யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் சனிக்கிழமை
2016-06-11

பனித பர்னபாஸ்




முதல் வாசகம்

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11;21-26 13;1-3

21அந்நாட்களில் ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந் தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். 22 இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்று வர அனுப்பிவைத்தார்கள். 23 அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். 24 அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார். 25 பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார் 26 அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஒராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள். அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.1 அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, நீகர் எனப்படும் சிமியோன், சிரோன் ஊரானாகிய லூக்கியு, குறநில மன்னன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினராகவும், போதகராகவும் இருந்தனர். 2 அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், "பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்" என்று கூறினார். 3 அவர்கள் நோன்பிலிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
திருப்பாடல்98;1-6

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். பல்லவி

3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். பல்லவி

4 உலகெங்கும் வாழ்வோரே! ஆனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

5 யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். பல்லவி

6 ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள், பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்10;7-13

அந்நாட்களில் யேசு சீடர்களை நோக்கி விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ' எனப் பறைசாற்றுங்கள்.8 நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.9 பொன், வெள்ளி, செப்புக் காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம்.10 பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே.11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாக இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்' என்றார்'' (மத்தேயு 5:13-14)

''மலைப் பொழிவு'' என்னும் பகுதி மத்தேயு நற்செய்தியில் வருகின்ற இயேசு ஆற்றிய ஐந்து பெரிய போதனைப் பகுதிகளில் முதலாவதாகும் (அதி. 5-7). எஞ்சிய நான்கும் முறையே திருத்தூதுப் பொழிவு (அதி. 10), உவமைப் பொழிவு (அதி. 13), திருச்சபைப் பொழிவு (அதி. 18), நிறைவுகாலப் பொழிவு (அதி. 24-25) என அழைக்கப்படுகின்றன. இயேசு கடவுளாட்சி பற்றி வழங்கிய போதனைகளை மத்தேயு இவ்வாறு தொகுத்து வழங்கியுள்ளார். மலைப் பொழிவின்போது இயேசு தம் சீடரை நோக்கி, ''நீங்கள் மண்ணுலகிற்கு உப்பு...நீங்கள் உலகிற்கு ஒளி'' (மத் 5:13-14) என்று கூறுகிறார். ''உப்பில்லாப் பண்டம் குப்பையிலே'' என்னும் பழமொழிக்கு ஏற்ப, உப்பு உணவுக்குச் சுவை சேர்க்கிறது. பொருள்கள் கெட்டுவிடாமல் பாதுகாக்கவும், தூய்மையாய் இருக்கவும் உப்பு பயன்படுகிறது (காண்க: யோபு 6:6; சிஞா 39:26; 2 அர 2:19-22). இஸ்ரயேல் மக்கள் நடுவே உடன்படிக்கை செய்யப்பட்டபோது உப்பு பயன்பட்டது (எண் 18:19; 2 குறி 13:5). வழிபாட்டின்போதும் உப்பு இடம்பெற்றது (விப 30:35; லேவி 2:13; எசே 43:24; எஸ் 4:14; திப 1:4). நிலம் செழிப்பாக இருக்க உப்பு அதில் உப்பு இருக்க வேண்டும். இயேசு உப்பு என்னும் உருவகத்தை எப்பொருளில் பயன்படுத்தினார்? சீடர்கள் உப்பைப் போல இந்த உலகிற்குச் சுவை கூட்ட வேண்டும். இவ்வாறு மக்கள் கடவுளின் அன்பைச் சுவைக்க முடியும். சீடர்கள் இவ்வுலகைத் தூய்மைப்படுத்தி, அது கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டும். உப்பு தன் காரத்தை இழந்துவிடக் கூடாது. அதுபோல சீடர்களும் துன்பங்களுக்கு நடுவே தங்கள் உள உறுதியை இழந்துவிடலாகாது (மத் 5:11-12).

சீடர்கள் ''உலகுக்கு ஒளி'' என இயேசு கூறுகிறார் (மத் 5:14). உரோமைப் பேரரசு தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்திய காலத்தில் உரோமை நகரம் ''உலகின் ஒளி'' என்று போற்றப்பட்டது. ஆனால் இயேசு தம் சீடர்கள் ஏழையரின் உள்ளத்தவராய், இரக்கப் பண்பு நிறைந்தவராய், பிறருக்கு உதவுகின்ற வேளையில் உலகுக்கு ஒளியாக விளங்குவார்கள் என்று போதிக்கிறார். இத்தகைய ஒளி பிறருடைய வாழ்வை ஒளிமயமானதாக மாற்றும்; பிறரை அடக்கி ஆளுகின்ற போக்கு அங்கே இராது. இவ்வாறு, இயேசு தம் சீடர்கள் ''உலகுக்கு உப்பாகவும் ஒளியாகவும்'' இருக்கும்படி அழைக்கிறார். உப்பும் ஒளியும் பிறருக்குப் பயன்படுகின்றன. உணவில் சேர்க்கப்படுகின்ற உப்பு உணவுக்குச் சுவையூட்டும், ஆனால் தன்னையே கரைத்துவிடும். அதுபோல, விளக்குத் தண்டில் வைக்கப்பட்ட விளக்கு வீட்டிலிருக்கின்ற பொருள்கள் தெரியும் விதத்தில் ஒளிபரப்பும், ஆனால் தன்னை வெளிச்சமிட்டுக் காட்டாது. இவ்வாறு சீடர்களும் தாங்கள் புரிகின்ற நற்செயல்கள் வழியாகக் கடவுளுக்குப் பெருமை சேர்க்கவேண்டுமே ஒழிய, தம்மையே முன்னிறுத்தக் கூடாது. இயேசுவின் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற சீடர்கள் இன்றைய உலகம் கடவுளின் அன்பைச் சுவைக்க உதவுகின்ற ''உப்பாக'' மாற வேண்டும்; உலக மக்கள் கடவுளை நோக்கி நடந்து செல்ல வழிகாட்டுகின்ற ''ஒளியாக'' விளங்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஒளியால் நாங்களும் ஒளிர்ந்திட அருள்தாரும்.