யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






திருவருகைக்காலம் 3வது வாரம் திங்கட்கிழமை
2016-12-12




முதல் வாசகம்

இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!'
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 24: 2-7,15-17

அந்நாள்களில் பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே, குலம் குலமாகப் பாளையம் இறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர்மேல் இறங்கியது. அவர் திருஉரையாகக் கூறியது: �பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின், பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி! யாக்கோபே! உன் கூடாரங்களும், இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை! அவை விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை; ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை; நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை. அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்; அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்; அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்; அவனது அரசு உயர்த்தப்படும்.'' பிலயாம் திருஉரையாகக் கூறியது: �பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதர் அளித்த அறிவைப் பெற்று பேராற்றல் உடையவரின் காட்சி கண்டு கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி! நான் அவரைக் காண்பேன்; ஆனால் இப்போதன்று; நான் அவரைப் பார்ப்பேன்; ஆனால் அண்மையிலன்று; யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
திருப்பாடல்25: 4-5. 6,7. 8-9

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்; 5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7bஉ உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். -பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 23-27

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, �எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, �நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன். யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?'' என்று அவர் கேட்டார். அவர்கள், � `விண்ணகத்திலிருந்து வந்தது' என்போமானால், `பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை' எனக் கேட்பார். `மனிதரிடமிருந்து' என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்சவேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்'' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். எனவே அவர்கள் இயேசுவிடம், �எங்களுக்குத் தெரியாது'' என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம், �எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

மனந் தளராமல் செபிப்போம் !

இடைவிடாது, மனந்தளராது செபிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ஆண்டவர் இயேசு சொன்ன அருமையான உவமையை இன்று வாசிக்கிறோம். மானிட உறவுகளில்கூட ஒருவரின் தளரா முயற்சிக்குப் பலன் கிடைக்குமென்றால், இறைவனோடு நாம் கொள்கின்ற உறவில் நிச்சயமாகப் பலன் கிடைக்கும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். எனவே, மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் வேண்ட முயற்சி எடுப்போம். இடைவிடாமல் செபிக்க என்ன தடைகள்? இன்றைய உவமையின் அடிப்படையில் பார்த்தால் நம்பிக்கைக் குறைவும், மனத்தளர்ச்சியும். அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆர்வமின்மையும், பழக்கக் குறைவும். எனவே, இந்த நான்கு தடைகளையும் தகர்க்க நாம் முயற்சி செய்வோம். இந்த நான்கு தடைகளையும் உடைக்க நாம் பயன்படுத்தும் எளிய உத்தி இறைபுகழ்ச்சி செபம். எப்போதும் இறைவனைப் புகழ்வதும், என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவதும் இந்த நான்கு தடைகளையும் நிச்சயமாகத் தகர்த்து விடும் என்பது அனுபவம் தருகின்ற பாடம்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன். அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலி;க்கும் என்கிறார் திருப்பாடலின் ஆசிரியர் (34:1). ஆம், எந்நேரமும் இறைவனுடைய புகழ்ச்சி நம் நாவில் ஒலித்துக்கொண்டே இருந்தால், அது நமக்கு ஆர்வத்தைத் தரும். பழக்கமாக உருவாகும். அத்துடன், இறைபுகழ்ச்சி நமது நம்பிக்கையின்மையைக் குறைத்து, நாம் கேட்டது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் இறைவனுக்கு நன்றி கூறும் மனநிலையை நம்மில் உருவாக்குகிறது. எனவே, காலையிலும், இரவிலும், எந்நேரமும் இறைவனுக்குப் புகழ் பாடுவோம். இடைவிடாது செபிப்பதைப் பழக்கமாக்குவோம்.

மன்றாட்டு:

புகழ்ச்சிக்குரியவரான ஆண்டவரே, எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும், நொடியும் உமது பேரன்பை, இரக்கத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். அதற்காக நன்றி கூறுகிறோம். உம்மைப் புகழப் புகழ, உமது மாட்சிமை உயர்வதில்லை. மாறாக, எங்கள் மீட்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றன. எனவே, எந்நேரமும் உம்மைப் போற்றுகின்ற அருளைத் தாரும். ஆமென்.