யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு

தூய ஆவி ஞாயிறு பெருவிழாத் திருப்பலி

(இன்றைய வாசகங்கள்: தி ப 2: 1-11, 1 கொரி 12: 3-7, 12-13, யோவான்: 20:19-23



தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன


திருப்பலி முன்னுரை

இறை ஆவிக்குரியவர்களே,

தூய ஆவியாரின் வருகை பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விண்ணகம் செல்லும் முன்பு, தனது சீடர்களை பலப்படுத்தும் துணையாளராக தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்திருந்தார். இயேசு விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாளில் தூய ஆவியாரின் வருகை நிகழ்ந்தது. தேற்றரவாளரான தூய ஆவியாரின் ஆற்றலால் உறுதிப்படுத்தப்பட்ட திருத்தூ தர்கள் கிறிஸ்துவின் நற்செதியைத் துணிவுடன் பறைசாற்றி திருச்சபையை நிறுவிய நாளை நாம் இன்று கொண்டாடுகிறோம். திருத்தூதர்களைப் போன்று தூய ஆவியாரின் ஆற்றலைப் பெற்றவர்களாய் கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வரத்துக்காக, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், ``இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?'' என வியந்தனர். ``பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!'' என்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
திருப்பாடல் 104: 1,24. 29b-30. 31,34 (பல்லவி: 30)

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி

இரண்டாம் வாசகம்

நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 3b-7. 12-13

சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் `இயேசுவே ஆண்டவர்' எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அருள் கொடைகள் பலவகை உண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகை உண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகை உண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா ! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா !

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-23

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்'' என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, ``தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. ஆவியைப் பொழிபவராம் இறைவா,

தூய ஆவியாரின் வருகையால் தோன்றி வளர்ந்த திருச்சபை, அதே ஆவியாரால் வழிநடத்தப்பட்டு செழித்தோங்குமாறு, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் ஆவியானவரின் அருள் கொடைகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. புதுவாழ்வு அளிப்பவராம் இறைவா,

இந்த உலகில் பணம், பதவி, சிற்றின்பம் போன்றவற்றில் சுகங்களைத் தேடி, அருள் வாழ்வில் நாட்டமின்றி வாழும் மக்கள் மீது உமது புதுப்பிக்கும் ஆவியைப் பொழிந்து, விண்ணகத்தை வாழ்வை நாடித் தேடும் மனதை அவர்களுக்கு அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. பிரிந்ததை இணைப்பவராம் இறைவா,

கிறிஸ்துவின் பெயரால் பல்வேறு சபைகளாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தூய ஆவியாரின் வல்லமையால் ஒன்றிணைக்கப்பட்டு, உலகமெங்கும் கிறிஸ்துவின் சாட்சிகளாக விளங்கத் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆன்மாக்களின் ஆயரும், கண்காணிப்பாளருமான தந்தையே இறைவா!

எமது இளைஞர், இளம் பெண்களை நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் நெறிகெட்ட தலைமுறையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொண்டு உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

"தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்".

நீங்கள் தூய ஆவியால் எப்பொழுதும் நிரப்பப்பட்டிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இது மிக அவசியம். ஏனென்றால் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி மிக அவசியம். மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கையை நீங்கள் விரும்பமாட்டிP;ர்கள். யார்தூய ஆவியால் நிரப்பப்பட்டிருக்கிறார்களோ அவர்களிடம் இந்த மகிழ்ச்சி எப்போதும் இருக்கும். இறைவனின் தூய ஆவி படைக்கும் ஆற்றலுடையது. நீர்த்திரள் மேல் அசைந்தாடிய கடவுளின் ஆவி உலகைப் படைத்ததைத் தொடக்க நூலில் படிக்கிறோம். மண்ணால் மனிதனை உருவாக்கி உயிர் மூச்சை ஊதி மனிதனைப் படைத்ததும் ஆவியின் செயலே.பாவத்தில் வாழ்விழந்த மனிதனின் பாவங்களை மன்னித்து மகிழச்சி நிறைந்த மனித வாழ்வைக் கொடுப்பதும் ஒரு புது படைப்பு அல்லவா.

பாவமன்னிப்பு பெறும் மனிதர்கள் தூய ஆவியால் நிரப்பப்படுகிறார்கள். அவர்கள் புதுப்படைப்பாக மாறுகிறார்கள். பாவம் அவர்களிடம் இல்லை. எனவே மனதில் ஒரு தெய்வீக அமைதி குடிகொள்கிறது. இதயத்தில் இனம்புரியாத நிறை மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது. பாவ மன்னிப்பு பெற்று தூய ஆவியால் நிறைந்திருப்போர் வாழ்வில் என்னதான் தடையிருந்தாலும் எப்படித்தான் நான்கு சுவர்களுக்கும் பூட்டி வைத்தாலும் கொடுக்கும் உங்கள் தெய்வம் கூரையை கிழித்து உங்களுக்கு தன் கொடையாம் மகிழ்ச்சியை, அமைதியை, செல்வத்தை குறையின்றி வழங்குவார்.

உயிர்த்த இயேசு இதையே இன்றைய வாசகத்தில் தன் சீடர்கள்மேல் ஊதி, தூய ஆவியை வழங்கி, பாவமன்னிப்பைக் கொடுத்து அமைதியும் மகிழ்ச்சியும் வாக்களிக்கிறார். நீங்களும் பெற்று மகிழுங்கள். இனிது வாழ்வோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் நீர் கற்றுத்தரும் அனைத்தையும் முழுமையாகக் கடைப்பிடித்து, தூய ஆவியாரின் அசைவுகளுக்கு இசைந்து கொடுத்து, அவர் அருளும் புதியதும், புனிதமானதுமான இயல்புகளை அணிந்து கொண்டு வாழ அருள்தாரும்.