யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 34வது வாரம் திங்கட்கிழமை
2016-11-21

தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்




முதல் வாசகம்

மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 2: 10-13

மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன் என்கிறார் ஆண்டவர். அந்நாளில், வேற்றினத்தார் பலர் ஆண்டவரிடம் வந்து சேர்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள். அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்; நீங்களும், படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள். ஆண்டவர் யூதாவைப் புனித நாட்டில் தமக்குரிய பங்காக உரிமைச் சொத்தாக்கிக் கொள்வார். எருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார். மானிடரே, நீங்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் அமைதியாய் இருங்கள்; ஏனெனில் அவர்தம் புனித இடத்திலிருந்து எழுந்தருளினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என்றும் வாழும் தந்தையின் மகனைச் சுமந்த மரியே, நீர் பேறுபெற்றவர்
லூக் 1: 47. 48-49. 50-51. 52-53. 54-55

ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. பல்லவி 48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். 49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். பல்லவி 50-51 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். பல்லவி 52-53 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். பல்லவி 54-55 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50

அக்காலத்தில் மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, ``அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்'' என்றார். அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, ``என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?'' என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ``என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'இக்கைம்பெண்ணோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்' என்றார்'' (லூக்கா 21:4)

இயேசு வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தால் ஓரம் தள்ளப்பட்ட மக்களுள் கைம்பெண்களும் உண்டு. கணவனே வீட்டுக்குத் தலைவன் என்னும் கருத்து நிலவிய அக்காலத்தில் பெண்கள் கணவனுக்கும் வீட்டிலுள்ள பிற ஆண்களுக்கும் கட்டுப்பட்டே நடக்கவேண்டியிருந்தது. நற்செய்தியில் வருகின்ற கைம்பெண் இவ்வாறு சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட ஒருவராகவே இருந்தார். ஆனால் அவர் கடவுளின் இல்லமாகிய எருசலேம் கோவிலுக்குச் செல்கிறார். அங்கே காணிக்கை செலுத்துகிறார். அவர் அளித்த காணிக்கை மிகச் சிறியதுதான். ஆனால் அவருடைய தாராள உள்ளத்திற்கு எல்லையே இல்லை. தன்னிடமிருந்து எல்லாவற்றையுமே அவர் கடவுளுக்கென்று கொடுத்துவிட்டார். கோவில் நிர்வாகத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தலைமைக் குரு, பிற குருகுலத்தார் எல்லாருமே பேராசை பிடித்தவர்கள் என நாம் கூற இயலாது. ஆனால் அவர்களில் சிலராவது ஏழை மக்களைப் பிழிந்து தங்களுக்குச் செல்வம் தேடிக்கொண்டார்கள் என அறிகிறோம் (காண்க: லூக் 20:47).

இன்றைய சமுதாயத்திலும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் பல்லாயிரம் பேர் உண்டு. அவர்கள் சமுதாயத்தில்ல நிலவுகின்ற அநீதிகளின் காரணமாகப் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றார்கள். ஆனால் சமுதாயத்தில் நிலவுகின்ற சுய நலத்தின் காரணமாக ஒடுக்கப்படுகின்ற மக்கள் கடவுள் பெயராலும் அநீதிகளுக்கு உள்ளாக்கப்படுவது பெரும் கொடுமையே. ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள், அன்னியர் போன்றோரை வெறுத்து ஒதுக்காமல் அவர்கள் மட்டில் தனிக் கரிசனை காட்ட வேண்டும் என்பது பழைய ஏற்பாட்டுச் சட்டம் (காண்க: விப 22:22; இச 24:18). ஆனால் இயேசுவின் காலத்தில் பலர் இச்சட்டத்தை மறந்துவிட்டிருந்தார்கள். இயேசு கோவிலில் காணிக்கை போட்ட கைம்பெண்ணின் தாராள குணத்தைப் போற்றினார். ஏனென்றால் அக்கைம்பெண் ''தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' (லூக் 21:4). கடவுள் நம்மீது இவ்வாறே நடந்துகொள்கின்றார். அவர் தம் அன்பை நமக்கு அளந்து கொடுப்பதில்லை. அவருடைய அன்பு எல்லையற்றது; எந்தவொரு மனித அன்பையும் விட ஆயிரம் மடங்கு மேலானது. கடவுளின் எல்லையற்ற இரக்கமும் அன்பும் நம் வாழ்விலும் துலங்க வேண்டும். நம் உள்ளத்தின் நேர்மையைக் காண்கின்ற கடவுள் நாம் தாராள உள்ளத்தோடு அவரையும் அவர் மதிக்கின்ற மானிட உலகையும் அன்புசெய்திட நம்மை அழைக்கின்றார்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்புப் பெருக்கு எங்கள் வாழ்வில் ஆறாய் வழிந்தோடுவதை நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.