யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 4வது வாரம் வியாழக்கிழமை
2016-02-04

இலங்கை நாயகி திருவிழா




முதல் வாசகம்

நீங்களே என் சாட்சிகள், என்கிறார் ஆண்டவர்!
எசாயா நூலிலிருந்து வாசகம் 43:1-3,5,10-13

யாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ரயேலே, உன்னை உருவாக்கிய வருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்: அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்; உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ எனக்கு உரியவன். 2நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா; தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றியெரியாது. 3ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; இஸ்ரயேலின் தூயவரும் உன்னை விடுவிப்பவரும் நானே; உனக்குப் பணயமாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியா, செபா நாடுகளையும் ஒப்புக்கொடுக்கிறேன். அஞ்சாதே, ஏனெனனில் நான் உன்னோடு இருக்கின்றேன்; கிழக்கிலிருந்து உன் வழிமரபை அழைத்து வருவேன்; மேற்கிலிருந்து உன்னை ஒன்று திரட்டுவேன். 10“நீங்கள் என் சாட்சிகள்” என்கிறார் ஆண்டவர்; ‘நான் தேர்ந்தெடுத்த என் ஊழியனும் நீங்களே; என்னை அறிந்து என்மீது நம்பிக்கை வைப்பீர்கள்; ‘நானே அவர்’ என்பதை உணர்ந்து கொள்வீர்கள்; எனக்கு முன் எந்தத் தெய்வமும் உருவாக்கப்படவில்லை; எனக்குப்பின் எதுவும் இருப்பதில்லை. 11நான், ஆம், நானே ஆண்டவர்; என்னையன்றி வேறு மீட்பர் இல்லை. 12அறிவித்தது, விடுதலை அளித்தது, பறைசாற்றியது அனைத்தும் நானே; உங்களிடையே உள்ள வேறு தெய்வமன்று; நீங்களே என் சாட்சிகள், என்கிறார் ஆண்டவர்! 13நானே இறைவன்; எந்நாளும் இருப்பவரும் நானே; என் கையிலிருப்பதைப் பறிப்பவர் எவருமில்லை; நான் செய்ததை மாற்றியமைப்பவர் எவர்?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நமது மீட்பின் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள்
திருப்பாடல் 95:1-3, 5, 10-13

1வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். 3ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது; ‘அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்’. 11எனவே, நான் சினமுற்று, ‘நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்’ என்று ஆணையிட்டுக் கூறினேன்.✠


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு நற்செய்தியில் இருந்து வாசகம் 2:1-2,7-12

1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, 2“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.7பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். 8மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். 9அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. 10அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். 11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். 12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இருவர் இருவராக !

இயேசு பன்னிருவரையும் தம்மிடம் அழைத்து, அவர்களை இருவர் இருவராக நற்செய்திப் பணியாற்ற அனுப்பினார் என்னும் செய்தியை இன்றைய சிந்தனைக்குக் கருவாக எடுத்துக்கொள்வோம். ஏன் இயேசு தம் சீடரை இருவர் இருவராக அனுப்பினார்?

இணைந்து பணியாற்றும் பண்பைக் கற்றுக்கொள்வதற்காகத்தான் என்று தோன்றுகிறது:. இறையாட்சிப் பணி என்பது தனி நபரி;ன் பணி அல்ல. அது ஒரு கூட்டுப் பணி. தனி நபர்கள் ஏற்படுத்தும் மாற்றங்களைவிட, குழுக்கள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம் என்பது நாம் அறிந்ததே. எனவே, தனி நபரின் திறன்களிலும், ஆற்றலிலும் மட்டும் நம்பிக்கை வைக்காமல், அடுத்தவரது திறன்களையும் பயன்படுத்துகின்ற பொதுமைப் பண்பை இணைந்து பணியாற்றுதல் கற்றுத் தருகிறது. மேலும், இருவர் இருவராகச் சென்று பணியாற்றும்போது, தனிமை, மன உளைச்சல், பாதுகாப்பின்மை, வழிகாட்டுதல் இன்மை போன்ற சிக்கல்களிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். இருவராகப் பணியாற்றுவது உளவியல் பாதுகாப்பு தருகிறது. எனவேதான், இயேசு தம் சீடர்களை இருவர் இருவராக அனுப்பினார் என்று எடுத்துக்கொள்ளலாம். நாமும் இணைந்து பணியாற்றும் கலையில் வளர்வோம்.

மன்றாட்டு:

ஒருமைப்பாட்டின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் எங்கள் வாழ்விலும், பணியிலும் தனியே செயல்படாமல், இணைந்து பணியாற்றும் பண்பில் வளர உமது தூய ஆவியைத் தந்தருளும்.