யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 7வது வாரம் புதன்கிழமை
2016-05-18




முதல் வாசகம்

நாளைய வாழ்க்கைபற்றி உங்களுக்குத் தெரியாது.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-17

`இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்; பணம் ஈட்டுவோம்'' எனச் சொல்லுகிறவர்களே, சற்றுக் கேளுங்கள். நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே! நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள். ஆகவே அவ்வாறு சொல்லாமல், ``ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடு இருப்போம்; இன்னின்ன செய்வோம்'' என்று சொல்வதே முறை. இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை கொள்கிறீர்கள். இது போன்ற பெருமையெல்லாம் தீமையானது. நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களதே.
திருப்பாடல் 49: 1-2. 5-6. 7,8,9. 10

மக்களினங்களே, அனைவரும் இதைக் கேளுங்கள்; மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள். 2 தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே, அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள். பல்லவி

5 துன்பக் காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக் கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்? 6 தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப் பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். பல்லவி

7 உண்மையில், தம்மைத்தாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது; தம் உயிரை மீட்க எதையும் கடவுளுக்குத் தர இயலாது. 8ய மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது. 9 ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திட முடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா? பல்லவி

10 ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவது போல, ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம் அன்றோ! அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-4

அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், ``போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்'' என்றார். அதற்கு இயேசு கூறியது: ``தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

தடுக்க வேண்டாம் !

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் உளவியல் முதிர்ச்சியையும், பரந்த மனநிலையையும் கண்டு வியக்கிறோம். இயேசுவைச் சாராத, அவரது சீடர் என்று ஏற்பிசைவு செய்யப்படாத ஒரு மனிதர் இயேசுவின் பெயரால் பேய்கள் ஓட்டினார் என்பதே மிகவும் வியப்பான ஒரு செய்திதான். இயேசுவின் பெயருக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த சான்று வேறென்ன தேவை! அவர்களைத் தடுக்கப் பார்த்தோம் என்று சீடர்கள் சொன்னபோது இயேசுவின் பதில் அவர்களை மட்டுமல்ல, நம்மையும் வியக்க வைக்கிறது. தடுக்க வேண்டாம். என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார் என்று தன்னம்பிக்கையுடன் இயேசு கூறுகிறார்.

குறுகிய மனம், பொறாமை, தன்னம்பிக்கையின்மை, இவற்றை அடித்து நொறுக்கிவிட்டு, நன்மையை ஏற்பிசைவு செய்யும் பரந்த மனதையும், தன்னம்பிக்கையையும் இயேசு வெளிப்படுத்துகிறார். நமது திறமைகளை, கொடைகளைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளத் தயங்கும் நமக்கு இயேசு பாடம் கற்றுத் தருகிறார். பிறரும் நம்மைப் போல நல்ல பணிகள் ஆற்றட்டும், நற்பெயர் வாங்கட்டும் என்று நினைப்பவரெல்லாம் இயேசுவின் நல்ல சீடர்கள். நாமும் அவ்வாறே முயல்வோம்.

மன்றாட்டு:

நன்மைகளின் நாயகனே இயேசுவே, யார் நல்லது செய்தாலும். அதை ஏற்றுக்கொள்ளவும். பாராட்டவும், அதைத் தடுக்காமல் ஊக்கப்படுத்தவும் எனக்கு நல்ல மனதைத் தந்தருளும்..