யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் புதன்கிழமை
2016-10-12




முதல் வாசகம்

கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பைச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 18-25

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள். ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன். ஆனால் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவை உள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவு உணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்து விட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
திருப்பாடல் 1: 1-2. 3. 4,6

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம்போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 42-46

அக்காலத்தில் இயேசு கூறியது: ``ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றையும் விட்டுவிடலாகாது. ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள் போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்.'' திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, ``போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவு படுத்துகிறீர்'' என்றார். அதற்கு அவர், ``ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு,'ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்கமுடியாத சுமைகளை மக்கள்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால்கூடத் தொடமாட்டீர்கள்' என்றார்'' (லூக்கா 11:46)

யூத மக்களின் சமய வாழ்வையும் சமூக வாழ்வையும் வழிப்படுத்தியது ''திருச்சட்டம்''. அது வெறும் சட்டத் தொகுப்பு அல்ல, மாறாக ஒரு வாழ்க்கை நெறி. மக்கள் அதை மகிழ்ச்சியோடும் நிறைவான உள்ளத்தோடும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். ஆனால் திருச்சட்டத்தை விளக்கிய ''அறிஞர்கள்'' பல துல்லியமான நுணுக்கங்களை அதில் புகுத்தினார்கள். எடுத்துக்காட்டாக, ''ஓய்வுநாளைப் புனிதமாகக் கடைப்பிடி'' (காண்க: இச 5:12) என்னும் கட்டளைக்கு விளக்கம் அளித்த அறிஞர்கள் அந்த நாளில் மக்கள் 39 வகையான வேலைகளைச் செய்யலாகாது என்று கற்பித்தார்கள். இது ''மனித சட்டம்'' எல்லைமீறிப் போனதையே காட்டுகிறது. எனவே, இயேசு இத்தகைய விளக்கங்களை ''மக்கள்மீது சுமத்தப்பட்ட சுமையாக''க் காண்கிறார் (லூக் 11:46). இத்தகைய சட்டங்களும் சடங்குமுறை சார்ந்த துல்லியமான விளக்கங்களும் ''சுமக்க இயலாத நுகமாக'' மாறிவிட்டிருந்தன (காண்க: திப 15:10).

இவ்வாறு மக்களுடைய வாழ்க்கையைக் கடினமாக மாற்றிய திருச்சட்ட அறிஞர்கள் அந்த மக்களுக்கு உதவி புரிவதற்கு மாறாக அவர்களுக்குக் கொடுமைதான் இழைத்தார்கள். ஒருவேளை அந்த திருச்சட்ட அறிஞர்கள் சட்டத்தைத் துல்லியமாகக் கடைப்பிடித்திருக்கலாம் என்றாலும் அவர்கள் சட்டத்திற்கு அளித்த விளக்கம் மக்களுக்குத் துன்பத்தையே கொணர்ந்தது. கடவுள் காட்டுகின்ற வழியில் நடந்துசெல்வது மனிதருக்கு ஒரு சுகமான அனுபவமாக மாற வேண்டும். அந்த வழியில் நடப்பது எப்போதும் எளிதாக இல்லாமல் இருக்கலாம்; ஏன், சில வேளைகயில் நாம் தியாகம் செய்வதும் தேவையாகலாம். ஆனால் கடவுள் நமக்கு அளித்துள்ள நெறியைக் கடைப்பிடிப்பது நம் உள்ளத்திற்கு நிறைவையும் நம் வாழ்வுக்கு மகிழ்ச்சியையும் தருவதாக இருக்க வேண்டும். கவலை தோய்ந்த முகத்தோடு கடவுளின் நெறியில் நடப்பதற்கு மாறாக, மகிழ்ச்சி கலந்த உணர்வுகளோடு அவரை அன்புசெய்து அவர் காட்டுகின்ற வழியில் பயணம் செய்வதே நமக்கு அழகு.

மன்றாட்டு:

இறைவா, உம் திருச்சட்டத்தை நாங்கள் விருப்போடு செயல்படுத்த அருள்தாரும்.