யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 11வது வாரம் சனிக்கிழமை
2016-06-18




முதல் வாசகம்

அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார்
குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 17-25

யோயாதா இறந்தபின், அரசர் தம்மைப் பணிந்து நின்ற தலைவர்களின் சொற்களுக்கு இணங்கினார். அதனால் அவர்கள் தங்கள் முன்னோர்களின் கடவுளான ஆண்டவரின் இல்லத்தைப் புறக்கணித்து, அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் வழிபட்டனர். அவர்கள் செய்த இப்பாவத்தின் பொருட்டு யூதாவின் மேலும் எருசலேமின் மேலும் இறைவன் கடுங்கோபம் கொண்டார். அவர்கள் தம்மிடம் மீண்டும் வருவதற்கு ஆண்டவர் அவர்களிடம் இறைவாக்கினர்களை அனுப்பினார். அவர்களும் மக்களைக் கண்டித்தனர். ஆனால் அவர்கள் செவி கொடுக்கவில்லை. அப்போது கடவுளின் ஆவி குரு யோயாதாவின் மகன் செக்கரியாவின் மேல் இறங்கியது; அவர் மக்கள் முன் நின்று அவர்களை நோக்கி: ``இதோ, கடவுள் கூறுகிறார்: ஆண்டவரின் கட்டளைகளை மீறுவதேன்? அதனால் நீங்கள் வாழ்வில் முன்னேற மாட்டீர்களே! ஆண்டவரை நீங்கள் புறக்கணித்ததால், அவரும் உங்களைப் புறக்கணித்துள்ளார்'' என்று கூறினார். அவர்கள் அவருக்கு எதிராகச் சதி செய்து, அரசரின் ஆணைக்கேற்ப ஆண்டவரின் இல்லத்து மண்டபத்தில் அவரைக் கல்லால் எறிந்து கொன்றனர். அவர் தந்தை யோயாதா காட்டிய பேரன்பை மறந்து, அரசர் யோவாசு செக்கரியாவைக் கொல்லச் செய்தார். அவர் இறக்கும்போது, ``ஆண்டவர் இதைக் கண்டு பழிவாங்குவாராக!'' என்றார். அடுத்த ஆண்டு, சிரியாப் படையினர் அவருக்கு எதிராக வந்து, யூதாவிலும் எருசலேமிலும் புகுந்து மக்களின் எல்லாத் தலைவர்களையும் கொன்று அழித்தனர். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தமஸ்கு மன்னனிடம் அனுப்பி வைத்தனர். சிரியர் மிகச் சிறு படையுடன்தான் வந்தனர்; இருப்பினும், தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரை இஸ்ரயேலர் புறக்கணித்ததால், ஆண்டவர் அவர்களது பெரும் படையைச் சிரியரின் கையில் ஒப்புவித்தார். அவர்கள் யோவாசைச தண்டித்தனர். கடும் காயமுற்ற நிலையில் யோவாசைச் சிரியர் விட்டுச் சென்றனர். அவருடைய அலுவலர்களோ அவருக்கு எதிராகச் சதி செய்து, குரு யோயாதாவின் மகனின் இரத்தப் பழியின் பொருட்டு அவரது படுக்கையிலேயே அவரைக் கொன்றனர். தாவீதின் நகரத்தில் அவர் சடலத்தை அடக்கம் செய்தனர்; ஆனால் அரசர்களின் கல்லறைகளில் அவரை அடக்கம் செய்யவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.
திருப்பாடல் 89: 3-4. 28-29. 30-32. 33

3 `நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. பல்லவி

28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். 29 அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன். பல்லவி

30 அவன் புதல்வர் என் திருச்சட்டத்தைக் கைவிட்டாலோ, என் நீதி நெறிகளின்படி நடக்காவிடிலோ, 31 என் விதிகளை மீறினாலோ, என் கட்டளைகளைக் கடைப் பிடிக்காவிடிலோ, 32 அவர்களது குற்றத்திற்காக அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்; அவர்களின் தீச்செயலுக்காக அவர்களைக் கசையால் அடிப்பேன் பல்லவி

33 ஆயினும், என் பேரன்பை தாவீதை விட்டு விலக்க மாட்டேன்; என் வாக்குப் பிறழாமையினின்று வழுவ மாட்டேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராய் இருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வர் ஆகுமாறு உங்களுக்காக ஏழையானார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-34

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதும் இல்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூற்பதும் இல்லை. ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப்போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாய்ச் செய்ய மாட்டாரா? ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றை எல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள் !

இன்றைய நற்செய்தி வாசகம் ஏராளமான வாழ்வியல் கருத்துகளை உள்ளடக்கியுள்ளது. அவற்றில் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழிபிறக்கும்” என்னும் வரிகளை மட்டும் இன்று நம் மனதில் ஏற்றுவோம். இறைவன் நமது வானகத் தந்தை. எனவே, நமது தேவைகள் அனைத்தையும் அவர் அறிவார், அவற்றை அவரது திருவுளத்திற்கேற்ப நிறைவேற்றித் தருவார். எனவே, பறவைகளைப் போல, மலர்களைப் போல கவலைப்படாமல் வாழ்வோம். பறவைகளை உண்பிக்கும் இறைவன், மலர்களை அழகுபடுத்தும் தந்தை நம்மையும் பராமரிப்பார். எனவே, நாளைய தினத்தைப் பற்றிக் கவலை வேண்டாம். இன்றைய நாளை இனிய நாளாகக் கொண்டாடுவோம். மகிழ்ச்சி அடைவோம். நம்மில் பலர் நாளைய தினத்தைப் பற்றிய கவலையில், இன்றைய நாளை அனுபவிக்கத் தவறி விடுகிறோம். இதோ, இந்த நாள், இந்த நேரம் இறைவனின் இனிமையான பராமரிப்பை உணர்வோம். நன்றி கூறுவோம். நாளைய கவலைகளைப் போக்குகின்ற வழியை இறைவனே நமக்குத் தருவார், இன்றல்ல: நாளை. எனவே, இந்த நேரத்தை மனநிறைவுடன் கழிப்போம்.

மன்றாட்டு:

காலத்தை வென்ற காவிய நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இந்த நாளுக்காக, இந்த நேரத்துக்காக நன்றி. இன்றைய நாளில் நீர் எனக்குச் செய்துள்ள அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகிறேன். நாளைய தேவைகளையும், கவலைகளையும் நீரே பொறுப்பேற்றுக்கொள்வீர் என்ற நம்பிக்கையில், இறைவா, உமக்கே நன்றி,