யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 16வது வாரம் வியாழக்கிழமை
2016-07-21

புனித லொரன்ஸ்




முதல் வாசகம்

பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-3,7-8,12-13

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ``நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலை நிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன். இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது; அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது; அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்; அவர்கள் மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர். செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்; எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்கு உள்ளாக்கினீர்கள். குருக்கள், `ஆண்டவர் எங்கே?' என்று கேட்கவில்லை; திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை; ஆட்சியாளர் எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்; இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர். வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்; அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர். ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்: பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்; தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைத் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது
திருப்பாடல் 36: 5-6 7-8. 9-10

ஆண்டவரே! வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு; முகில்களைத் தொடுகின்றது உமது வாக்குப் பிறழாமை. ஆண்டவரே, உமது நீதி இறைவனின் மலைகள்போல் உயர்ந்தது; உம் தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை. பல்லவி

7 கடவுளே, உமது பேரன்பு எத்துணை அருமையானது! மானிடர் உம் இறக்கைகளின் நிழலில் புகலிடம் பெறுகின்றனர். 8 உமது இல்லத்தின் செழுமையால் அவர்கள் நிறைவு பெறுகின்றனர்; உமது பேரின்ப நீரோடையில் அவர்கள் தாகத்தைத் தணிக்கின்றீர். பல்லவி

9 ஏனெனில், வாழ்வு தரும் ஊற்று உம்மிடமே உள்ளது; உமது ஒளியால் யாமும் ஒளி பெறுகின்றோம். 10 உம்மை அறிந்தோர்க்கு உமது பேரன்பையும், நேரிய உள்ளத்தோர்க்கு உமது நீதியையும் தொடர்ந்து வழங்கியருளும்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17

அக்காலத்தில் சீடர்கள் இயேசுவின் அருகே வந்து, ``ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?'' என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: ``விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: `நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.' உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களிடம், 'விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது' என்றார்'' (மத்தேயு 13:11)

''விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்'' எனத் தொடங்கி, இயேசு இயேசு மக்களுக்கு ஒரு கதை சொன்னார் (மத் 13:1-9). அக்கதையின் பொருள் யாது என சீடருக்கு உடனடியாக விளங்கவும் இல்லை; இயேசு ஏன் கதைகள் வழியாகப் பேசுகிறார் என அறியவும் அவர்களுக்கு ஆசை. அப்போது சீடர்கள் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள் என இயேசு கூறுகிறார்: ''விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது'' (மத் 13:11). அப்படியென்றால், ஒருசிலர் இயேசுவின் செய்தியைப் புரிந்துகொள்வார்கள் எனவும் வேறுசிலர் அதைப் புரிந்துகொள்ளமாட்டார்கள் எனவும் நாம் முடிவுசெய்யலாம். இது ஒவ்வொரு மனிதரும் திறந்த உள்ளத்தோடு இயேசுவை அணுக வேண்டும் என்னும் உண்மையை நமக்கு உணர்த்துகிறது. நம் உள்ளத்தைக் கடினப்படுத்திக் கொண்டு, உண்மையை ஏற்க நாம் மறுத்தால் இயேசுவின் செய்தி நம் காதுகளில் விழாமலே போய்விடும். அப்படியே அச்செய்தியை நாம் கேட்டாலும் அதன் உண்மைப் பொருள் நம் இதயத்தைத் தொட்டு நம்மை மாற்றாது. அதுபோலவே, நம் சொந்தக் கருத்துக்களை விடாது பிடித்துக்கொண்டு, அவற்றின் அடிப்படையில் நாம் கடவுளின் வெளிப்பாட்டை மதிப்பிடுவதாக இருந்தால் நாம் உண்மையைக் கண்டுகொள்ளத் தவறிவிடுவோம்.

இயேசு அறிவிக்கின்ற செய்தியை ஏற்றிட நாம் திறந்த மனமும் இதயமும் கொண்டிருக்க வேண்டும். இயேசுவை முழு மனத்தோடு பின்செல்கின்ற விருப்பம் நம்மிடம் இருக்க வேண்டும். என்றாலும், யார் கடவுளின் சொல்லைக் கேட்டு அதன்படி நடப்பார் என்பது முன்கூட்டியே குறித்தாயிற்று எனவும், விதியை நாம் மாற்ற இயலாது எனவும் முடிவுசெய்வது தவறு. ஏனென்றால், கடவுள் நமக்குச் சுதந்திரத்தைத் தந்திருக்கிறார். நாம் மனதார அவரை ஏற்று, அவருடைய குரலுக்குச் செவிமடுத்து நம் வாழ்க்கையை வடிவமைக்க வேண்டும் என்பதே அவர் விருப்பம். எனவே, கடவுள் நம் வாழ்க்கை முழுவதையும் நம் திட்டங்களையும் முன்கூட்டியே அறிவார் என்றாலும் நமது கதியை நிர்ணயிக்கும் பொறுப்பு நம் கைகளிலேயே உள்ளது. இது நம் அறிவுக்கு முழுமையாக எட்டுகின்ற ஓர் எதார்த்தம் அல்ல. ஆனால், நாம் பொறுப்போடும் சுதந்திரத்தோடும் செயல்பட வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அவர் தருகின்ற அருளை நாம் நன்றியோடு ஏற்று, அவரோடு ஒத்துழைத்தால் நம் வாழ்க்கைக் குறிக்கோளை அடைவோம். அதுவே நம் கடவுளின் அன்புத் திட்டம்.

மன்றாட்டு:

இறைவா, இயேசு வழியாக உம் அன்பை எங்களோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!