யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2016-11-13

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 4: 1-2,திருப்பாடல்98: 5-6. 7-8. 9, திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-12, லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-19)




நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்: ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்: ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்: ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்: ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவின் அன்புக்கும் அரவணைப்புக்கும் உரிய அன்பு மக்களே தமது நிறையன்பால் நம்மை வழிநடாத்திக்கொண்டிருக்கும் நம் விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் முப்பத்திமூன்றாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம். ,

ஆண்டவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார் என்றும்: அவர் பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார் என்றும்: மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார் என்றும் இறைவார்த்தைகள் வழியாக நமக்குக் கூறப்படுவதோடு, நம்மைத் தலைநிமிர்ந்து நிற்கும்படியும் ஏனெனில் நமது மீட்பு நெருங்கி வருகின்றது என்னும் எச்சரிக்கையும் விடுக்கப்படுகின்றது. நாம் வாழ்வு பெற ஆண்டவர் நமக்கு வழங்கும் இந்த நல்ல செய்திக்காகவும், தீமையிலிருந்து நம்மைக் காக்கக் கொண்டிருக்கும் கரிசனைக்காகவும் இவ்வேளையில் அவருக்கு நன்றி சொல்லுவோம். ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுவோம். ஆண்டவரைப் புகழ்தேத்துவோம், அவரை வாழ்த்திப் பாடுவோம்.

'இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர். வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ,கிளையையோ விட்டுவைக்காது. முற்றிலும் சுட்டெரித்து விடும்" என்னும் இறைவார்த்தைகள் மிகவும் ஆணித்தரமான ஒரு செய்தியை நம்முன்னே விட்டுச் செல்லுகின்றது. இறைமக்களாகிய நாம், உண்மை, நீதி, அன்பு, உறவு, பிறர் நலம் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக, தற்பெருமையை விடுத்து இறை நம்பிக்கையோடு வாழ அருள் வரம் கேட்டுத் தொடரும் பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 4: 1-2

இதோ! சூளையைப்போல் எரியும் "அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்: வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது: முற்றிலும் சுட்டெரித்து விடும், " என்கிறார் படைகளின் ஆண்டவர். "ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும். நீங்களும் தொழுவத்திலிருந்து வெளிவரும் கொழுத்த கன்றுகளைப்போல் துள்ளி ஓடுவீhகள். நான் செயலாற்றும் அந்நாளில் கொடியோரை நீங்கள் நசுக்கி விடுவீர்கள.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
திருப்பாடல்98: 5-6. 7-8. 9

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். பல்லவி 7 கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 8 ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். பல்லவி 9 ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். பல்லவி

இரண்டாம் வாசகம்

உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது.
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-12

எங்களைப்போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை.எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்.எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம். "உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது " என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம்.உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-19

கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.இயேசு, "இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்: அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் " என்றார்.அவர்கள் இயேசுவிடம், "போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? " என்று கேட்டார்கள்.அதற்கு அவர், "நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்: ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, "நானே அவர் " என்றும், "காலம் நெருங்கி வந்துவிட்டது " என்றும் கூறுவார்கள்: அவர்கள் பின்னே போகாதீர்கள்.ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்: ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது " என்றார். மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: "நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்: அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்: தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்: என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்: உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்: உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நேர்மையுடன் ஆட்சி செய்யும்; தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள்,குருக்கள், துறவிகள், நல்லாயனுக்குரிய ஞானத்தோடும், விவேகத்தோடும் மக்களை வழிநடாத்தவும், இக்கட்டான வேளைகளில் மனந்தளராது பணியாற்றவும் வேண்டிய அருள் வரங்களை அவர்கள் மேல் பொழிந்து அவர்களை வழிநடாத்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம் வேண்டுதலை உற்றுக் கேட்கும் தந்தையே இறைவா!

எம் பங்கை வழிநடத்தி இறந்த பங்கு குருக்களுக்காவும், பங்குமக்களுக்காகவும் மன்றாடுகிறோம். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்பதிற்கினங்க உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து இறந்த ஆன்மாக்கள் அனைத்தும் தங்களுடைய பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்களை நிறைவாக ஆசிர்வதித்து உம் வானக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பின் இறைவா,

யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாழ்வு தருபவரே இறைவா,

இல்லாமை, இயலாமை, முதுமை, நோய் போன்றவற்றால் துன்பத்தில் தவிக்கும் மக்கள் அனைவரும், உமது அருளால் புதுவாழ்வைக் கண்டடைய உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்புத் தந்தையே இறைவா!

எம் இளைஞர்களுக்காக உம்மை மன்றாடுகின்றோம். இவர்கள் கடவுளின் பிள்ளைகளாய் நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதிபெறவும்,ஞானத்தோடு அனைத்தையும் செய்து முடிக்கவும், தீமைகளிலிருந்து விலகி உம்முடைய சாட்சிகளாய் அவர்கள் வாழ அவாகளை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன்.

வியத்தகு செயல்களை வான்வெளியிலும், இயற்கையிலும் காணும நாங்கள், உம்மை வியப்புக்குரியவர் எனப்போற்றுகிறோம். அருங்குறிகளைத் தேடி ஓடாமல், ஏமாறாதபடி விழிப்பாயிருக்கும் அருளை எங்களுக்குத் தந்தருளும். உமது தூய ஆவியால் எங்களை நிரப்பவும், இவ் உலகில் அடிக்கடி ஏற்படும் அழிவுகள், அச்சமூட்டும் நிகழ்வகளைக்கண்டு நிலைகுலைந்து போகாது உமது வார்த்தையில் நம்பிக்கை கொண்டு வாழ்வதற்கு வேண்டிய ஆற்றலை எமக்குத் தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

ஏமாறாதீர்கள் !

ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இயேசுவின் காலத்திலும் நானே மெசியா, நானே விடுதலை தருபவர், காலம் நெருங்கிவிட்டது என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றியவர்கள் பலர் இருந்தனர். இயேசு அவர்களைப் பற்றி எச்சரித்தார். அவர்கள் பின்னே போகாதீர்கள். ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கிறார்.

ஆனால், அன்றிலிருந்து இன்று வரை ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று இயேசுவின் பெயரால், அற்புதங்கள். அருங்குறிகள் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, மக்களை ஏமாற்றும் கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஏமாறும் மக்களின் கூட்டமும் பெருகத்தான் செய்கிறது. ஏன் இந்த நிலை? அருங்குறிகளிலும், அடையாளங்களிலும் மக்களுக்கு இருக்கும் அதிகபட்ச ஆர்வம்தான் இந்த ஏமாற்றலுக்குக் காரணம். அருங்குறிகள் தேடாமல், இறைவார்த்தையின்படி வாழும் ஆர்வத்தை ஏன் நாம் மக்களுக்கு வழங்கக்கூடாது. அற்புதங்களை நாடாமல், நேர்மையாக, மாதிரியாக வாழ்கின்ற முறையை விவிலியத்திலிருந்து கற்றுக்கொள்வோம். யாரும் நம்மை ஏமாற்றாதவாறு விழிப்புடன் வாழ்வோம்.

மன்றாட்டு:

நிறைவாழ்வு தரும் ஊற்றான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். வியத்தகு செயல்களை வான்வெளியிலும், இயற்கையிலும் காணும நான், உம்மை வியப்புக்குரியவர் எனப்போற்றுகிறேன். அருங்குறிகளைத் தேடி ஓடாமல், ஏமாறாதபடி விழிப்பாயிருக்கும் அருளை எனக்குத் தந்தருளும். உமது தூய ஆவியால் என்னை நிரப்பும்.ஆமென்.