யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 8வது வாரம் வியாழக்கிழமை
2016-05-26




முதல் வாசகம்

நீங்கள் அரச குருக்கள், தூய மக்கள், உங்கள் அழைப்புக்கேற்ப ஒழுகுங்கள்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 2-5,9-12

அன்பிற்குரியவர்களே, புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாய் இருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளருவீர்கள். உயிருள்ள கல்லாகிய அவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர் மதிப்புள்ள கல் அதுவே. நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக! ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி. முன்பு நீங்கள் ஒரு மக்களினமாய் இருக்கவில்லை; இப்பொழுது கடவுளுடைய மக்களாக இருக்கிறீர்கள். முன்பு இரக்கம் பெறாதவர்களாய் இருந்தீர்கள்; இப்பொழுதோ இரக்கம் பெற்றுள்ளீர்கள். அன்பிற்குரியவர்களே, நீங்கள் அன்னியரும் தற்காலக் குடிகளுமாய் இருப்பதால், ஆன்மாவை எதிர்த்துப் போர் புரியும் ஊனியல்பின் இச்சைகளை விட்டுவிடும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன். பிற இனத்தினர் நடுவில் நன்னடத்தை உடையவராய் இருங்கள். அவர்கள் உங்களைத் தீயவர்கள் என்று பழித்துரைப்பினும், உங்கள் நற்செயல்களைக் கண்டு, கடவுள் சந்திக்க வரும் நாளில் அவரைப் போற்றிப் புகழ்வார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மகிழ்ச்சி நிறை பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்!
திருப்பாடல் 100: 1-2. 3. 4. 5

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, ``இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், ``தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, ``அவரைக் கூப்பிடுங்கள்'' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, ``துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்'' என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, ``உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?'' என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், ``ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' என்றார். இயேசு அவரிடம், ``நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று'' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்?"

முளைத்து மூன்று இலைவிடும் முன், கீழே இருப்பவன் எல்லாம் தனக்கு சேவகம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். பெரிய மனிதன் ஆக ஆக, இந்த காலத்தில் எல்லோரும் தனக்கு கூஜா தூக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.செல்வமும் செல்வாக்கும் பெருகப் பெருக எல்லோரும் தனக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறான்.

ஆனால் இங்கே ஒரு பெரிய மனிதர், இறைவன் இயேசு "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று சாலை ஓரம் படுத்திருந்த பார்வையற்ற மனிதனிடம் கேட்கிறார். பாதை ஓரத்தில், வாழ்க்கையின் ஓரத்தில், பார்வையற்று, வாழ வழியற்றுப் படுத்திருக்கும் மனிதனுக்கு "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டது அவனை வாழ்வின் மையத்திற்கு கொண்டு சென்றிருக்கும் அல்லவா!

நண்பர்களே! இன்று இதே போல் எத்தனை பேர் வாழ்வின் ஓரத்தில், விழி இழந்து, வழி இழந்து உங்களின் ஒரு வார்த்தைக்காகக் காத்திருக்கிறார்கள். "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என யாராவது கேட்கமாட்டார்களா எனக் காத்திருப்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன? இயேசுவின் இவ் வார்த்தையை நாமும் அடிக்கடி பயன்படுத்த முன்வருவோம். நம்மிடம் இயேசு அதே வார்த்தையால் கேட்பார்.

மன்றாட்டு:

இறைவா, எங்களோடு தொடர்ந்து உறவாடுகின்ற உம்மை எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கண்டுகொள்ள அருள்தாரும்.