யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 16வது வாரம் புதன்கிழமை
2016-07-20




முதல் வாசகம்

மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 1,4-10

பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்: எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: `தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்'. நான், `என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே' என்றேன். ஆண்டவர் என்னிடம் கூறியது: `` `சிறுபிள்ளை நான்' என்று சொல்லாதே; யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல். அவர்கள் முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்,' என்கிறார் ஆண்டவர்.'' ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: ``இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் வாய் உமது நீதியையும் மீட்பையும் எடுத்துரைக்கும்
திருப்பாடல் 71: 1-2. 3-4ய. 5-6. 15,17

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக்கொள்ளும். பல்லவி

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4ய என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6யb பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். பல்லவி

15யb என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதையாம், அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும் நிலைத்திருப்பர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந் திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற் கரையில் நின்று கொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: ``விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப்போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்

கடவுளின் வார்தை மக்களிடையே என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உவமை வழியாக இயேசு கூறுகிறார். உலகத்தில் மக்கள் பலவிதம். இந்த உலகத்து மாந்தர் அனைவரையும் விதையாகக் கொண்டால் (நல்ல நிலத்தில் விழாத விதைகள்) மக்கள் எந்தவித பலனையும் தராத மக்கள். (நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்) ஒருபகுதி மக்கள் சிலர் 100 மடங்காகவும் சிலர் 60 மடங்காகவும் சிலர் 30 மடங்காகவும் பலன் தருகின்றார்கள். நிலம் இந்த உலகம்; விதை கடவுளின் வார்த்தை; விதைப்பவர் கடவுள்; விதை தக்க பலனை கொடுக்காதிருப்பதற்கு பலகாரணங்கள்.

முளைக்காத விதை, வானத்துப் பறவைகளுக்கு உணவான விதை, முளைத்துக் காய்ந்த விதை, வளர்ந்து மடிந்த செடி இன்று பலகாரணங்கள். கடவுள் நம்மிடம் வார்தை என்னும் விதையை விதைக்கிறார். பலவேளைகளில் இந்த வார்தைக்கு செவிமடுப்பதில்லை அல்லது செவிமடுத்தாலும் அதை மனதில் நிலைநிறுத்துவதில்லை அல்லது நிலைநிறுத்தினாலும் செயலாக்கம் பெறச் செய்வதில்லை. செயலாக்கம் பெறச் செய்வதென்பது நாமே நற்செய்தியாக மாறவேண்டும். கடவுள் கொடுக்கின்ற வார்த்தைகள் நம் வாழ்வில் பலன் கொடுக்கவேண்டுமானால், விழுந்த விதைகளை (வார்தைகளை) பேணிப் பாதுகாக்கவேண்டும், வேரூயஅp;ன்றச் செய்யவேண்டும், பலப்படுத்த வேண்டும், நல்ல நிலமாக மாறவேண்டும்.

மன்றாட்டு:

இறைவா உம்வார்தைகளை நாங்கள் கேட்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அவ்வார்ததைகளை மனத்தில் இருத்தி செயலாக்கம் பெற எங்கள் உள்ளமாகிய நிலத்தை பண்படுத்தியருளும். உம் வார்த்தையே எங்கள் வாழ்வாக மாறச்செய்தருளும். ஆமென்.