யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2016-10-30

(இன்றைய வாசகங்கள்: சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 11: 22 - 12: 2 ,திருப்பாடல்145: 1-2. 8-9. 10-11. 13,திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 11 - 2: 2, லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 1-10)




இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார். இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார். இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார். இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்.


திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவில் ஒன்றாக இணைந்து ஆண்டின் பொதுக்காலம் 31ஆம் வார வழிபாட்டில் பங்கேற்கும் என் அன்பின் சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்தைக் கூறிக்கொள்கிறேன்.

இழந்த போனதைத் தேடி மீட்கும் இறைமகன் இயேசுவின் பிரசன்னத்தில் நன்றி சொல்லவும், அருள் பெறவும் ஒன்று கூடியுள்ளோம். தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார், என்னும் இறையன்பின் ஆழம் நமக்கு வெளிப்படத்தப்படுகின்றது. ஆகையால் நாம் அனைவரும் மனமாற்றம் பெற்று இறைன்புக்குச் சாட்கிகளாய வாழுவோம். இன்று இவ்வுலகில் செல்வந்தர்கள் மட்டுமல்ல, சாமானியர்கள்கூட இறைவனை நாடாது மனம் போன போக்கில் வாழ்ந்து வருகின்றனர். "தாம் பாவம் புரிகின்றோம்; அடுத்தவரை துன்புறுத்தி, ஏமாற்றி, தாம் மட்டும் மகிழ்ச்சியோடு வாழ்கின்றோம்' என்ற குற்ற உணர்வின்றி வாழ்கின்றனர். அவ்வாறு இல்லாமல் சக்கேயுவைப் போல மனம் மாறிய சிறுபிள்ளைகளாவோம்! கடவுளிடம் நம்பிக்கை கொள்வோம். இறை இயேசுவின் மீட்பை நாமும் பெறுவோம். வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார் மீதும் இரங்குகின்றீர்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 11: 22 - 12: 2

ஆண்டவரே, தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் தூசி போலவும் நிலத்தின்மீது விழும் காலைப் பனியின் ஒரு சிறு துளி போலவும் உலகம் முழுவதும் உம் கண்முன் உள்ளது. நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார் மீதும் இரங்குகின்றீர்; மனிதர்கள் தங்களுடைய பாவங்களை விட்டு மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த்தும் பாராமல் இருக்கின்றீர். படைப்புகள் அனைத்தின் மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்! உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்? அல்லது, உம்மால் உண்டாக்கப்படாதிருந்தால் எதுதான் காப்பாற்றப்படக்கூடும்? ஆண்டவரே, உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்; ஏனெனில் அவை யாவும் உம்முடையன. உம்முடைய அழியா ஆவி எல்லாவற்றிலும் உள்ளது. ஆகையால் தவறு செய்பவர்களைச் சிறிதுசிறிதாய்த் திருத்துகின்றீர்; அவர்கள் எவற்றால் பாவம் செய்கிறார்களோ அவற்றை நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்; ஆண்டவரே, அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும் உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் கடவுளே, என் அரசே! உம் பெயரை என்றும் போற்றுவேன்.
திருப்பாடல்145: 1-2. 8-9. 10-11. 13

என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். 2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

13உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். பல்லவி

இரண்டாம் வாசகம்

நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக!
திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 11 - 2: 2

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் வேண்டுகிறோம். நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவராக்குவாராக! உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக! இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக! சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப் பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 1-10

அக்காலத்தில் இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ``சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்'' என்றார். அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். இதைக் கண்ட யாவரும், ``பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்'' என்று முணுமுணுத்தனர். சக்கேயு எழுந்து நின்று, ``ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'' என்று அவரிடம் கூறினார். இயேசு அவரை நோக்கி, ``இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்'' என்று சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. கைம்மாறு அளிப்பவரே இறைவா,

உமது பணிக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது முன் தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ்ந்து, மக்களுக்கு பெருந்தன்மையுடன் தொண்டாற்றும் வரமருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. தாமாகவே முன் வந்து சக்கேயுவை அழைத்து, அவரோடு விருந்துண்டு, அவரது வாழ்வை மாற்றிய அன்பு இயேசுவே,

உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் தன்முனைப்பு உள்ளவர்களாகச் செயல்பட உமது தூய ஆவியை எங்களுக்கு நிறைவாகத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் உலகின் மேல் அன்பு கூர்ந்த தந்தையே!

