யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






திருவருகைக்காலம் 1வது வாரம் வெள்ளிக்கிழமை
2016-12-02




முதல் வாசகம்

ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்;
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24

இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம்மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ? அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர். கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர். அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர். ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப்பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை. அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப் பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர். தவறிழைக்கும் சிந்தைகொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
திருப்பாடல் 27: 1. 4. 13-14

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? -பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித்தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காணவேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். -பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, நம் ஆண்டவர் வல்லமையுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளி தருவார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31

அக்காலத்தில் இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், �தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்'' என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, �நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், �ஆம், ஐயா'' என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, �நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்'' என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி, �யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், 'தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்' என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர்'' (மத்தேயு 9:27)

இயேசு மக்களுக்குக் கடவுள் பற்றியும் கடவுளின் ஆட்சி பற்றியும் போதித்தார். ஆனால் அவருடைய போதனை வெறும் சொல்லளவில் நிற்கவில்லை. அவர் தம் செயல்கள் வழியாகத் தம் போதனையை எண்பித்தார். கடவுளின் அன்பு பற்றி அறிவித்த இயேசு அந்த அன்பு மக்களின் துன்பத்தைப் போக்குவதைச் செயல்முறையில் காண்பித்தார். பார்வையற்ற இரு மனிதர் இயேசுவை அணுகி, ''தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்'' என்று உரத்த குரலில் கத்திக்கொண்டே செல்கின்றார்கள். அவர்கள் இயேசுவைத் ''தாவீதின் மகன்'' என அழைப்பது கருதத் தக்கது. தாவீது மன்னர் யூத மக்கள் வரலாற்றில் தலைசிறந்த அரசராக விளங்கியவர். அவர் வழித்தோன்றலாக மெசியா வருவார் என்னும் செய்தி யூத மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, தாவீதின் மகன் என்பதும் மெசியா என்பதும் ஒரே பொருளைக் கொடுப்பனவாக அமைந்தன. இயேசுவை மெசியா என அடையாளம் கண்ட அந்த இருமனிதரும் உண்மையிலேயே புறப் பார்வையற்றவர்களாக இருந்தாலும் அகப்பார்வை கொண்டிருந்தார்கள் என்பதை மத்தேயு காட்டுகின்றார்.

இவ்வாறு இயேசுவை மெசியா என அழைத்த அந்த இரு மனிதர்களும் இயேசுவிடமிருந்து எதிர்பார்த்தது என்ன? தங்களுக்குப் பார்வை கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை இயேசுவால் அளிக்க முடியும் என அவர்கள் உண்மையாகவே நம்ப வேண்டும் என்பதுதான் இயேசுவின் கோரிக்கை. அந்த மனிதர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. இயேசு அவர்களின் கண்களைத் திறக்கின்றார். பார்வை பெற்ற மனிதர்கள் ஒருவிதத்தில் புது வாழ்வு பெற்றார்கள் எனலாம். அவர்களால் தங்கள் மகிழ்ச்சியை அடக்கிக் கொள்ள இயலவில்லை. எனவே ''நாடெங்கும் போய் இயேசுவைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்'' (காண்க: மத் 9:31). நாமும் இயேசுவை அணுகிச் சென்று நம்பிக்கையோடு வேண்டினால் நம் கண்கள் திறக்கப்படும். நம்மைச் சூழ்ந்திருக்கின்ற இருள் அகன்று போகும். பார்வையற்ற மனிதர்கள் புறக்கண்பார்வை பெறுவதற்கு முன்னரே அகக்கண் திறக்கப்பட்டோராக இயேசுவை அணுகியது போல நாமும் உள்ளொளி பெற்று இயேசுவிடம் சென்றால் அவர் நமக்கு வாக்களிக்கின்ற நன்மைகளைக் ''கண்டுகொள்வோம்''. புதுப்பார்வை பெற்ற மனிதர்களாக நாம் மாறுவோம். அப்போது இயேசு பற்றிய நற்செய்தியை நாமும் உலகெங்கும் அறிவிக்கப் புறப்படுவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் அகக்கண்களைத் திறந்து நம்பிக்கையில் எங்களை உறுதிப்படுத்துகின்ற உம்மைக் ''கண்டுகொள்ள'' எங்களுக்கு அருள்தாரும்.