யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 17வது வாரம் வெள்ளிக்கிழமை
2016-07-29

புனித மார்த்தா




முதல் வாசகம்

நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-16

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது. அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம் எனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார் எனவும் அறிந்து கொள்கிறோம். தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கின்றோம். இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
திருப்பாடல் 34: 1-2. 3-4. 5-6. 7-8. 9-10

ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள். 1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி

9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. 10 சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 19-27

அக்காலத்தில் சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். மார்த்தா இயேசுவை நோக்கி, ``ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்'' என்றார். இயேசு அவரிடம், ``உன் சகோதரன் உயிர்த்தெழுவான்'' என்றார். மார்த்தா அவரிடம், ``இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்'' என்றார். இயேசு அவரிடம், ``உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாக மாட்டார். இதை நீ நம்புகிறாயா?'' என்று கேட்டார். மார்த்தா அவரிடம், ``ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தமது சொந்த ஊருக்கு வந்தார்...அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்'' (மாற்கு 6:1,5-6)

''யார் இந்த இயேசு?'' என்னும் கேள்வி மாற்கு நற்செய்தியில் மைய இடம் பெறுகிறது. இயேசு தம் சொந்த ஊராகிய நாசரேத்து வந்து, அங்கே ஓய்வுநாளன்று கற்பிக்கத் தொடங்குகிறார். இயேசு யூத முறைப்படி திருச்சட்டம் பயின்றவரல்ல; அக்கால வழக்கப்படி வேறொரு யூத அறிஞரை அணுகி அவரிடம் பாடம் பயின்றவருமல்ல. எனவே, அவர் தொழுகைக் கூடத்தில் கற்பித்தது வழக்கத்துக்கு மாறானது; சட்டத்திற்கு முரணானது. இதை மக்கள் கவனிக்கிறார்கள். ''இவர் தச்சரல்லவா?'' (மாற் 6:3) என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இயேசு தச்சர் என அழைக்கப்படுவது இந்த ஓரிடத்தில் மட்டுமே என்பதையும் நாம் கருதலாம். மேலும் மக்கள் இயேசுவைப் பார்த்து, ''இவர் மரியாவின் மகன்தானே!'' என்று வியப்புறுகின்றனர் (மாற்6:3). வழக்கமாக ஒருவரை அடையாளம் காட்டும்போது அவருடைய தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு அவருடைய மகன் இன்னார் என்று கூறுவது யூத மரபு. ஆனால் இங்கே இயேசு ''மரியாவின் மகன்'' என அடையாளம் காட்டப்படுகிறார். ஒருவேளை இயேசு மரியாவும் யோசேப்பும் கூடி வாழும் முன்னரே மரியாவின் வயிற்றில் கருவானது இவ்வாறு குறிக்கப்படுகிறதோ? எவ்வாறாயினும், ''யார் இந்த இயேசு?'' என்னும் கேள்வி மக்களின் உள்ளத்தில் எழுந்ததையும் அக்கேள்விக்கு மக்கள் வெவ்வேறு பதில்கள் அளித்ததையும் மாற்கு பதிவு செய்கிறார்.

ஆக, இயேசுவின் உறவினரும் சரி, சீடர்களும் சரி, ஊர் மக்களும் சரி, இயேசுவை யார் என அடையாளம் காணத் தவறிவிட்டார்கள். தீய ஆவிகள்தாம் இயேசுவை அடையாளம் கண்டு, அவரை ''உன்னத கடவுளின் மகன்'' (மாற் 5:7) என அழைக்கின்றன. இயேசுவுக்கு மிகவும் நெருக்கமாக நாம் இருக்கின்றோம் என்பதால் மட்டுமே நம்மில் உண்மையான நம்பிக்கை தோன்றிவிடாது. இயேசுவின் குடும்பத்தினரே அவரை அடையாளம் காணத் தவறினார்கள்; அவரை நன்கு அறிந்த ஊர் மக்கள் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அவரோடு வழிநடந்து அவருடைய போதனைக்குச் செவிமடுத்த சீடர்கள் கூட அவரை அறிந்திடவில்லை. உள்வட்டத்தில் இருப்போர் பார்வையற்றிருக்க வெளிவட்டத்தில் இருப்போர் தெளிந்த பார்வையோடு இயேசுவை அடையாளம் காண்கிறார்கள். இதிலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக்கொள்ளலாம். இயேசுவை நாம் உண்மையாகவே அறிந்துள்ளோம் என இறுமாப்புக் கொள்ளாமல் அவரை மேன்மேலும் ஆழமாக அறிந்து அன்புசெய்திட நம் உள்ளத்தைத் திறந்திட வேண்டும். அப்போது நம்மில் நம்பிக்கை வளரும். இறை அறிவும் பளிச்சென ஒளிரும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனை அறிந்து அன்புசெய்திட எங்களுக்கு அருள்தாரும்.