யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் வியாழக்கிழமை
2016-11-03




முதல் வாசகம்

எனக்கு ஆதாயமான அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 3-8

சகோதரர் சகோதரிகளே, உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ளாமல், கடவுளின் ஆவிக்கேற்ப வழிபட்டுக் கிறிஸ்து இயேசுவைப் பெருமைப்படுத்தும் நாமே உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும் என யாராவது நினைத்தால், அவரை விட மிகுதியாக நானும் நம்பிக்கை கொள்ள முடியும். நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்; இஸ்ரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்; எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன். திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்தின் அடிப்படையிலான நீதிநெறியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாய் இருந்தேன். ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக!
திருப்பாடல் 105: 2-3. 4-5. 6-7

அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! பல்லவி

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10

அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், ``இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச் செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார். அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'பெண் ஒருவரிடம் இருந்த பத்து திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணைய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள். ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பார்' என்றார்'' (லூக்கா 15:8-9)

காணாமற்போன ஆடு பற்றி உவமையும் (லூக் 15:4-7) காணாமற்போன திராக்மா உவமையும் (லூக் 15:8-10) பல வகைகளில் மிகவும் ஒத்திருக்கின்றன. இரண்டுமே ''மகிழ்ச்சி'' பற்றிய உவமைகள். காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்த ஆயர் ''நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்' என்றார்'' (லூக் 15:6). அதுபோலவே, காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்த பெண்ணும் தம் ''தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்' என்றார்'' (லூக் 15:9). அக்கால பாலஸ்தீன நாட்டில் சாதாரண வீடுகளின் உள்ளே அவ்வளவு வெளிச்சம் இருப்பதில்லை. எனவேதான் தன்னிடமிருந்த திராக்மா (ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம்) தவறிப் போனதும் அது வீட்டுக்குள்ளேதான் எங்கேயோ விழுந்திருக்க வேண்டும் என அப்பெண் சரியாக முடிவுசெய்கிறார். அதைத் தொடர்ந்து அந்த நாணயத்தை எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும் என அவர் உறுதியாயிருந்ததால் முதலில் ''எண்ணெய் விளக்கை ஏற்றுகிறார்''; பின் வீட்டைப் பெருக்குகிறார்; கவனமாக அந்த நாணயத்தைத் தேடுகிறார் (லூக் 15:8). அவருடைய முயற்சி வீண்போகவில்லை. தான் தொலைத்துவிட்ட நாணயத்தை அவர் மீண்டும் கண்டுபிடிக்கிறார்.

தவறிப் போன பொருள் கிடைத்துவிட்டால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்பு. ஆனால் இப்பெண் அந்த மகிழ்ச்சியைத் தன் உள்ளத்தில் மட்டுமே வைத்துக்கொண்டிருக்கவில்லை. தான் அடைந்த மகிழ்ச்சியை அவர் பிறரோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். எனவே, தன் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அணுகிச் சென்று அவர்களிடம் நடந்ததையெல்லாம் எடுத்துச் சொல்கிறார். தான் அடைந்த மகிழ்ச்சியில் அவர்களும் பங்கேற்பதைக் கண்டு அவருடைய மகிழ்ச்சி நிச்சயமாக பன்மடங்காகப் பெருகியிருக்கும். இயேசு இந்த உவமையை ஏன் கூறினார்? பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசு பாவிகளை வரவேற்பது பற்றியும் அவர்களோடு உணவருந்துவது பற்றியும் ''முணுமுணுத்தனர்'' (லூக் 15:2). அந்த முணுமுணுப்பு சரியல்ல என்று காட்டவே இயேசு இந்த உவமையைக் கூறினார். கடவுள் தம்மை விட்டுப் பிரிந்துசென்ற பாவிகளைத் தேடிச் செல்கிறார். அவர்களைக் கண்டுபிடித்துத் தம்மோடு சேர்த்துக்கொள்ளும் வரை அவர் ஓய்ந்திருப்பதில்லை. உவமையில் வருகின்ற பெண் கடவுளுக்கு உருவகம். தவறிப்போன திராக்மா கடவுளை விட்டுப் பிரிந்துவிட்ட பாவிக்கு உருவகம். பாவிகள் கடவுளிடம் திரும்பும்போது கடவுள் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றார். இந்த உண்மையை இயேசு அழகான ஓர் உவமை வழியாக நமக்கு உணர்த்துகிறார். நம்மைத் தேடி வருகின்ற கடவுள் நாம் அவரை விட்டு ஒருநாளும் பிரிந்துவிடலாகாது என்பதில் கருத்தாயிருக்கின்றார். அவருடைய எல்லையற்ற அன்பை நாம் உணர்ந்து அவரோடு எந்நாளும் அன்புறவில் இணைந்திருந்தால் அவர் நிறைவான மகிழ்ச்சி கொள்வார். அந்த மகிழ்ச்சியில் நமக்கும் பங்குண்டு.

மன்றாட்டு:

இறைவா, உம்மைவிட்டுப் பிரியா வரம் எங்களுக்கு அளித்தருளும்.