யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 15வது வாரம் புதன்கிழமை
2016-07-13




முதல் வாசகம்

வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 10: 5-7,13-16

ஆண்டவர் கூறியது: அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது; தண்டனை வழங்க நான் ஏந்தும் தடி அது. இறைப் பற்றில்லா நாட்டினர்க்கு அந்நாட்டை நான் அனுப்புகிறேன்; எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க அதற்கு ஆணை கொடுக்கிறேன்; அம்மக்களைக் கொள்ளையிடவும் அவர்கள் பொருள்களைச் சூறையாடவும், தெருவில் கிடக்கும் சேற்றைப்போல அவர்களை மிதித்துப் போடவும், அதற்குக் கட்டளை தருகிறேன். அசீரிய அரசன் நினைப்பதோ வேறு, அவனது உள்ளத்தில் எழும் திட்டங்கள் வேறு; மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத் தன் இதயத்தில் எண்ணுகிறான்; பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த அவன் விரும்புகிறான். ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்: ``என் கை வலிமையாலே நான் அதைச் செய்து முடித்தேன்; என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மை யாலும் அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்; மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள எல்லைகளை அகற்றினேன்; அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்; அரியணையில் வீற்றிருந்தோரை ஒரு காளை மிதிப்பதுபோல் மிதித்துப்போட்டேன். குருவிக் கூட்டைக் கண்டு பிடிப்பதுபோல் என் கை மக்களினங்களின் செல்வங்களைக் கண்டு எடுத்துக்கொண்டது; புறக்கணித்த முட்டைகளை ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல் நாடுகள் யாவற்றையும் ஒருங்கே சேர்த்துக்கொண்டேன். எனக்கெதிராக ஒருவரும் இறக்கை அடிக்கவில்லை. வாய் திறக்கவில்லை, கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை.'' வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ? அறுப்பவனைவிடத் தன்னைச் சிறப்பு மிக்கதாக வாள் கருத இயலுமோ? தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக் கைத் தடியால் கூடுமோ? மரம் அல்லாத மனிதனைத் தூக்க மரத்தால் ஆன கோலால் இயலுமோ? ஆதலால் தலைவராகிய படைகளின் ஆண்டவர் பாழாக்கும் கொள்ளை நோயை அவனுடைய கொழுத்த வீரர்கள்மேல் அனுப்புவார்; அவனது மேன்மையின்கீழ் தீ ஒன்றை வைப்பார்; அவர் நெருப்பு மூட்டுவார்; அது கொழுந்துவிட்டு எரியும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்.
திருப்பாடல் 94: 5-6. 7-8. 9-10. 14-15

5 ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்; உமது உரிமைச் சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர். 6 கைம்பெண்டிரையும் அன்னியரையும் அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்; திக்கற்றவரை அவர்கள் கொலை செய்கின்றனர். பல்லவி

7 `ஆண்டவர் இதைக் கண்டுகொள்வதில்லை; யாக்கோபின் கடவுள் கவனிப்பதில்லை' என்கின்றனர். 8 மக்களிடையே அறிவிலிகளாய் இருப்போரே, உணருங்கள்; மதிகேடரே, எப்பொழுது நீங்கள் அறிவு பெறுவீர்கள்? பல்லவி

9 செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ? கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ? 10 மக்களினங்களைக் கண்டிப்பவர், மானிடருக்கு அறிவூட்டுபவர் தண்டியாமல் இருப்பாரோ? பல்லவி

14 ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார். 15 தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன் வழி நடப்பர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27

அக்காலத்தில் இயேசு கூறியது: ``தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அவ்வேளையில் இயேசு, 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்'...என்றார்'' (மத்தேயு 11:25)

சாக்கடல் அருகே கும்ரான் என்னும் பகுதியில் வாழ்ந்த துறவியர் பயன்படுத்திய ''நன்றிக் கீதம்'' போலவும், யோவான் நற்செய்தியில் இயேசு தந்தையை நோக்கி எழுப்புகின்ற வேண்டுதல் போலவும் அமைந்த ஒரு மன்றாட்டை இயேசு எழுப்புகிறார் (மத் 11:25-27; காண்க: லூக் 10:21-22). இதில் உலகைப் படைத்துக் காக்கும் கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு வெளிப்படுகின்றது. அது ஓர் ஆழ்ந்த, நெருக்கமான உறவு. கடவுள் யார் என்பதை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். ஏதோ கடவுள் ஒரு சிலரை மட்டும் தேர்ந்துகொண்டு பிறரைத் தண்டனைக்கு உட்படுத்துகிறார் என்னும் முடிவு சரியல்ல. அதுபோலவே, கடவுளைப் பற்றி ஆழமாக அறிந்திட மனித அறிவு முயல்வதை இயேசு கண்டிக்கிறார் என்பதும் சரியல்ல. மாறாக, மனித அறிவு எல்லைகளுக்கு உட்பட்டதே என்னும் உண்மையை இயேசு உணர்த்துகிறார். நம் சொந்த அறிவால் கடவுளை நாம் முழுமையாக அறிந்திட இயலாது. எனவேதான் கடவுளின் முன்னிலையில் நாம் ''குழந்தைகளாக'' மாறிட வேண்டும். குழந்தைகள் தம் தேவைகளை நிறைவு செய்ய தம் பெற்றோரைச் சார்ந்திருக்கின்றன. அதுபோல நாமும் நம் தந்தையும் தாயுமாகிய கடவுளிடமிருந்து அனைத்தையும் பெறுகின்றோம் என்னும் உணர்வோடு வாழ வேண்டும்; நன்றியுடையோராகச் செயல்பட வேண்டும்.

மேலும், இயேசுவின் போதனையை அறிந்து புரிந்துகொள்வதில் அவருடைய சீடர்களும் ஒருவிதத்தில் ''குழந்தைகளே''. அதாவது, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் பல உண்டு. இது நமக்கும் பொருந்தும். கடவுளைப் பற்றியும் அவர் உருவாக்கிய உலகு மற்றும் மனிதர் பற்றியும் நாம் அறிந்து, கடவுளை முழு மனத்தோடு அன்பு செய்து, மனித சமுதாயத்தின் நலனுக்காக உழைப்பதில் நாமும் ''குழந்தைகளாகவே'' இருக்கிறோம். கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதுபோல நாம் ''ஞானம்'' பெற்றிட உழைக்க வேண்டும். அதே நேரத்தில் கடவுளின் முன்னிலையில் குழந்தைகளாகவே நாம் இருக்கிறோம் என்பதையும் ஏற்று, அவருடைய அருளை நன்றியோடு ஏற்றிட எந்நாளும் நம் இதயத்தைத் திறந்திட வேண்டும். அப்போது இயேசுவின் வழியாகக் கடவுள் வழங்குகின்ற வெளிப்பாடு நம் உள்ளத்தில் ஒளியாகத் துலங்கி நம் பயணத்தில் நமக்கு வழிகாட்டியாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, உமது ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும்.