யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் வெள்ளிக்கிழமை
2016-06-10




முதல் வாசகம்

மலைமேல் ஆண்டவர் திருமுன் வந்து நில்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 9ய,11-16

அந்நாள்களில் எலியா அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவர், வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்ல இருக்கிறேன் என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று ஒரு குரல் கேட்டது. அதற்கு அவர், படைகளின் கடவுளாகிய ஆண்டவர்மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர்; உம் பலி பீடங்களைத் தகர்த்து விட்டனர்; உம் இறைவாக்கினரை வாளால் கொன்று விட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர் என்றார். அப்போது ஆண்டவர் அவரிடம், நீ வந்த வழியே திரும்பித் தமஸ்குப் பாலைநிலம் நோக்கிச் செல். அவ்விடத்தை அடைந்தவுடன் அசாவேலைச் சிரியாவுக்கு மன்னனாகத் திருப்பொழிவு செய். நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசனாகத் திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.
திருப்பாடல் 27: 7-8. 8-9. 13-14

7 ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். 8 `புறப்படு, அவரது முகத்தை நாடு' என்றது என் உள்ளம். பல்லவி

8ய ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன். 9 உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: `` `விபசாரம் செய்யாதே' எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப் படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. `தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்' எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியை விட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையnனில், நீங்கள் விண்ணரசில் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றார்'' (மத்தேயு 5:20)

இயேசுவின் மலைப்பொழிவு பல போதனைகளை உள்ளடக்கியது. குறிப்பாக, இயேசு தம் சீடர்களுக்கும் மக்களுக்கும் ஒரு ''புதிய வாழ்க்கை முறை''யை அறிவிக்கின்றார். அதாவது பழைய நெறிக்குப் பதிலாக ஒரு புதிய நெறி நமக்கு வழங்கப்படுகிறது. முற்காலத்தில் கடவுளின் கட்டளைகளுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கத்தை இயேசு ஏற்றாலும் அந்த விளக்கத்தை விடவும் அதிக வேரோட்டமான விதத்தில் அவர் திருச்சட்டத்திற்கு விளக்கம் தருகின்றார். இது குறிப்பாக, ''கொலை'', ''விபசாரம்'', ''மண முறிவு'', ''பொய்யாணை''. ''பழிக்குப் பழி'', ''பிறர் மட்டில் அன்பு'' ஆகிய ஆறு பொருள்கள் பற்றிய கட்டளைகளுக்கு இயேசு தருகின்ற புதிய விளக்கத்தை உள்ளடக்கும். கொலை என்பது பிற மனிதரோடு நமக்குள்ள உறவு முற்றிலும் முறிந்துவிட்ட நிலையில் நிகழ்கின்ற குற்றம். கடவுள் மோசே வழியாக வழங்கிய சட்டம் ''கொலை செய்யாதே'' என்று கூறுகிறது (காண்க: விப 20:13; இச 5:18). ஆனால் பிறர்மட்டில் சினம் கொள்வதே தவறு என இயேசு போதிக்கிறார். கோபம் எழுகின்ற வேளைகளில் நல்லுறவை மீண்டும் ஏற்படுத்த நாம் முயல வேண்டும். இதை இயேசு மூன்று எடுத்துக்காட்டுகள் வழியாக விளக்குகின்றார். பிறரை நாம் ''அறிவிலியே'' என அழைப்பது தவறு; கடவுளுக்குக் காணிக்கை செலுத்திவிட்டால் முறிந்த உறவு சரியாகிவிடும் என்று எண்ணாமல், முறிந்த உறவை முதலில் சரிப்படுத்திவிட்டு, அதன் பின் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதே முறை; நீதி மன்றம் செல்கின்ற அளவுக்கு நாம் உறவுகளை முறித்துவிடலாகாது. இந்த மூன்று எடுத்துக்காட்டுகள் வழியாக நாம் உண்மையான அன்பைக் கடைப்பிடிக்கின்ற முறையை இயேசு விளக்குகிறார்.

எனவே, ''கொலை செய்யாதே'' என்னும் கட்டளையின் பொருள் பிறருடைய உயிரைப் பறிப்பது தவறு என்பதை மட்டும் குறிப்பதன்று. மாறாக, பிறரோடு நாம் கொள்ள வேண்டிய நல்லுறவுக்குத் தீங்கு விளைவிக்கின்ற சொல், செயல் அனைத்தையும் நாம் விலக்க வேண்டம். இவ்வாறு செய்தால் ''நம் நெறி மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியை விடச் சிறந்ததாய் இருக்கும்'' (காண்க: மத் 5:20). அப்போது நாம் கடவுளின் ஆட்சியில் பங்கேற்கத் தகுதி பெறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் பிறரன்பில் சிறந்து விளங்க அருள்தாரும்.