யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

(இன்றைய வாசகங்கள்: அபக்கூக்கு 1:2-3,2:2-4, 2திமொத்தேயு 1:6-8,13-14, லூக்கா 17:5-10



கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த முசுக்கட்டை மரத்தை நோக்கி, 
நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில் எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும். கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த முசுக்கட்டை மரத்தை நோக்கி, 
நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில் எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.




திருப்பலி முன்னுரை

நம்பிக்கைக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் இருபத்தேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்யும் பணியாளர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கடவுளில் முழுமையாக நம்பிக்கை வைத்து, துணிவுடன் செயல்பட இயேசு நம்மை அழைக்கிறார். கடுகளவு நம்பிக்கை இருந்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதே ஆண்டவர் நமக்கு கற்றுத் தரும் பாடம். கடவுள் மீதும், நம் மீதும் முழுமையாக நம்பிக்கை கொண்டு நற்செய்தியின் தூதுவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையை நமது வாழ்வாக்க வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.



முதல் வாசகம்

நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.
இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 2-3; 2: 2-4

ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணைவேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்? நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன; வழக்கும் வாதும் எழும்புகின்றன. ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: ``காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு; அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரே உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்; நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
திருப்பாடல் 95: 1-2. 6-7. 8-9

1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! பல்லவி

8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி

இரண்டாம் வாசகம்

நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்து வெட்கமடையத் தேவை இல்லை.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 6-8, 13-14

அன்பிற்குரியவரே, உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா ! ! நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி அல்லேலூயா !

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 5-10

அக்காலத்தில் திருத்தூதர்கள் ஆண்டவரிடம், ``எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: ``கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, `நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும். உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், `நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, `எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன் பிறகு நீர் உண்டு குடிக்கலாம்' என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், `நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நம்பிக்கையின் ஊற்றாம் இறைவா,

திருச்சபையை வழிநடத்துவதற்காக நீர் தேர்ந்தெடுத்துள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது பணியைச் செய்வதில் கடமை தவறாதவர்களாக திகழச் செய்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. நம்பிக்கையின் உறைவிடமே இறைவா,

அச்சமும் கலக்கமும் நம்பிக்கையின்மையும் காணப்படும் இவ்வுலகில், மக்களிடையே நம்பிக்கையை விதைத்து இறையரசை நிறுவும் தலைவர்கள் தோன்றத் துணைபுரிந்திடவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. நம்பிக்கையின் நிறைவே இறைவா,

எதிர்காலத்தை உமக்குரியதாக மாற்றும் நல்ல தலைவர்கள் எம் நாட்டில் உருவாகவும், பிரிவினை, வன்முறை, தீவிரவாதம் போன்ற தீமைகள் நாட்டில் இருந்து மறையவும் உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்பிக்கை தருபவரே இறைவா,

வறுமை, கடன், முதுமை, பசி, தனிமை, நோய் என பல்வேறு விதங்களில் துன்புறும் மக்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களின் துயரத்தை நீக்கி ஆறுதல் அளித்திட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் தந்தையே!

ஏக்கத்தோடும், நம்பிக்கையற்ற நிலையிலும் ஆண்டவராகிய உம்மை நோக்கிக் கூக்குரலிடும் அனைவருடைய வேண்டுதல்களுக்கும் இரங்கி, அவர்கள் அனைவரும் சோர்வடையாது, நிலைகுலையாது, நம்பிக்கையோடு உமது வாக்குறுதிகளை எதிர்பார்த்துக் காத்திருந்து, உமது விருப்பப்படி வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''திருத்தூதர்கள் ஆண்டவரிடம், 'எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்' என்று கேட்டார்கள்'' (லூக்கா 17:5)

