யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






திருவருகைக்காலம் 3வது வாரம் வெள்ளிக்கிழமை
2016-12-16




முதல் வாசகம்

என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 56: 1-3,6-8

ஆண்டவர் கூறுவது: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். இவ்வாறு செய்யும் மனிதர் பேறுபெற்றவர்; ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக்கொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர். ஆண்டவரோடு தம்மை இணைத்துக்கொண்ட பிற இனத்தவர், `தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி' என்று சொல்லாதிருக்கட்டும்; அவ்வாறே அண்ணகனும், `நான் வெறும் பட்ட மரம்' என்று கூறாதிருக்கட்டும். ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப் பலிகளும் என் பீடத்தின்மேல் ஏற்றுக் கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய `இறைமன்றாட்டின் வீடு' என அழைக்கப்படும். சிதறிப்போன இஸ்ரயேல் மக்களை ஒருங்கே சேர்க்கும் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது: அவர்களுள் ஏற்கெனவே கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களோடு ஏனையோரையும் சேர்த்துக்கொள்வேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!
திருப்பாடல் 67: 1-2. 4. 6-7

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! 2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். பல்லவி

4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

6 நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். 7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே எழுந்தருளி வாரும், எம்மைச் சந்தித்துச் சமாதானம் தாரும்; புனிதம் நிறை உள்ளத்தோடு உம் திருமுன் மகிழ்வோமாக அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-36

அக்காலத்தில் இயேசு யூதர்களை நோக்கிக் கூறியது: “யோவானிடம் ஆள் அனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நமது சான்று எது ?

தனது பணி இறைவனின் பணிதான் என்பதற்கான சான்றுகளாக இயேசு முன்வைப்பவற்றை இன்று வாசிக்கிறோம். 1. திருமுழுக்கு யோவான். யோவான் “இவரே இறைவனின் செம்மறி” என்று அறிவித்தார். 2. தந்தை ஒப்படைத்த செயல்கள். எளியோருக்கு நற்செய்தி, நோயுற்றோருக்கு நலம், சிறைப்பட்டோருக்கு உரிமை வாழ்வு என்பவை இறைவனால் அனுப்பப்பட்டவரின் செயல்கள். இயேசு அவற்றைச் செய்தார். 3. வானகத் தந்தை. “இவர் என்பார்ந்த மகன். இவருக்கு செவிசாயுங்கள்” என்ற தந்தையின் குரலை பலர் கேட்டிருந்தனர். 4. மறைநூல். இயேசுவின் வாழ்வில் நடந்த பலவும் மறைநூலில் முன்குறித்தபடியே நிகழ்ந்திருந்தன.

யூத முறைப்படி ஒருவருக்கு இரண்டு சாட்சிகள் போதும். ஆனால், இயேசு தனது பணியின் உண்மைத் தன்மையை மெய்ப்பிக்க மறுக்க இயலாத வகையில் நான்கு சான்றுகளை வழங்குகிறார். நாம் இறைவனின் விருப்பப்படியே வாழ்கிறோம் என்பதற்கு என்ன சான்றுகள் இருக்கின்றன என்று இத்தவக்காலத்தில் ஆய்வு செய்வோம்.

மன்றாட்டு:

நிறைவின் நாயகனாம் இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். மறைநூலின்படியும், இறைத்தந்தையின் விருப்பப்படியும் நீர் வாழ்ந்தீர். பணி செய்தீர். உம்மைப் போல நாங்களும் இறைவார்த்தையின்படி வாழ, சாட்சிகளாய் மாற அருள்தாரும். உமக்கே புகழ், ஆமென்.