யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் வியாழக்கிழமை
2016-09-08

தூய கன்னி மரியாவின் பிறப்பு




முதல் வாசகம்

இஸ்ரயேலை ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5

ஆண்டவர் கூறுவது: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டுவிடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள் வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.
திருப்பாடல்13: 5. 6

நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும். பல்லவி

6 நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புனித கன்னிமரியே, நீர் பேறுபெற்றவர்; புகழ் அனைத்திற்கும் மிக ஏற்றவரும் நீரே; ஏனெனில் என் இறைவன் இயேசு கிறிஸ்து நீதியின் ஆதவனாய் உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-23

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ``யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' என்றார். ``இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம் !

இன்று அன்னை மரியாவின் பிறப்பு விழா. அன்னையை வாழ்த்துவோம், அன்னையை நமக்குக் கொடையாகத் தந்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் இந்த வசனத்தை இன்று தியானிப்போமா? ஆண்டவரின் துhதர் யோசேப்புக்கு கனவில் தோன்றி வழங்கிய செய்தி: மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். அந்த நொடியே யோசேப்பின் உள்ளத்தில் வழிந்துகொண்டிருந்த தயக்கம், அச்சம் அனைத்தும் அகன்றிருக்கும். மகிழ்ச்சியுடன் மரியாவை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால், இன்று கிறித்தவர்களிலே ஒரு பிரிவினர் அன்னை மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சுகின்றனர். மேலும், அன்னையை ஏற்றுக்கொள்வோரையும் இகழ்கின்றனர். எத்துணை துயரமான ஒரு நிகழ்வு! யோசேப்புக்கு வானதுhதர் சொன்ன செய்தியையே இன்றும் நமக்கும், அன்னையை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் அனைவருக்கும் இறைவன் தருகிறார். அன்னையைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வது என்றால் இன்றைய சூழலில் இரண்டு பொருள்தான்: ஒன்று அந்தத் தாயை நமது தாயாக ஏற்று, அன்பு செய்யவேண்டும். போற்றி மகிழ வேண்டும். இரண்டாவது, அந்தத் தாய் தருகின்ற செய்தியை, அதாவது இறைவார்த்தையின்படி வாழ வேண்டும், இறைத் திருவுளத்தின்படி வாழவேண்டும், செபமும் தவமும் செய்ய வேண்டும் ... போன்ற செய்திகளை நாம் ஏற்று அதன்படி வாழ வேண்டும். இதுவே அன்னைக்கு நாம் தரும் பிறந்தநாள் பரிசு.

மன்றாட்டு:

உமது அன்னையை எங்களுக்கும் தாயாகத் தந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். மரியாவை தாயாக ஏற்க மறுக்கும் அனைவருக்காகவும் நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். அவரைத் தாயாக ஏற்று மகிழும் நாங்கள், அந்தத் தாயின் மனம் குளிரும்படி, உம் வார்த்தைகளின்படி வாழ அருள்தாரும். ஆமென்.