேசு ஒரு நோயிலிருந்து குணப்படுத்தியிருப்பார் என முடிவுசெய்தலே சரி. பெத்தானியாவில் இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலம் பூசிய மரியா கதையும் (யோவா 12:1-8), சீமோன் என்பவரில் இல்லத்தில் இயேசுவின் தலைமேல் எண்ணைய் பூசிய பெண் கதையும் (மாற் 14:3-9), அப்பெண் ''பாவியாக'' இருந்தார் என்ற குறிப்பும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரே கதையாக மாற்றம் பெற்றன. இவ்வாறு மகதலா மரியா பற்றிய கதை எழுந்தது.

ஆனால் மகதலா மரியாவின் உண்மை வரலாறு இயேசுவின் உயிர்த்தெழுதலோடு இணைந்து பிணைந்ததாகும். கிறிஸ்தவ சமய நம்பிக்கைக்கு மையமாக இருப்பது இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் உண்மையாகும். மகதலா மரியாதான் உயிர்த்தெழுந்த இயேசுவை முதல்முறையாகக் கண்டவர். அவரிடம் இயேசு ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார். அதாவது மரியா சென்று, இயேசுவின் சீடர்களைச் சந்தித்து, அவர் உயிர்பெற்றெழுந்த செய்தியை அறிவிக்க வேண்டும் (காண்க: யோவா 20:17-18). உண்மையிலேயே ''திருத்தூதர்களுக்குத் தூது அறிவிக்க அனுப்பப்பட்டவர்'' மரியா ஆனார். நான்கு நற்செய்தி நூல்களிலும் இச்செய்தி குறிக்கப்பட்டிருப்பதை நாம் கருதலாம் (காண்க: யோவா 20:1-18; மாற் 16:9-11; மத் 28:1-7; லூக் 24:1-12). இயேசு உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக நம்மிடையே தங்கியிருக்கிறார் என்னும் உண்மையை உலகெங்கும் பறைசாற்ற நாம் அழைக்கப்படுகிறோம். இவ்வாறு நாம் நற்செய்திக்குச் சான்று பகர வேண்டும். இயேசுவின் வழியாகக் கடவுள் நம்மிடையே உறைகிறார் எனவும், உயிர்பெற்றெழுந்த இயேசுவின் ஆவி நம்மை வழிநடத்துகிறார் எனவும் நாம் உறுதியாக நம்ப வேண்டும்; அந்த நம்பிக்கையைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும். இப்பொறுப்பை ஆற்றுவதில் மகதலா மரியா நமக்குச் சிறந்த முன் உதாரணம் ஆகிறார்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் உறைந்து எங்களை வழிநடத்துகின்ற இயேசுவின் ஆவியை நாங்கள் அனுபவித்து வாழ அருள்தாரும்.