யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
திருநீற்றுப் புதன்
2016-02-10




முதல் வாசகம்

நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்.
இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18

ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்; நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்? சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும். ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், ``ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச் சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்'' எனச் சொல்வார்களாக! `அவர்களுடைய கடவுள் எங்கே?' என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ? அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
திருப்பாடல் 51: 1-2. 3-4. 10-11. 12,15

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. 4ய உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுளோடு ஒப்புரவாகுங்கள்; இதுவே தகுந்த காலம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20-6: 2

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார். நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ``தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்'' எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்; மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தந்துள்ள வசனத்திற்குப் பதிலாக, தவக்காலம் ஐந்தாம் வாரத்திற்குப் பின் வரும் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6,16-18

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்கவேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப் படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'மக்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்' என்றார்'' (மத்தேயு 6:1)

நோன்பு இருத்தல், இறைவேண்டலில் ஈடுபடுதல், தர்மம் செய்தல் ஆகியவை தலைசிறந்த அறச்செயல்களாகக் கருதப்பட்டன. இயேசு இச்செயல்களின் மதிப்பையோ தேவையையோ சிறப்பையோ மறுத்துக் கூறவில்லை. அன்றுபோல இன்றும் நோன்பு, இறைவேண்டல், ஈகை ஆகிய நற்செயல்கள் மனிதருக்குத் தேவையே. ஆனால் இயேசு அறச்செயல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் நாம் அச்செயல்களைச் செய்து பிறருடைய பாராட்டுதலையும் புகழ்ச்சியையும் எதிர்பார்க்கின்ற மனநிலை கொண்டிருப்பது சரியல்ல என உணர்த்துகின்றார். நோன்பிருப்போர் பிற மனிதரின் பசியைப் போக்கும் எண்ணம் கொண்டுள்ளனரா? இறைவேண்டல் செய்வோர் பிறருக்காகக் கடவுளை மன்றாடுகின்றனரா? தர்மம் செய்வோர் பிறருக்கு உதவுகின்ற மனநிலை கொண்டிருக்கிறார்களா? இக்கேள்விகளுக்கு நாம் ''ஆம்'' எனப் பதில் இறுக்க முடிந்தால் அறச்செயல்கள் நமக்கு நன்மை கொணரும்; கடவுளின் அருளை நாம் அடைந்திட வழியாகும்.

இதற்கு நேர்மாறாக, நாம் புரிகின்ற ''அறச்செயல்கள்'' வெளிவேடமாக இருந்தால் அவற்றால் ஒருவேளை பிறர் நலமடைந்தாலும் நாம் நலமடையப் போவதில்லை. கடவுள் நம் உள்ளத்தில் உறைபவர்; அவர் நம் உள்ளத்தைத் துருவி அறிபவர். எனவே கடவுளின் பார்வையில் நாம் நல்ல மனிதராக இருந்திட வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் தூய்மையும் நேர்மையும் ஓங்கி விளங்க வேண்டும். அதே நேரத்தில் நாம் புரிகின்ற அறச்செயல்கள் பிறருடைய நன்மைக்காகக் செய்யப்பட வேண்டும். அப்போது நாம் தொடங்குகின்ற தவக்காலம் நமக்குக் கடவுளின் அருளைப் பெற்றுத் தருகின்ற தருணமாக இருக்கும்.

மன்றாட்டு:

இறைவா, தூய உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும்.