''நம்பிக்கை'' என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. ஏதாவது ஒரு பொருள்பற்றிக் கருத்துத் தெரிவித்தல் ''நம்பிக்கை'' எனக் கொள்ளப்படலாம். நாம் ஒரு கருத்துத் தெரிவிக்கும்போது, வேறு மனிதர் வேறு கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என ஏற்றுக்கொள்கிறோம். நாம் உண்மை என ஏற்பதையும் ''நம்பிக்கை'' எனலாம். இப்பொருளில் ''சமய நம்பிக்கை'' பற்றிப் பேசுகிறோம். இதற்கு நேர்மாறாக ''மூட நம்பிக்கை'' இருக்கிறது. அதாவது நாம் உறுதியாக ஏற்கின்ற ஒரு கருத்துக்கு உண்மையான ஆதாரம் இல்லை என்பது இதன் பொருள். இவை தவிர, நம்பிக்கை என்றால் ''எதிர்காலத்தில் நிகழவிருக்கின்ற ஒரு நிகழ்ச்சி குறித்து நாம் தெரிவிக்கின்ற எதிர்பார்ப்பு'' என்றும் பொருள்படலாம். நாளை மழை பெய்யும் என நம்புகிறேன் என்று ஒருவர் கூறுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆகவே, சீடர்கள் இயேசுவிடம் ''எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' (லூக்கா 17:5) என்று விடுத்த வேண்டுகோளை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

இங்கே ''நம்பிக்கை'' என வருகின்ற சொல் பழைய விவிலியத் தமிழ் பெயர்ப்பில் ''விசுவாசம்'' என்றிருந்தது. விசுவாசம் என்பது வடமொழி என்பதால் அதை நல்ல தமிழில் ''நம்பிக்கை'' என்று கூறுகிறோம். எனவே, கிறிஸ்தவப் பார்வையில் ''நம்பிக்கை'' என்பது ஆழ்ந்த பொருள் கொண்டது. இதன் முதல் பொருள் ''கடவுளை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வது'' என்பதாகும். கடவுள் தம்மையே நமக்கு இயேசுவின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதாலும், அந்த வெளிப்பாட்டின் வழியாகக் கடவுள் நம்மோடு உரையாடுகிறார் என்பதாலும், நாம் கடவுளோடு உறவாட அழைக்கப்படுகிறோம். இவ்வாறு கடவுள் நமக்கு விடுக்கின்ற அழைப்புக்கு நாம் ''ஆம்'' என்று பதிலளிக்கும்போது நாம் கடவுளிடத்தில் நம் ''நம்பிக்கை''யை வெளிப்படுத்துகின்றோம். எனவே நம்பிக்கை என்பதற்குப் ''பற்றுறுதி'' என்னும் பொருள் உண்டு. கடவுளை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது கடவுள் தம் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார் என்றும், அவர் நம்மைக் கைவிடார் என்றும் நாம் உறுதியாக ஏற்கிறோம். இதுவும் நம்பிக்கையின் பொருள்ஆகும். இங்கே நம்பிக்கையோடு ''எதிர்நோக்கல்'' இணைந்திருப்பதைப் பார்க்கின்றோம். எனவே, கிறிஸ்தவப் பார்வையில் ''நம்பிக்கை''யும் ''எதிர்நோக்கும்'' மிக நெருங்கிய விதத்தில் பிணைந்தவை. அவற்றோடு ''அன்பு'' என்னும் பண்பையும் நாம் சேர்த்தால் இம்மூன்றும் கடவுளோடு நமக்கு உறவு ஏற்படுத்துகின்ற வழிகளாக மாறுவதை நாம் பார்க்கலாம். இதைத் தூய பவுல் அழகாக எடுத்துரைக்கிறார்: ''ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது'' (1 கொரிந்தியர் 13:13). எனவே, திருத்தூதர்கள் இயேசுவிடம், ''எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' என்று எழுப்பிய வேண்டுதல் நமது வேண்டுதலாகவும் மாறவேண்டும். நம் வாழ்க்கையில் ''நம்பிக்கை'' ஆழ வேரூயஅp;ன்றினால் நாம் கடவுளிடம் கொள்கின்ற பற்று உறுதியாக இருக்கும்.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களோடு என்றும் வாழ்கின்றீர் என்னும் நம்பிக்கையை எங்களில் வளர்த்தருளும்.