யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

(இன்றைய வாசகங்கள்: 2சாமுவேல் 12:7-10,13, கலாத்தியர 2: 16,19-21, லூக்கா 7:36-8:3



அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, 
தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, 
தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.


திருப்பலி முன்னுரை

நம்பிக்கைக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் பதினோராம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம். நம்பிக்கை மற்றும் அன்பால் கடவுளுக்கு ஏற்புடையோர் ஆகுமாறு இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது பலவீனத்தால் நாம் பல பாவங்களை செய்து கடவுளின் அன்பில் இருந்து விலகி விடுகிறோம். வாழ்வின் பல்வேறு துன்பச் சூழல்களால், கடவுள் மீதான நம்பிக்கையை இழந்து உலகப் போக்கில் இன்பம் காண முயற்சிக்கிறோம். இன்றைய நற்செய்தியில் வரும் பெண்ணைப் போன்று நமது பாவ நிலையை உணர்ந்து, கடவுளின் காலடிகளில் தஞ்சமடைய நாம் அழைக்கப்படுகிறோம். நமது மனமாற்றத்தை கண்ணீராய் வெளிப்படுத்தும்போது, கடவுளின் கருணை உள்ளத்தை நாம் கண்டுகொள்ள முடியும். மனம் திரும்பிய புது வாழ்வால், ஆண்டவருக்கு உகந்தோராய் மாறும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12: 7-10,13

அந்நாள்களில் நாத்தான் தாவீதிடம், “நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்; நான் உன்னைச் சவுலின் கையினின்று விடுவித்தேன். உன் தலைவரின் வீட்டை உன்னிடம் ஒப்படைத்தேன்; அவன் மனைவியரையும் உனக்கு மனைவியர் ஆக்கினேன்; இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்; இது போதாதென்றால் உனக்கு மேலும் மிகுதியாய்க் கொடுத்திருப்பேன். பின் ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீயது செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இரையாக்கி, அவன் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்; அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்! இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது; ஏனெனில் நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்.’ '' அப்போது தாவீது நாத்தானிடம், “நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்” என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், “ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.
திருப்பாடல் 32: 1-2. 5. 7. 11

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ, அவர் பேறுபெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி

5 `என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி

7 நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். பல்லவி

11 நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 16,19-21

சகோதரர் சகோதரிகளே, திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம். ஆதலால்தான் நாமும் சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, நம்பிக்கையால் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகுமாறு கிறிஸ்து இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் எவருமே இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை. திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார். நான் கடவுளின் அருள் பயனற்றுப்போக விடமாட்டேன். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக் கூடுமானால் கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா ! கடவுள் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார். அல்லேலூயா !

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 36-8: 3

அக்காலத்தில் பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு, அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ``இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே'' என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். இயேசு அவரைப் பார்த்து, ``சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்'' என்றார். அதற்கு அவர், ``போதகரே, சொல்லும்'' என்றார். அப்பொழுது அவர், ``கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன் பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?'' என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, ``அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்'' என்றார். இயேசு அவரிடம், ``நீர் சொன்னது சரியே'' என்றார். பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், ``இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்'' என்றார். பின்பு அப்பெண்ணைப் பார்த்து, ``உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன'' என்றார். ``பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?'' என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அப்பெண்ணை நோக்கி, ``உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க'' என்றார். அதற்குப் பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நம்பிக்கை அளிப்பவராம் இறைவா,

உமது திருச்சபையின் மக்கள் விசுவாசத்திலும் அன்பிலும் வளரத் தேவையான வழி காட்டுதலை அளிக்கும் ஞானத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும், வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. தூண்டுதல் தருபவராம் இறைவா,

உலகில் வாழும் பிற சமயத்தினர் உமது உண்மையின் ஒளியைக் காணவும், உம்மில் நம்பிக்கை கொண்டு உம்மையும் பிறரையும் அன்பு செய்து வாழவும் தூண்டுதல் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. எம் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கிவிடும் தந்தையே!

விசுவாசமில்லாத சடங்குகளும், சம்பிரதாயங்களும் பயனற்றவையே என்னும் உண்மையை ஆழமாக உணர்ந்து கிறிஸ்து எம்மில் வாழ்வதை மற்றவர்கள் கண்டுணரக்கூடிய வித்தில் எமது வாழ்வும், செயல்களும் அமைய, எமக்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. மன்னிப்பு அருள்பவராம் இறைவா,

உலகில் பிறர் உடைமைகள் மீதும், பிறருக்கு உரியவர்கள் மீதும் ஆசை கொண்டு, உமது விருப்பத்துக்கும், பிறரன்பு கட்டளைக்கும் எதிரான பாவங்களில் சிக்கித் தவிப்போரை அவற்றிலிருந்து மீட்டிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. எம் கடவுளாகிய தந்தையே இறைவா!

எமது இளைஞர்கள் அனைவரும் உம் திருமகனும், எங்கள் ஆண்டவருமாகிய இயேசுவைத் தங்கள் முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வதற்கு வேண்டிய நல்லள்ளத்தை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

உடைமைகளைக் கொண்டு பணிவிடை !

விருந்தோம்புதல் நம்முடைய நல்ல பழக்கம். அதனை விரும்பி செய்தால் உறவு உறுதிப் பெறும். விருந்தோம்புதல் இன்று கடமைக்காக அமைந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. பரபரப்பாக இருப்பதும், பராமுகமாக இருப்பதும், இன்று அதிகரித்துப் போய் விட்டதால் விருந்தோம்புதல் இன்று அர்த்தம் இழந்து போகின்றது. நம்முடைய கலாச்சராத்தின் வேர்களுக்கு சென்று நம்முடைய பழக்கத்தை புதுப்பித்துக் கொள்வது காலத்தின் கட்டாயம். விருந்தோம்புதலில் வருவோரின் தேவை அறிந்து, நம்முடைய கரிசனை, அன்பு, பரிவு, இரக்கம் இவற்றின் அடிப்படையில் கவனிப்பது தான் சிறப்பு.

மன்றாட்டு:

இறையாட்சியின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறேன். என்னை உம் சீடனாக, அன்புப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டதற்காக நன்றி கூறுகிறேன். உமக்குப் பணிவிடை செய்வதே என் வாழ்வும், கடமையும் என்பதை உணர்ந்து என் வாழ்வை, என்னை முழுவதும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். எனக்கு உடைமையாக நீர் தந்த அனைத்தையும் கொண்டு உமக்குப் பணிவிடை செய்ய எனக்கு அருள்தாரும். ஆசிர்வதியும்.