யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 8வது வாரம் சனிக்கிழமை
2016-05-28




முதல் வாசகம்

வழுவாதபடி உங்களைக் காக்கவும் மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லவர் கடவுளே.
திருத்தூதர் யூதா எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 17, 20-25

அன்பார்ந்தவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள் முன்னுரைத்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள். தூய்மைமிகு விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்; தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள். கடவுளது அன்பில் நிலைத்திருங்கள். என்றுமுள்ள நிலைவாழ்வைப் பெற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருங்கள். நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள். வேறு சிலரை அழிவுத் தீயிலிருந்து பிடித்திழுத்துக் காப்பாற்றுங்கள். மற்றும் சிலருக்கு இரக்கம் காட்டும்போது எச்சரிக்கையாய் இருங்கள்; ஊனியல்பால் கறைப்பட்ட அவர்களது ஆடையையும் வெறுத்துத் தள்ளுங்கள். வழுவாதபடி உங்களைக் காக்கவும் தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய், மாட்சியும் மாண்பும் ஆற்றலும் ஆட்சியும் ஊழிக் காலந்தொட்டு இன்றும் என்றென்றும் உரியன. ஆமென்!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது
திருப்பாடல் 63: 1. 2-3. 4-5

1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. பல்லவி

2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-33

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்துகொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, ``எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?'' என்று கேட்டனர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ``நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்'' என்றார். அவர்கள், `` `விண்ணகத்திலிருந்து வந்தது' என்போமானால், `பின் ஏன் அவரை நம்பவில்லை' எனக் கேட்பார். எனவே `மனிதரிடமிருந்து வந்தது' என்போமா?'' என்று தங்களிடையே பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், ``எங்களுக்குத் தெரியாது'' என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், ``எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து,'எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?' என்று கேட்டனர்'' (மாற்கு 11:27-28)

இயேசு மக்களுக்கு ''அதிகாரத்தோடு போதித்தார்.'' யூத சமயத் தலைவர்கள் கொண்டிருந்த அதிகாரத்திற்கும் இயேசுவிடம் தெரிந்த அதிகாரத்திற்குமிடையே வேறுபாடு இருந்தது. அவர்கள் சமயக் கொள்கைகளையும் வழக்குகளையும் விளக்கினர். ஆனால் இயேசுவோ, தம் சொந்த அதிகாரத்தின் அடிப்படையில் மக்களுக்குப் போதித்தார். அவரிடம் துலங்கிய அதிகாரம் கடவுள் தாமே அவருக்கு அளித்த அதிகாரம். எந்த மனித அதிகாரத்தையும் விஞ்சிய அதிகாரம் அது. பண்டைக் கால இறைவாக்கினரைப் போல இயேசுவும் தந்தை கடவுளின் பெயரால் மக்களுக்கு நல்ல செய்தி கூறினார் என்பது உண்மையே. எனவேதான் மக்களில் பலர் இயேசுவைத் தலைசிறந்த இறைவாக்கினராகக் கண்டார்கள். ஆனால், இயேசு தம் அதிகாரம் பற்றிப் பேசும்போது தம் தந்தையிடமிருந்தே அந்த அதிகாரத்தைப் பெற்றதாகக் கூறுகின்றார். இவ்வாறு இயேசு தமக்கும் தம்மை அனுப்பிய தந்தைக்கும் இடையே நிலவிய நெருங்கிய உறவை வெளிப்படுத்தினார்.

தந்தையோடு அவருக்குள்ள உறவின் நெருக்கம் காரணமாக, நாம் இயேசுவை இறைத்தன்மை கொண்டவராக நம்பி ஏற்கின்றோம். கடவுளின் அதிகாரம் இயேசுவில் துலங்குவதால் நாம் இயேசுவைக் கடவுள் எனவே போற்றுகின்றோம். அதே நேரத்தில் இயேசு உண்மையாகவே மனிதராகவும் இருக்கின்றார். இவ்வாறு அவர் நம்மில் ஒருவராக மாறியதால் நாம் அவரிடத்தில் நம் ஆழ்ந்த மனித இயல்பை அடையாளம் காண இயலும். அது நம்மில் முழுமையாக வெளிப்படும்போது நாமும் கடவுளருளால் இறைத்தன்மை பெற்ற மனிதராக மாறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உமது பெயரால் எங்களைத் தேடிவந்த இயேசுவை நாங்கள் எங்கள் வாழ்வில் ஏற்றிட அருள்தாரும்.