யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 8வது வாரம் செவ்வாய்க்கிழமை
2016-05-24




முதல் வாசகம்

உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 10-16

அன்புக்குரியவர்களே, உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர்; இந்த மீட்பைக் குறித்துத் துருவித் துருவி ஆய்ந்தனர். தங்களுக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து படவேண்டிய துன்பங்களையும் அவற்றுக்குப்பின் அடையவேண்டிய மாட்சியையும் முன்னறிவித்தபோது, ஆவியால் குறிப்பிடப்பட்ட காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர். அவர்களது பணி தங்கள் பொருட்டல்ல, உங்கள் பொருட்டே என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. விண்ணினின்று அனுப்பப்பட்ட தூய ஆவியால் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தவர்கள், அவர்கள் முன்னறிவித்தவற்றை இப்போது உங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றை அறிந்துகொள்ள வானதூதர்களும் ஆவலோடு இருந்தார்கள். ஆகவே, உங்கள் மனம் செயலாற்றத் தயாராய் இருக்கட்டும்; அறிவுத் தெளிவுடையவர்களாய் இருங்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்பொழுது உங்களுக்கு அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருங்கள். முன்னர் அறியாமையில் இருந்தபோது இச்சைகளுக்கிசைய நடந்தது போலன்றி, கீழ்ப்படிதலுள்ள மக்களாய் இருங்கள். உங்களை அழைத்தவர் தூய்மை உள்ளவராய் இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மை உள்ளவர்களாய் இருங்கள். `நீங்கள் தூயவராய் இருங்கள்; ஏனெனில் நான் தூயவன்' என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.
திருப்பாடல்98: 1. 2-3 3-4

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3யb இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3உ உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீ அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31

அக்காலத்தில் பேதுரு இயேசுவிடம், ``பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே'' என்று சொன்னார். அதற்கு இயேசு, ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

கடைசியானோர் முதன்மை ஆவர்

இழப்பு என்பதற்கு நம் கிறிஸ்தவம் புதிய ஒரு பொருள் கொடுப்பதைக் காண்கிறோம். பொதுவாக, விட்டுவிடுதல், இழத்தல் என்பது நம்மில் ஒரு வெற்றிடம் ஏற்படுத்துவதாக பொருள் கொள்கிறோம். ஆனால் கிறிஸ்துவின் போதனையின்படி, இவை உணர்த்துவதெல்லாம் முற்றிலும் வித்தியாசமானவை. இழத்தல் அல்லது விட்டுவிடுதல் நமக்கு மேலும் பல வேறுபட்ட செல்வத்தைக் கொண்டுவரும் என்ற கருத்தைப் பல இடங்களில் அறிய வருகிறோம்.

விட்டுக்கொடுத்தவர் எவரும் கெட்டதும் இல்லை; கெட்டவர் எவரும் விட்டுக் கொடுத்ததும் இல்லை. விட்டு விட்ட எவரும் "நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்" என்பது கிறிஸ்தவம் தரும் செய்தி. " கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.( யோவா12 :24 )

எனவே நண்பர்களே, கிறிஸ்துவின் பணிக்காக அல்லது அவரின் சாயலாகப் படைக்கப்பட்ட அவரைச் சார்ந்து வாழும் மனிதனுக்காக நீங்கள் செய்யும் தான தர்மங்களால் நீங்கள் இழக்கும் அனைத்திற்கும் பல் வேறு விதங்களில் பல நன்மைகளை இவ்வுலகிலும் மறு உலகிலும் பெறுவீர்கள். எதையும் இழந்து போவதில்லை.பேதுருவின் சந்தேகத்திற்கு இயேசு இந்த விளக்கத்தைக் கொடுத்ததன் மூலம் கிறிஸ்தவத்தின் இத் தனித்தன்மையை உறுதிசெய்கிறார். எனவே நாம் இழப்போம், கொடுப்போம், விட்டு விடுவோம். நமக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

மன்றாட்டு:

இறைவா, நிலைவாழ்வை நோக்கி நாங்கள் பயணம் சென்றிட எங்களுக்கு அருள்தாரும்.