யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் செவ்வாய்க்கிழமை
2016-08-02




முதல் வாசகம்

உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை நான் செய்தேன். நான் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 30: 1-2,12-15,18-22

ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை. ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: உனது காயத்தைக் குணப்படுத்த முடியாது; உனது புண் புரையோடிப்போனது. உனக்காக வாதிட எவனும் இல்லை; உனது காயத்தை ஆற்ற மருந்தே இல்லை; உன்னைக் குணப்படுத்தவே முடியாது. உன் காதலர் அனைவரும் உன்னை மறந்துவிட்டனர்; உன்னை அவர்கள் தேடுவதே இல்லை; மாற்றான் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கினேன்; கொடியோன் தண்டிப்பது போல நான் உன்னைத் தண்டித்தேன்; ஏனெனில் உனது குற்றம் பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை. நீ நொறுக்கப்பட்டதை எண்ணி ஏன் அழுகின்றாய்? உனது வேதனையைத் தணிக்க முடியாது; ஏனெனில் உனது குற்றமோ பெரிது; உன் பாவங்களோ எண்ணற்றவை; எனவே இவற்றை எல்லாம் நான் உனக்குச் செய்தேன். ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: அடிமைத்தனத்தினின்று நான் யாக்கோபின் கூடாரங்களைத் திரும்பக் கொணர்வேன்; அவனுடைய உறைவிடங்கள் மீது நான் இரக்கம் காட்டுவேன்; அவற்றின் இடிபாடுகள் மேலேயே நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்; அரண்மனையும் அதற்குரிய இடத்திலேயே அமைக்கப்படும். அவர்களிடமிருந்து நன்றிப் பாக்கள் எழும்பிவரும்; மகிழ்ச்சியுறுவோரின் ஆரவாரம் கேட்கும். அவர்களை நான் பல்கிப் பெருகச் செய்வேன்; அவர்கள் எண்ணிக்கையில் குறைய மாட்டார்கள். நான் அவர்களைப் பெருமைப்படுத்துவேன்; இனி அவர்கள் சிறுமையுறமாட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகள் முன்புபோல் இருப்பர்; அவர்களது கூட்டமைப்பு என் திருமுன் நிலைநாட்டப்படும்; அவர்களை ஒடுக்குவோர் அனைவரையும் தண்டிப்பேன். அவர்களின் தலைவன் அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்; அவர்களை ஆள்பவன் அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்; அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்; அவனும் என்னை அணுகி வருவான்; ஏனெனில், என்னை அணுகி வர வேறு யாருக்குத் துணிவு உண்டு?, என்கிறார் ஆண்டவர். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்பி, மாட்சியுடன் திகழ்ந்திடுவார்.
திருப்பாடல் 102: 15-17. 18-20. 28,21-22

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர். 16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்; அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார். 17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்; அவர்களின் மன்றாட்டை அவமதியார். பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்; படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும். 19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்; அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். 20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்; சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார். பல்லவி

28 உம் அடியாரின் பிள்ளைகள் பாதுகாப்புடன் வாழ்வர்; அவர்களின் வழிமரபினர் உமது திருமுன் நிலைத்திருப்பர்! 21 சீயோனில் ஆண்டவரின் பெயர் போற்றப்படும். எருசலேமில் அவர்தம் புகழ் அறிவிக்கப்படும். 22 அப்போது, மக்களினங்களும் அரசுகளும் ஒன்றுதிரண்டு ஆண்டவரை வழிபடுவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்." அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-2,10-14

அக்காலத்தில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து, ``உம் சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்? உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே'' என்றனர். மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி, ``நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளி வருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும்'' என்றார். பின்பு சீடர் அவரை அணுகி, ``பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா?'' என்றனர். இயேசு மறுமொழியாக, ``என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும். அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"இயேசு, 'துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்' என்றார்" (மத்தேயு 14:27)

நற்செய்தி நூல்களில் பல இடங்களில் "அஞ்சாதீர்கள்" என்னும் சொல் இயேசுவின் வாயிலிருந்து வெளிப்படுவதை நாம் காணலாம். கடவுள் இயேசுவின் வழியாக நமக்குத் தருகின்ற அடிப்படையான செய்தி இதுவே. மனிதர்கள் எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை; கடவுளுக்கு மட்டுமே நாம் அஞ்சி நடக்க வேண்டும். பழைய ஏற்பாட்டிலும் "கடவுளுக்கு அஞ்சி நடப்பதே உண்மையான ஞானம்" என்னும் செய்தி உண்டு. இயேசு நீர்மீது நடந்து வருவதைக் கண்ட சீடர் வியப்பும் அச்சமும் கொண்டனர். ஆனால், இயேசு அவர்கள் அஞ்ச வேண்டியதில்லை என்றும் அவர்கள் தம்முடைய பிரசன்னத்தில்தான் உள்ளனர் என்றும் கூறி அவர்களுக்கு ஊக்கம் அளிக்கின்றார். அச்சம் கொள்வோர் துணிவையும் இழந்துவிடுவர். எனவே, இயேசு சீடர்கள் துணிவோடு இருக்க வேண்டும் எனவும் கேட்கிறார். இவ்வாறு அச்சம் அகன்று, துணிவுகொண்டு சீடர் செயல்படுவதற்கு எதைத்தான் அடிப்படையாகக் காட்டுவது? இயேசுவே தம் சீடரோடு இருக்கிறார் என்பதுதான் இந்தத் துணிவுக்கு அடிப்படை ஆகும். -- இயேசுவின் சீடர்களாக அழைக்கப்பட்ட நமக்கும் இயேசு இந்த ஆறுதல் வார்த்தைகளை வழங்குகின்றார். இயேசுவைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. சில சமயங்களில் நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறுபட்ட விதத்தில் அவர் தோற்றமளிக்கக் கூடும். ஆனால் அவருடைய பிரசன்னம் நம்மை விட்டு ஒருபோதும் அகன்று போவதில்லை என்னும் எண்ணம் நமக்கு ஆறுதல் அளிக்க வேண்டும். இயேசுவே நம்மோடு இணைந்திருப்பதால் நாம் அஞ்சவேண்டியதுமில்லை, துணிவை இழந்துபோக வேண்டியதுமில்லை. இயேசுவே நமக்கு உள்ளார்ந்த சக்தியை வழங்குவார்; அவரே நம்மைத் திடப்படுத்தி நாம் அவருக்குச் சான்று பகர நமக்கு ஊக்கமளிப்பார்.

மன்றாட்டு:

இறைவா, உமக்கு அஞ்சி நடப்பதும் உம்மை அனைத்திற்கும் மேலாக அன்புசெய்வதுமே எங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாக அமைந்திட எங்களுக்கு அருள்தாரும்.