யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 9வது வாரம் வியாழக்கிழமை
2016-06-02




முதல் வாசகம்

நாம் இயேசுவோடு இறந்தோமானால், அவரோடு வாழ்வோம்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 8-15

அன்பிற்குரியவரே, தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன். பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: ‘நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்; நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.’ இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து. வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவது பயனற்றது; அது கேட்போரின் அழிவுக்கு ஏதுவாகும் எனக் கடவுள் முன்னிலையில் சான்று பகர்ந்திடு. நீ கடவுள் முன் ஏற்புடையோனாக நிற்க முழு முயற்சி செய்; உண்மையின் வார்த்தையை நேர்மையாய்ப் பகுத்துக் கூறும் பணியாளாகிய நீ வெட்கமுற வேண்டியதில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உம் பாதைகளை ஆண்டவரே, நான் அறியச் செய்தருளும்.
திருப்பாடல்25: 4-5. 8-9. 10,14

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5யb உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். 14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப் பிடிப்பேன் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28-34

அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார். அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, ‘கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது” என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மறைநூல் அறிஞருள் ஒருவர்...இயேசுவை அணுகிவந்து, 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?' என்று கேட்டார். அதற்கு இயேசு,...'உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக... உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்றார்'' (மாற்கு 12:28-31)

யூத சமயம் மக்களுக்குப் பல கட்டளைகளை வழங்கியிருந்தது. அக்கட்டளைகளுள் முக்கியமானது எது என்னும் கேள்விக்குப் பல யூத அறிஞர்கள் பதில் தந்தனர். இயேசுவை அணுகிச் சென்று ''அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?'' என்று கேட்ட மறைநூல் அறிஞர் நல்ல எண்ணத்தோடுதான் அக்கேள்வியைக் கேட்டார். இயேசு அவருக்கு அளித்த பதில் ''கடவுளை அன்பு செய்க; மனிதரை அன்பு செய்க'' என்பதாகும். இயேசு இப்பதிலைப் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டி எடுத்துரைக்கிறார் (காண்க: இச 6:4-5; லேவி 19:18). கடவுள் நம்மைப் படைத்து, பாதுகாத்து, அன்போடு வழிநடத்துகின்ற தந்தை. எனவே, அவரை நாம் முழுமையாக அன்புசெய்வது பொருத்தமே. அவரிடத்தில் நம்மை நாம் எந்தவித நிபந்தனையுமின்றிக் கையளித்திட வேண்டும். இது முதன்மையான கட்டளை. இதற்கு நிகரான கட்டளையாக இயேசு ''பிறரை அன்புசெய்க'' என்னும் வழிமுறையை நல்குகின்றார். நாம் எல்லா மனிதரையும் வேறுபாடின்றி அன்பு செய்ய அழைக்கப்டுகிறோம். இயேசு அன்புக் கட்டளை பற்றி அளித்த பதிலைக் கேட்ட மறைநூல் அறிஞர் இயேசு கூறிய பதிலை முழுமையாக ஏற்றுக்கொண்டதோடு, அன்புக் கட்டளையை நிறைவேற்றுவது எருசலேம் கோவிலில் நிகழ்ந்த பலிகளை எல்லாம் விட மிகச் சிறந்தது எனக் கூறித் தம் இசைவைத் தெரிவிக்கிறார் (மாற் 12:32-33). இயேசு பழைய ஏற்பாட்டில் காணப்பட்ட அன்புக் கட்டளையை மக்களுக்கு மீண்டும் எடுத்துக் கூறிய நேரத்தில் அன்பு என்பது இரு பக்கங்களைக் கொண்டது எனக் காட்டுகிறார். கடவுளை அன்புசெய்வதோடு நாம் பிறரையும் அன்புசெய்ய வேண்டும். ஒன்றில்லாமல் மற்றது இல்லை. எனவே, இயேசு கடவுளின் அன்பில் எந்நாளும் நிலைத்திருந்து, அதே நேரத்தில் நம்மை முழுமையாக அன்புசெய்து நமக்காகத் தம்மையே பலியாக்கியதுபோல நாமும் இறையன்பிலும் பிறரன்பிலும் சிறந்து விளங்க அழைக்கப்படுகிறோம். அன்பு இல்லாத இடத்தில் வேறு நற்பண்புகளும் இராது. அன்பு இருக்குமிடத்தில் தன்னலம் மறையும்; பிறருடைய நலனுக்கு நாம் முன்னுரிமை கொடுப்போம். கடவுள் நம்மை எந்தவொரு நிபந்தனையுமின்றி அன்புசெய்வது போல நாமும் முழுமையாகக் கடவுளை அன்புசெய்து, அவருடைய அன்பின் தூண்டுதலால் எல்லா மக்களையும் அன்புசெய்திட முன்வருவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கை அன்பின் வெளிப்பாடாக அமைந்திட அருள்தாரும்.