யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 28வது வாரம் செவ்வாய்க்கிழமை
2016-10-11




முதல் வாசகம்

அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை எனும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள். பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்குப் பயனே இல்லை. விருத்தசேதனம் செய்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் திருச்சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமை உண்டு என்பதை நான் மீண்டும் வற்புறுத்திக் கூறுகிறேன். திருச்சட்டம் சார்ந்த செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக முயலும் நீங்கள் கிறிஸ்துவுடன் உறவற்றுப் போய் விட்டீர்கள்; அருளை இழந்துவிட்டீர்கள். ஆனால் நாம் தூய ஆவியின் துணையால் நம்பிக்கையின் வழியாய் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவோம் என்னும் எதிர்நோக்கு நிறைவேறும் என ஆவலோடு காத்திருக்கிறோம். கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர், விருத்தசேதனம் செய்துகொண்டாலும் செய்து கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கு எப்பயனும் இல்லை. அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்.
திருப்பாடல்119: 41,43. 44,45. 47,48

ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்; உமது வாக்குறுதியின்படி நீர் என்னை மீட்பீராக! 43 என் வாயினின்று உண்மையின் சொற்கள் நீங்கவிடாதேயும்; ஏனெனில், உம் நீதிநெறிகள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். பல்லவி

44 உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன். 45 உம் நியமங்களை நான் நாடியுள்ளதால் பரந்த பாதையில் தடையின்றி நான் நடப்பேன். பல்லவி

47 உம் கட்டளைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன். 48 நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; உம் விதிமுறைகளைப் பற்றி நான் சிந்திப்பேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 37-41

அக்காலத்தில் இயேசு பேசிக்கொண்டிருந்தபோது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். உணவு அருந்துமுன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார். ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: ``பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''உணவு அருந்துமுன் இயேசு கைகழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார்'' (லூக்கா 11:38)

கைகழுவாமல் உணவு அருந்துவது நோய்கள் பரவுவதற்குக் காரணமாகலாம். எனவே நல வாழ்வு பற்றி அக்கறை கொண்டோர் கைகழுவாமல் உணவு அருந்தமாட்டார்கள். ஆனால், இயேசுவின் காலத்தில் கைகழுவிய பின்னரே உணவு அருந்தவேண்டும் என்பது பரிசேயர் நடுவே நிலவிய ஒரு முக்கியமான சடங்குமுறை ஒழுங்காக இருந்தது. இயேசு யூத சமயத்தில் வேரூயஅp;ன்றியவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் வெளிச்சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் நோக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதவர்களை இயேசு கடிந்துகொண்டார். வெளிச்சடங்குகள் உள்ளத்தின் உட்கிடக்கையை வெளிப்படுத்துவனவாக மாற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவை பொருளற்றவையே.

சில சமயங்களில் நாம் வெளிச்சடங்குகள் சரியாக நடந்துவிட்டால் எல்லாம் நலமாக முடிந்தது என நினைத்து நிறைவடைந்துவிடுகிறோம். உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற சிந்தனைகள் தூயவையாக இருக்கவேண்டும். நலமான சிந்தனைகள் எழுகின்ற இடத்தில் பிறருக்கு நலம் பயக்கின்ற செயல்களும் வெளிப்படும். அப்போது வெறும் சடங்குகள் பற்றி நாம் அக்கறை கொள்ளாமல் அச்சடங்குகள் எதைக் குறிக்கின்றன, அவை குறிக்கின்ற உள்கருத்து நலமான வெளிப்படுகிறதா என்னும் கேள்விகளை எழுப்பமுடியும். நலமான சிந்தனையும் அதிலிருந்து பிறக்கின்ற நலமான செயலும் நம் வாழ்வில் துலங்க வேண்டும் என்பதே இயேசுவின் போதனை. உள்ளமும் செயலும் நன்மையைக் கனியாக ஈந்தால்தான் முழுமையான மனிதம் மலர்கிறது என நாம் கூறலாம். மனிதம் மலரும் இடத்தில் புனிதம் மணம் வீசும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தைக் கழுவித் தூய்மையாக்கவும் நேர்மையாகச் செயலாற்றவும் எங்களுக்கு அருள்தாரும்.