யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 15வது வாரம் சனிக்கிழமை
2016-07-16

புனித கார்மேல் அன்னை பெருவிழா




முதல் வாசகம்

வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 2: 1-5

தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கை வலிமையினால் அவர்கள் அதைச் செய்து முடிக்கின்றார்கள். வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்; வீடுகள்மேல் இச்சை கொண்டு அவற்றைக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள்; ஆண்களை ஒடுக்கி, அவர்கள் வீட்டையும் உரிமைச் சொத்தையும் பறிமுதல் செய்கின்றார்கள். ஆதலால் ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இனத்தாருக்கு எதிராகத் தீமை செய்யத் திட்டமிடுகிறேன்; அதனின்று உங்கள் தலையை விடுவிக்க உங்களால் இயலாது; நீங்கள் ஆணவம் கொண்டு நடக்க மாட்டீர்கள்; ஏனெனில் காலம் தீயதாய் இருக்கும். அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி இரங்கற்பா இயற்றி, `அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே; ஆண்டவருடைய மக்களின் உரிமைச் சொத்து கைமாறி விட்டதே! நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றாரே!' என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள். ஆதலால், நூல் பிடித்துப் பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் எவனும் ஆண்டவரின் சபையில் இரான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, எளியோரை மறந்துவிடாதேயும்
திருப்பாடல் 10: 1-2. 3-4. 7-8. 14 (

1 ஆண்டவரே, ஏன் தொலையில் நிற்கின்றீர்? தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்து கொள்கின்றீர்? 2 பொல்லார் தம் இறுமாப்பினால் எளியோரைக் கொடுமைப் படுத்துகின்றனர்; அவர்கள் வகுத்த சதித் திட்டங்களில் அவர்களே அகப்பட்டுக் கொள்வார்களாக. பல்லவி

3 பொல்லார் தம் தீய நாட்டங்களில் தற்பெருமை கொள்கின்றனர்; பேராசையுடையோர் ஆண்டவரைப் பழித்துப் புறக்கணிக்கின்றனர். 4 பொல்லார் செருக்கு உள்ளவராதலால் அவரைத் தேடார்; அவர்கள் எண்ணமெல்லாம் `கடவுள் இல்லை' என்பதே. பல்லவி

7 அவர்களது வாய் சாபமும் கபடும் கொடுமையும் நிறைந்தது; அவர்களது நாவினடியில் கேடும் தீங்கும் இருக்கின்றன. 8 ஊர்களில் அவர்கள் ஒளிந்து காத்திருக்கின்றனர்; சூதறியாதவர்களை மறைவான இடங்களில் கொலை செய்கின்றனர்; திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர். பல்லவி

14 ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்; கேட்டையும் துயரத்தையும் பார்த்து, உதவி செய்யக் காத்திருக்கின்றீர்; திக்கற்றவர் தம்மை உம்மிடம் ஒப்படைக்கின்றனர்; அனாதைக்கு நீரே துணை. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 14-21

அக்காலத்தில் பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்கள் எல்லாரையும் அவர் குணமாக்கினார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார். இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின: ``இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்து கொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார். இவர் சண்டை சச்சரவு செய்ய மாட்டார்; கூக்குரலிட மாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை, நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார். எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்'' (மத்தேயு 12:14-15)

திருச்சட்டம் மனிதரின் நலனுக்காகவே அளிக்கப்பட்டது என்பது இயேசு அளித்த விளக்கம். ஆனால் சட்டத்தின் பிடியில் மக்களை அடக்கிவைக்க விரும்பிய பரிசேயரோ மக்களின் உண்மையான நலன் பற்றிக் கவலைப்படவில்லை. எனவே, அவர்கள் மனிதருக்காகப் பரிந்துபேசிய இயேசுவைத் தங்கள் எதிரியாகப் பார்த்தார்கள். அவரை ஒழித்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். இவ்வாறு செயல்பட்ட பரிசேயர் உண்மையைத் தேடிட மறுத்தார்கள். கடவுள் மனிதரிடமிருந்து எதிர்பார்ப்பது என்னவென்பதைப் பரிசேயர்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. மாறாக, தங்களுக்குக் கடவுளின் எண்ணம் தெளிவாகவே தெரியும் என அவர்கள் நினைத்து இறுமாந்திருந்தார்கள். ஆனால் இயேசுவோ கடவுளின் திருவுளத்தைத் தம் வாழ்வில் நிறைவேற்றுவதையே தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். மனிதருக்கு நலன் கொணர்வதே அவருடைய இலக்காக இருந்தது. அவர் மக்களுக்குக் குணமளித்தது அவருடைய இரக்கத்தின் வெளிப்பாடாக அமைந்தது (மத் 12:15). -- இயேசு மக்களுக்குப் புரிந்த பணி கடவுளின் அன்பை அவர்களோடு பகிர்ந்துகொள்வதில் அடங்கியது. கடவுள் தம் மகனாகிய இயேசுவை அன்புசெய்து, அவரைத் தம் ஆவியால் வழிநடத்தினார். ''இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்'' என எசாயா நூலில் வருகின்ற கூற்று இயேசுவின் வாழ்வில் உண்மையாயிற்று என மத்தேயு காட்டுகிறார் (காண்க: மத் 12:18; எசா 42:1). இயேசு திருமுழுக்குப் பெற்றபோது அவர்மீது கடவுளின் ஆவி இறங்கினார்; இயேசு கடவுளின் மகன் என அறிவிக்கப்பட்டார் (மத் 3:17). அதுபோலவே, இயேசு உருமாற்றம் பெற்றபோது, ''என் அன்பார்ந்த மைந்தர் இவரே'' என்னும் முழக்கம் வானிலிருந்து வந்தது (மத் 17:15). கடவுளின் ஆவியால் இயக்கப்பட்ட இயேசுவின் வாழ்வில் தாழ்ச்சியும் எளிமையும் துலங்கியது (மத் 12:19-20; காண்க: மத் 11:29; 21:4-5). அதே பண்புகள் இயேசுவின் சீடர்களுடைய வாழ்விலும் துலங்கிட வேண்டும். துன்பங்கள் நம்மை எதிர்கொண்டு வந்தாலும் கடவுளின் துணை நமக்கு என்றுமே உண்டு என இயேசு நமக்கு உணர்த்துகிறார்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் உம் திருவுளத்திற்கு இசைய வாழ்ந்திட அருள்தாரும்.