யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்காகாலம் 2வது வாரம் வியாழக்கிழமை
2016-04-07




முதல் வாசகம்

நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27-33

அந்நாள்களில் காவலர்கள் திருத்தூதர்களை அழைத்துக்கொண்டுவந்து யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, ``நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப்பார்க்கிறீர்களே!'' என்றார். அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, ``மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்'' என்றனர். இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத் தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்
திருப்பாடல் 34: 1,8. 16-17. 18-19

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி

16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர்,'' பேறுபெற்றோர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-36

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தரும் சான்றை ஏற்றுக்கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார். கடவுளால் அனுப்பப்பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு நிக்கதேமைப் பார்த்து, 'பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்' என்றார்'' (யோவான் 3:14-15)

பழைய ஏற்பாட்டு எண்ணிக்கை நூல் ''வெண்கலப் பாம்பு'' பற்றிப் பேசுகிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டு, பாலைநிலத்தில் பயணமாகிச் சென்ற வேளையில் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள். அப்போது கடவுளின் கட்டளைப்படி மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தி உயர்த்துகிறார். அந்த வெண்கலப் பாம்பை ஏறிட்டுப் பார்த்தோர் உயிர்பிழைக்கின்றனர் (காண்க: எண் 21:4-9). இந்நிகழ்ச்சியை இயேசு நிக்கதேமுக்கு நினைவூட்டுகிறார். இயேசுவும் சிலுவை என்னும் மரத்தில் ''உயர்த்தப்படுவார்''. அவருடைய சிலுவைச் சாவு துன்பதுயரத்தின் வெளிப்பாடு மட்டும் அல்ல, அவர் அடைகின்ற மாட்சியும் அதில் அடங்கும். எனவே இயேசு சிலுவையில் ''உயர்த்தப்பட்டார்''; அதாவது இயேசுவின் சிலுவைச் சாவு அவருடைய உயிர்த்தெழுதலும் மாட்சிமைக்கும் வழியாயிற்று. அதே நேரத்தில் இயேசு நமக்கு வாழ்வளிக்கிறார். இவ்வாழ்வு மண்ணுலகில் நாம் சாகாமல் வாழ்வதைக் குறிப்பதல்ல; மாறாக, விண்ணகத்தில் நாம் ''நிலைவாழ்வு'' பெறுவதைக் குறிக்கிறது. இந்த நிலைவாழ்வு கடவுளின் ஆட்சியில் நாம் பெறவிருக்கின்ற பங்கேற்பைக் குறித்துநிற்கிறது.

இயேசுவின் சிலுவைச் சாவின் வழியாக நாம் நிலைவாழ்வு பெற வேண்டும் என்றால் நாம் இயேசுவிடத்தில் ''நம்பிக்கை'' கொள்ளவேண்டும். இந்நம்பிக்கை எதில் அடங்கியுள்ளது என்பதை இயேசுவே நமக்கு அறிவிக்கிறார். அதாவது, கடவுள் நம்மை அன்புசெய்து நம் மீட்புக்காகத் தம் திருமகனைக் கையளித்துள்ளார் என்னும் உண்மையை நாம் உளமார ஏற்று, அந்த அன்புக் கடவுளால் வழிநடத்தப்பட நம்மையே அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு கடவுளை அணுகிச் செல்வோர் அவரிடத்தில் நம்பிக்கை கொள்வர்; அவர் அனுப்பிய மீட்பராம் இயேசுவிடத்திலும் நம்பிக்கை கொள்வர். இந்நம்பிக்கை நம்மில் ஒரு மாற்றத்தைக் கொணர்கின்றது. அதாவது இயேசுவின் வல்லமையாகிய தூய ஆவி நமக்கு அருளப்பட்டு நாம் கடவுளின் பிள்ளைகளாக ஏற்கப்படுகிறோம். கடவுளின் உயிர் நமக்கு வழங்கப்படுகிறது. அந்த அன்புப் பிணைப்பினால் நாம் ''நிலைவாழ்வு'' என்னும் கொடையைக் கடவுளிடமிருந்து பெறுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனை நம்பிக்கையோடு ஏற்றிட எங்களுக்கு அருள்தாரும்.