யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 16வது வாரம் திங்கட்கிழமை
2016-07-18




முதல் வாசகம்

ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே!
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 6: 1-4, 6-8

ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில் உன் வழக்கைச் சொல்; குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும். மலைகளே, மண்ணுலகின் நிலையான அடித்தளங்களே, ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்; ஆண்டவருக்குத் தம் மக்களோடு வழக்கு ஒன்று உண்டு; இஸ்ரயேலோடு அவர் வாதாடப் போகின்றார். என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்? எதில் நான் உங்களைத் துயரடையச் செய்தேன்? எனக்கு மறுமொழி கூறுங்கள். நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்தேன்; அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டு வந்தேன்; உங்களுக்கு முன்பாக மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் அனுப்பி வைத்தேன். ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா? ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா? ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.
திருப்பாடல்50: 5-6. 8-9. 16-17. 21,23

`பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.' 6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! -பல்லவி

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. 9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ, நான் ஏற்றுக்கொள்வதில்லை. -பல்லவி

16 `என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். -பல்லவி

21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்து உரைக்கின்றேன். 23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-42

அக்காலத்தில் மறைநூல்அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, ``போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்'' என்றனர். அதற்கு அவர் கூறியது: ``இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார். தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!... இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!" (மத்தேயு 12:41-42)

இயேசு தம்மை யோனா இறைவாக்கினருக்கும் சாலமோன் மன்னருக்கும் ஒப்பிட்டுப் பேசியதோடு அவர்களைவிடத் தம்மைப் பெரியவராகக் காட்டுகிறார். விவிலிய வரலாற்றில் யோனாவுக்குச் சிறப்பிடம் உண்டு. கடவுளிடமிருந்து வந்த அழைப்பை ஏற்காமல் தட்டிக்கழிப்பதற்கு எவ்வளவோ முயன்றார் யோனா. ஆனால் கடவுள் அவரை விடவில்லை. யோனாவைத் தேடிச்சென்று கண்டுபிடித்து அவரை நினிவே நகருக்கு அனுப்பி அங்கிருந்த பிற இன மக்கள் கடவுளிடம் திரும்பிவர யோனா ஒரு கருவியாகச் செயல்பட்டார். சாலமோன் மன்னர் தலைசிறந்த ஞானியாகப் போற்றப்பெறுபவர். அவருடைய ஞானம் மிகுந்த சொற்களைக் கேட்க வெகுதொலையிலிருந்து மக்கள் வந்தனர். இந்த இருவரோடும் இயேசு தம்மை ஒப்பிட்டது எதற்காக? இயேசு கடவுளால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர் அனைவரையும்விட தலைசிறந்த இறைவாக்கினர். ஏனென்றால் அவர் கடவுளின் செய்தியை, கடவுளாட்சி பற்றிய செய்தியை நமக்கு அறிவித்தார். மேலும், இயேசு இவ்வுலகில் தோன்றிய ஞானியர் அனைவரையும் விஞ்சியவர். ஏனென்றால் அவர் இவ்வுலக ஞானத்தையல்ல, கடவுளின் ஞானத்தை நமக்கு அறிவித்தார்.

கடவுளின்ஞானம் மனிதருக்கு மடமையாகப் படலாம். கடவுளின் அழைப்பு மனிதருக்கு முரணாகத் தெரியலாம். ஆனால், திறந்த உள்ளத்தோடு கடவுளை நாம் அணுகிச் சென்றால் அவருடைய குரலை நம் உள்ளத்தின் ஆழத்தில் நாம் கேட்க முடியும். அதுபோல, கடவுளின் ஆவியால் நாம் நடத்தப்பட்டால் அவருடைய ஞானத்தில் நமக்கும் பங்குண்டு. ஒப்புயர்வற்ற இறைவாக்கினரும் ஞானியுமாகிய இயேசுவைப் பின்செல்வோர் இறைவாக்கினை ஏற்று, கடவுளின் ஞானத்தைப் பெற்ற மனிதராக வாழ வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களுக்கு அளித்துள்ள இறைவாக்குப் பணியை நாங்கள் ஞானத்துடன் செயல்படுத்த எங்களுக்கு அருள்தாரும்.