யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 15வது வாரம் திங்கட்கிழமை
2016-07-11

புனித பெனடிக்ற்




முதல் வாசகம்

உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 11-17

எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?'' என்கிறார் ஆண்டவர். ``ஆட்டுக்கிடாய்களின் எரிபலிகளும், கொழுத்த விலங்குகளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டன: காளைகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை. நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது, இவற்றை எல்லாம் கொண்டு வந்து என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டும் என்று கேட்டது யார்? இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டு வர வேண்டாம்; நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது; நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அமாவாசை, ஓய்வு நாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன். உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும் என் உள்ளம் வெறுக்கின்றது; அவை என் மேல் விழுந்த சுமையாயின; அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன். என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும்போது, பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்; நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பது இல்லை; உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன. உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.
திருப்பாடல் 50: 8-9. 16-17. 21,23

நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. 9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை. பல்லவி

16bஉ என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி

21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன். 23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப் படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 34-11: 1

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். என்னை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னை விடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர். உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார். இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.'' இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

போலி வழிபாடுகளுக்குச் சாட்டையடி ! (முதல் வாசகம்)

இறைவாக்கினர் எசாயா வழியாக போலி வழிபாடுகளுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறார் இறைவன். பலிகள், காணிக்கைகள், வழிபாடுகள் அனைத்தும் இறைவனுக்கு ‘ அருவருப்பையே’ தருகின்றன என்பது மிகவும் கடினமான ஒரு செய்தி. இறைவன் விரும்புவது துhய்மையான இதயத்தையே. #8220;நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். நீதியை நாடித் தேடுங்கள். ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள். திக்கற்றோருக்கு உதவி செய்யுங்கள். கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்” என்பதே இறைவனின் தெளிவான அழைப்பு. மத்தேயு 25ஆம் அதிகாரத்தில் இயேசு விடுக்கின்ற இதே அழைப்பு ஏழைகளுக்கு, ஒடுக்கப்பட்டோருக்கு, தேவையில் உழல்வோருக்கு உதவுவதே மிகச் சிறந்த இறைவழிபாடு என்று எடுத்துச் சொல்கிறது. எசாயா இறைவாக்கினரின் இந்த எச்சரிக்கையை எப்போதும் இதயத்தில் கொள்வோம்.

மன்றாட்டு:

ஒடுக்கப்பட்டோரின் புகலிடமான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தைகளை மனதில் ஏற்று, போலி வழிபாடுகளைத் தவிர்த்து, எளியேரின் வடிவில் உம்மைக் கண்டு உமக்குப் பணிவிடைபுரிய அருள்தாரும். ஆமென்.