யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
2016-10-16

(இன்றைய வாசகங்கள்: விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம். 17:8-13,திருப்பாடல்: 121: 1-8. ,திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3:14-4:2,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18:1-8 )




தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா? தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?


திருப்பலி முன்னுரை

செபிப்பவர்களே,

பொதுக்காலத்தின் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரிடம் நேரிய உள்ளத்தோடு மன்றாடும் போது, அவர் நம் செபத்துக்கு பதில் அளிப்பார் என்ற நம்பிக்கையைப் பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் வேண்டுகோளுக்கு இவ்வுலக அதிகாரிகள் பதில் அளிப்பதைக் காட்டிலும், நமது தேவைகளை நிறைவேற்றுவதில் ஆண்டவர் விரைந்து செயல்படுவார் என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். "தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா?" என்ற இயேசுவின் கேள்வியை மனதில் இருத்துவோம். நம் வேண்டுதலுக்கு கடவுள் உரிய பதில் தருவார் என்ற நம்பிக்கையோடு நமது வேண்டுதல்களை ஆண்டவரிடம் சமர்ப்பித்து, இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.



முதல் வாசகம்

மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம். 17:8-13

அந்நாள்களில் அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர். மோசே யோசுவாவை நோக்கி, நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன் என்றார்.அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே, மோசே. ஆரோன், கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்சென்றனர். மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்: அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரே எனக்கு உதவி.
திருப்பாடல்: 121: 1-8.

மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். பல்லவி:

அவர் உம் கால் இடறாதபடி பாhத்துக் கொள்வார்: உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை: உறங்குவதும் இல்லை. பல்லவி:

ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்: அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: அவரே உமக்கு நிழல் ஆவார்! பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது: இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. பல்லவி:

ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்: அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். பல்லவி:

இரண்டாம் வாசகம்

கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3:14-4:2

அன்பிற்குரியவரே, நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்: யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார். கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப் போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப்போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது: இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு: கடிந்துகொள்: அறிவுரை கூறு: மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18:1-8

அக்காலத்தில் அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். ;ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை: மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ;என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதிவழங்கும் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ;நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை: மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் ; என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். ; பின் ஆண்டவர் அவர்களிடம், ;நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ; என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நிலைத்திருப்பவரே இறைவா,

திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உம்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு செப வாழ்வில் நிலைத்திருக்க உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதி வழங்குபவரே இறைவா,

உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் உண்மையிலும் நேர்மையிலும் நிலைத்திருந்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் சீரிய முறையில் நீதி வழங்க உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

3. விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரே!

இன்றைய நற்செய்தியில் கூறப்படும் கைம்பெண்ணைப்போல நாம் அனைவரும் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாடவும், மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்ல இறைவார்த்தையை, வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அறிவிப்பதில் கருத்தாயிருக்கவும், வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இரக்கம் காட்டுபவரே இறைவா,

பல்வேறு பிரச்சனைகளாலும், நோய்களாலும், அடக்குமுறைகளாலும் துன்புறுவோருக்கு இரக்கம் காட்டும் மனதை மக்கள் அனைவருக்கும் வழங்கி உதவ வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்புத் தந்தையே இறைவா!

எம் இளைஞர்களுக்காக உம்மை மன்றாடுகின்றோம். இவர்கள் கடவுளின் பிள்ளைகளாய் நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறவும், ஞானத்தோடு அனைத்தையும் செய்து முடிக்கவும், தீமைகளிலிருந்து விலகி உம்முடைய காட்சிகளாய் அவர்கள் வாழ அவாகளை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன்'' (லூக்கா 18:5)

இறைவேண்டலின் தேவை பற்றி இயேசு கூறிய உவமைகளில் ஒன்று ''நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்'' பற்றியதாகும் (காண்க: லூக்கா 18:1-8). லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற இந்த உவமையில் வருகின்ற கைம்பெண் நீதி கேட்டு நடுவரிடம் மீண்டும் மீண்டும் செல்கிறார். நடுவரோ அக்கைம்பெண்ணைப் பற்றி எள்ளளவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அக்காலத்தில் கைம்பெண்களுக்கு எந்த ஒரு ஆதரவும் இருக்கவில்லை. கடவுளுக்கும் அஞ்சாமல், மனிதரையும் மதிக்காமல் நடக்கின்ற நடுவர் அக்கைம்பெண்ணின் வேண்டுகோளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றார். ஆனால் அப்பெண் எளிதில் விடுவதாக இல்லை. நடுவரை அணுகிச் சென்று எப்படியாவது தனக்கு நீதி வழங்கவேண்டும் என்று வற்புறுத்திக் கேட்கிறார். தொல்லை பொறுக்கமுடியாமல், இறுதியில் நடுவரின் மனமும் இளகுகிறது. அப்பெண் கேட்டவாறே அவருக்கு நீதி வழங்குகிறார் நடுவர்.

இயேசு இந்த உவமையைக் கூறிய பிறகு, கடவுளை நோக்கி நாம் வேண்டுவது எத்துணை இன்றியமையாதது என விளக்குகிறார். மீண்டும் மீண்டும் கடவுளை நாம் அணுகிச் செல்லும்போது கடவுள் நமக்குத் ''துணைசெய்யக் காலம் தாழ்த்தமாட்டார்'' (காண்க: லூக்கா 18:7). இவ்வுளவு உறுதியான உள்ளத்தோடு நாம் கடவுளை அணுகுகிறோமா? சில வேளைகளில் நம் உள்ளத்தில் உறுதி இருப்பதில்லை. கடவுள் நம் மன்றாட்டைக் கேட்பாரோ மாட்டாரோ என்னும் ஐயமும் நம் உள்ளத்தில் எங்காவது எழும். அல்லது நம் மன்றாட்டு முறையானதாக இல்லாததால்தான் கடவுள் நாம் கேட்பதை நமக்குத் தரவில்லை என நாம் தவறாக முடிவுசெய்திடக் கூடும். ஆழ்ந்த நம்பிக்கையோடு நாம் கடவுளை அணுகிச் செல்ல வேண்டும் என்பதை மட்டும் இயேசு வலியுறுத்துகிறார். நாம் கேட்டது கிடைக்காவிட்டாலும் கடவுளிடம் நமக்குள்ள நம்பிக்கை ஆழப்படுவதே நம் வேண்டுதலுக்குக் கிடைக்கின்ற பெரிய பயனாகும் எனலாம். ஆகவேதான் இயேசு மனிதரிடம் கடவுள் நம்பிக்கை நிலைத்திருக்குமா என்றொரு கேள்வியோடு இந்த உவமையை முடிக்கின்றார் (லூக்கா 18:8). நாம் கடவுளிடத்தில் கொள்கின்ற நம்பிக்கை ஒருநாளும் குறைபடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இறைவேண்டலின் இறுதிப் பொருள்.

மன்றாட்டு:

இறைவா, நம்பிக்கையோடு உம்மை அணுகிவந்து, உம் திருவுளத்திற்கு ஏற்ப வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.