நாங்கள் ஒவ்வொருவரும் மனமாற்றம் பெற்று, நீர் எமக்குக்காட்டும் அன்பையும், பரிவையும் மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்ந்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

உம்முடைய இரக்கத்தையும் அன்பையும் நாம் ஒவ்வொருவரும் ஆழமாக உணர்ந்து கொண்டு எல்லாச் சூழ்நிலையிலும் உமக்கு நன்றி கூறி வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்புத் தந்தையே இறைவா!

எம் இளைஞர்களுக்காக உம்மை மன்றாடுகின்றோம். இவர்கள் கடவுளின் பிள்ளைகளாய் நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதிபெறவும்,ஞானத்தோடு அனைத்தையும் செய்து முடிக்கவும், தீமைகளிலிருந்து விலகி உம்முடைய சாட்சிகளாய் அவர்கள் வாழ அவாகளை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு...'சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்றார்'' (லூக்கா 19:5)

இயேசு எருசலேமை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார். அப்போது மக்கள் திரள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டிருக்கவே, சக்கேயு என்னும் குட்டையான மனிதருக்கு இயேசுவைப் பார்க்க முடியவில்லை. ஒரு மரத்தில் ஏறி உயரமான இடத்திற்குப் போய்விட்டால் இயேசுவைப் பார்ப்பது எளிதாக இருக்கும் என நினைக்கிறார் சக்கேயு. உடனேயே, யாதொரு தயக்கமுமின்றி, மக்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று கூடக் கவலைப்படாமல், சக்கேயு விரைந்து ஓடிப்போய் ஒரு காட்டு அத்திமரத்தில் ஏறிக்கொள்கிறார். இதையெல்லாம் இயேசு பார்த்தாரோ இல்லையோ, மரத்தில் ஏறிய குள்ள மனிதர் தம்மைப் பார்க்க இவ்வளவு ஆவலோடு இருக்கிறாரே என்று இயேசு வியப்புறுகிறார். சக்கேயுவைப் பார்த்து, ''சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்'' என்று கூறுகிறார் இயேசு. இதைக் கேட்ட சக்கேயுவுக்குப் பெரிய ஆச்சரியம். இவ்வளவு பெரிய கூட்டத்தின் நடுவிலேயும் இயேசு தன்னைக் கண்டுகொண்டாரே என்று சக்கேயு நினைக்கிறார். ஆனால், இயேசு ''இன்று உம் வீட்டில் நான் தங்க வேண்டும்'' என்று கூறியதும் சக்கேயுவுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. இத்துணை பெரிய போதகர் பாவியாகிய தன்னுடைய இல்லத்திற்கு வருவதற்கு விருப்பம் தெரிவிக்கிறாரோ என்ற வியப்பு ஒரு பக்கம், மகிழ்ச்சி மறு பக்கம் என்று சக்கேயு திணறிப்போகின்றார்.

சக்கேயுவின் வாழ்வு இயேசுவின் வருகையால் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது. இயேசுவைத் தன் வீட்டில் வரவேற்ற சக்கேயு வெறும் விருந்து மட்டும் கொடுக்கவில்லை, மாறாகத் தன்னையே கடவுளின் கைகளில் ஒப்படைக்கிறார். தன்னுடைய வாழ்க்கையைத் திருப்பிப் பார்க்கிறார். தான் செய்த தவறுகளை ஏற்கிறார். வரிதண்டும் துறையில் பெரிய பொறுப்பு வகித்த சக்கேயு மக்களிடமிருந்து அநியாயமாகக் கொள்ளையடித்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட முன்வருகிறார். ஏழைகளுக்கு தன் செல்வத்தில் பெரும்பகுதியைச் செலவழிக்கத் தயாராகிறார். இயேசுவைச் சந்தித்த சக்கேயு பழைய நிலையிலிருந்து புதிய நிலைக்கு வருகின்ற புதிய மனிதராக மாறிவிடுகிறார். இதுவே நம் வாழ்விலும் நிகழ வேண்டும். இயேசுவை நாம் சந்திக்கின்ற தருணங்கள் ஏராளம் உண்டு. நற்கருணை விருந்தில் பங்கேற்பது இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்பதுதான். பிற மனிதரிடத்தில் நாம் இயேசுவைக் காண்கிறோம். நம் உள்ளத்தில் அவருடைய உடனிருப்பை உணர்கின்றோம். இந்த அனுபவம் நம்மை மாற்ற வேண்டும். அப்போது இயேசு கொணர்கின்ற மீட்பிலிருந்து பிறக்கின்ற மகிழ்ச்சி நம் உள்ளத்தையும் வாழ்வையும் நிரப்புவது உறுதி.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவை எங்களுக்குக் கொடையாகத் தந்ததற்கு நன்றி!