யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 12வது வாரம் புதன்கிழமை
2016-06-22




முதல் வாசகம்

ஆண்டவர் திருமுன் அரசர் யோசபாத்து உடன்படிக்கை செய்துகொண்டார்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 22: 8-13; 23: 1-3

அந்நாள்களில் தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, �ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன்� என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான். பின் எழுத்தன் சாப்பான் அரசரிடம் வந்து பதில் மொழியாக, �அரசே! உம் அடியார்கள் கோவிலில் கிடைத்த பணத்தைச் சேகரித்து, ஆண்டவரின் இல்லத்தில் வேலை செய்வோரின் மேற்பார்வையாளரிடம் கொடுத்து விட்டனர்� என்று சொன்னான். மேலும் அவன் அரசரிடம், �குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார்� என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான். அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார். பின் குரு இல்க்கியாவையும், சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்கோரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, �அரசர் இட்ட கட்டளை இதுவே: நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். ஏனெனில் இந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் மூதாதையர்கள் செவிகொடுக்கவும் இல்லை. அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவரின் சினம் நமக்கெதிராகக் கொழுந்து விட்டு எரிகிறது� என்றார். அரசரது அழைப்புக்கிணங்கி யூதாவிலும் எருசலேமிலும் இருந்த பெரியோர்கள் யாவரும் அவரிடம் வந்து குழுமினர். அப்பொழுது அரசரும், யூதா நாட்டினர் அனைவரும், எருசலேம் குடிகள் அனைவரும், குருக்களும், இறைவாக்கினரும், சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவரும் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தனர். அரசரோ ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை நூலில் எழுதப்பட்டிருந்த யாவற்றையும் அவர்கள் காதில் விழுமாறு வாசித்தார். அரசர் தூணருகில் நின்று கொண்டு ஆண்டவரைப் பின்பற்றி நடப்பதாகவும், அவருடைய விதிமுறைகளையும், ஒழுங்கு முறைகளையும், நியமங்களையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும், அந்நூலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்துகொண்டார். மக்களும் அவ்வுடன்படிக்கைக்கு உடன்பட்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியைக் கற்றுத்தாரும்.
திருப்பாடல் 119: 33-34. 35-36. 37,40

33 ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன். 34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். பல்லவி

35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 36 உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்; தன்னலத்தை நாட விடாதேயும். பல்லவி

37 வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களைத் திருப்பிவிடும்; உம் வழிகளின் வாயிலாய் எனக்கு வாழ்வளித்தருளும். 40 உம் நியமங்களைப் பெரிதும் விரும்பினேன்; நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு வாழ்வளியும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்து கொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது. நல்ல கனி கொடாத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இவையே நிஐம்

மனித வாழ்க்கை நன்றாக இருக்க போலிகளை உருவாக்கக் கூடாது. போலிகளை இனம்கண்டு அவைகளை அழிக்க வேண்டும். போலிகளை உருவாக்குவதும் மனிதன்தான். அதை அழிக்க முடியாமல் பல இழப்புக்ளைச் சந்திப்பதும் அதே மனிதன்தான்.பொருட்களில் உள்ள போலிகள் கூட, மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி, மனிதனைப் பல சிரமங்களுக்குள்ளாக்கிவிடுகிறது.

கள்ள நோட்டுகள் பொருளாதரத்தைத் சிதைத்துவிடுகிறது. போலி மருத்துவர், மனிதனின் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார். இதுவே போலி இறைவாக்கினர் என்றால்,பொருளும் உயிரும் ஆன்மாவும் பாதிப்புக்குள்ளாகிவிடுகிறது. இவ்வுலக வாழ்வும் மறுவுலக வாழ்வும் பாதிக்கப்படுகிறது. ஆகவே, போலி இறை வாக்கினர்கள் மனிதர்களுக்குப் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் மட்டில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என இயேசு எச்சரிப்பது சரியானதே.

உண்மை இறைவாக்கினர்கள், சமுதாயத்தின் பொய்த் திறைகளுடன் சமரசம் பேசாத நெருப்புச் சுவாலைகள். சமுதாயத்தின் அரசியல் குழப்பங்களிலும் ஒழுக்கச் சரிவுகளிலும் தனித்து ஒலிக்கும் ஒலிவாங்கிகள். கடவுளின் கருத்துக்களை ஓங்கி ஒலிக்கும் இறைவனின் குரல் நாண்கள். பாசப்பிணைப்புகளால், ஆசை அலைகளால் அசைக்கமுடியாத வச்சிரத் தூண்கள். ஆழமான ஆன்மீகத்தால், செப உறவால் இறைவனோடு இருக்கமாகக் கட்டப்பட்டவர்கள். அர்ப்பணத்திலும் கீழ்ப்படிதலிலும் தம்மை தகனப்பலியாக்கும் தியாகச் செம்மல்கள். தீமைகளை அஞ்சாது வேரறுக்கும் வீர வாள்கள். இக்கனிகளைக்கொண்டு உண்மை இறைவாக்கினர்களை அடையாளம் காண்போம்.அவர்களைப் பாராட்டுவோம்; அவர்கள் வழி நடப்போம் .

மன்றாட்டு:

இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ அருள்தாரும் ஆமென்.