யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)






திருவருகைக்காலம் 1வது வாரம் திங்கட்கிழமை
2016-11-28




முதல் வாசகம்

நாட்டில் விளையும் நற்கனிகள் இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 4: 2-6

ஆண்டவர் வரும் நாளில் அவரால் துளிர்க்கும் தளிர், அழகும் மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்; நாட்டில் விளையும் நற்கனிவகைகள், இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும். அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும், எருசலேமில் தப்பி வாழ்வோரும் `புனிதர்' எனப் பெயர் பெறுவர்; உயிர் பிழைப்பதற்கென்று எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும் `புனிதர்' எனப்படுவர். என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் தூய்மைப்படுத்துவார்; நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத் தணலையொத்த அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி அதனைத் தூய்மைப்படுத்துவார். சீயோன் மலையின் முழுப் பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒரு விதான மண்டபம் இருக்கும். அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
திருப்பாடல்122: 1-2. 4-5. 6-7. 8-9

`ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். -பல்லவி 4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். -பல்லவி 6 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்; உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! 7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!" -பல்லவி 8 "உன்னுள் சமாதானம் நிலவுவதாக!'' என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். 9 நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும். எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11

அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். �ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக்கிடக்கிறான்'' என்றார். இயேசு அவரிடம், �நான் வந்து அவனைக் குணமாக்குவேன்'' என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, �ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் `செல்க' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் `வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்'' என்றார். இதைக் கேட்டு, இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, �உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, 'ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்துவைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் பையன் நலமடைவான்' என்றார்'' (மத்தேயு 8:8)

திருப்பலிக் கொண்டாட்டத்தின்போது நற்கருணை உட்கொள்வதற்கு முன், ''ஆண்டவரே, தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருளி வர நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் என் ஆன்மா குணமடையும்'' என நாம் கூறுகின்ற சொற்கள் நற்செய்தியில் வருகின்ற இயேசுவின் ஒரு புதுமையை அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கப்பர்நாகுமுக்குச் செல்கிறார். அப்போது பிற இனத்தவராகிய உரோமையரைச் சார்ந்த ஓர் அதிகாரி அவரை அணுகுகிறார். பாலஸ்தீனப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த உரோமைக் காவல் படையினர் நூறு பேருக்கு அவர் தலைவர். எனவே அவருடைய பதவிப் பெயர் ''நூற்றுவர் தலைவர்'' என்பதாகும். இந்த அதிகாரி தம் பணியாள் (அல்லது அவருடைய ''குழந்தை'') நோய்வாய்ப்பட்டிருப்பதாக இயேசுவிடம் கூறுகிறார். இயேசு நினைத்தால் பணியாளுக்கு நலம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை அந்த அதிகாரியிடம் இருந்தது. பிற இனத்தாரோடு யூதர் பழகுவதில்லை. ஆனால் இயேசுவோ அந்த அன்னியராகிய அந்த உரோமை அதிகாரியைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, அவருடைய வீட்டுக்குச் சென்று பணியாளரைக் குணப்படுத்தப் போவதாக இயேசு கூறுகிறார். அப்போது நூற்றுவர் தலைவர் இயேசுவைப் பார்த்து, ''ஐயா, நான் தகுதியற்ற மனிதன்'' என்று கூறி, இயேசு ஒரு வார்த்தை சொன்னால் போதும், தன் பணியாள் குணமாவார் என்கிறார்.

இச்சொற்களைக் கேட்ட இயேசு அந்த அதிகாரியின் ஆழ்ந்த நம்பிக்கையைப் போற்றுகிறார். இஸ்ரயேலரிடம்கூட அத்தகைய ஆழ்ந்த நம்பிக்கை இல்லையே என இயேசு வருத்தத்தோடு கூறுவது நம் காதுகளில் விழுகிறது (காண்க: மத் 8:10). பிற இனத்தாருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டு, அவர்களும் இறையாட்சியில் பங்குபெற வருவர் என்பதை இயேசு இச்செயல்வழியாகக் காட்டுகிறார் (காண்க: எசா 2:2-4; மீக் 4:1-4; செக் 8:20-23). எனவே உலகின் எத்திசையிலுமிருந்து மக்கள் வந்து இறையாட்சியில் பங்கேற்பர். இதை இயேசு ''விருந்து'' என்னும் உருவகம் வழியாக எடுத்துக் கூறுகிறார் (மத் 8:11). வழக்கமாக இயேசு நோயாளரை நேரடியாகச் சந்தித்து அவர்களைக் குணமாக்குவார். இங்கோ அவர் நோயாளரின் அருகே செல்லாமலே, தொலையிலிருந்துகொண்டே குணமளிக்கிறார். இதில் இயேசுவின் ''அதிகாரம்'' (மத் 8:9) வெளிப்படுகிறது. ஒருவேளை பிற இனத்தாராகிய நூற்றுவர் தலைவரின் வீட்டுக்குள் நுழைந்தால் தீட்டு ஏற்பட்டுவிடலாம் என்பதற்காக இயேசு அங்குச் செல்லவில்லையோ என சில அறிஞர் கருதுகின்றனர். கடவுளின் முன்னிலையில் நாம் தகுதியற்றவர்களாகவே உள்ளோம். ஆனால் அவரே முன்வந்து, இயேசு வழியாக நம்மைத் தம்மோடு ஒன்றுபடுத்துகிறார். இந்த உறவு என்னும் அருள்கொடையை நாம் நன்றியோடு ஏற்று எந்நாளும் இறைபுகழ் பாடிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, தகுதியற்ற எங்களை உம் பிள்ளைகளாக நீர் ஏற்றதற்கு நன்றி.