யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C

(இன்றைய வாசகங்கள்: எசாயா 62:1-5, கொரி 12: 4-11, யோவான் 2:1-11



உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/> உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி/>


திருப்பலி முன்னுரை - 1

மாட்சிக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நம் ஆண்டவரின் மாட்சிமிகு செயல்களை நம் வாழ்வில் அனுபவிக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. மனிதர்களாகிய நாம் அனைவரும் கடவுளின் மேன்மையை உணர்ந்து, அவரது மாட்சிமையில் பங்குபெறவே அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் உதவியைப் பெற்று மகிழ அன்னை மரியாவின் பரிந்துரை தேவை என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. கானாவூர் திருமண நிகழ்ச்சியில் திராட்சை இரசம் தீர்ந்த பொழுது, மரியன்னையின் பரிந்துரையால் ஒரு புதுமை நிகழ்ந்ததைக் காண்கிறோம். நமது அன்றாடத் தேவைகளில் இறையன்னையின் பரிந்துரையை நாடி, இறைவனின் உதவிகளை சுவைத்து வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

திருப்பலி முன்னுரை - 2

ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்: உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.

அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் அருள்மிகு நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு. தினத்தில் நாம் இறைவனுக்கு நன்றிப் பலி செலுத்த ஒன்று கூடியுள்ளோம் . ஆண்டவர் தம் இரக்கமும், அவருடைய சொல்லுறுதியும் நாளும் பொழுதும் நம்மைப் பின்தொடர்கின்றன. அவர் நம்மை ஆசீர்வாதங்களால் எப்பொழுதும் நிரப்பிக்கொண்டிருக்கின்றார். அவர் நம்மீது அளவில்லாக் கரிசனை கொண்டிருக்கின்றார். இயேசு நம்மோடு வருவார் நமக்கு அற்புதங்கள் செய்வார், அன்னை மரியாள் நம் இக்கட்டான வேளைகளிலே நமக்காக நம் திருமகனிடம் பரிந்து பேசுகின்றார் என்ற உண்மைகளை யெல்லாம் இன்றைய வார்த்தைகள் நமக்கு எடுத்தியம்புகின்றன.

இறைவன் நமக்கு தூய ஆவியின் கொடைகளை நிறைவாகவே வழங்கியிருக்கின்றார். அத்தோடு அவர் பல நன்மைத்தனங்களால் நம்மை நிறைத்தும் உள்ளார். நாம் அவற்றை இறை மகிமைக்காகவும், பொது நன்மைக்காவும் பயன்படுத்த வேண்டுமெனவும் இறைவன் விரும்புகின்றார். எனவே, இன்றைய திருப்பலியில, நாம் சுயநல வேட்கைகளிலிருந்து விடுபட்டு, பகிர்ந்து வாழும் மனப்பக்குவமும், பண்பும் உள்ளவர்களாக வாழும் வரம் கேட்டு செபிப்போம்.

முதல் வாசகம்

பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம்62:1-5

சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்: எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்: மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்: ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்: உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். 'கைவிடப்பட்டவள் ' என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்: 'பாழ்பட்டது ' என இனி உன் நாடு அழைக்கப்படாது: நீ 'எப்சிபா ' என்று அழைக்கப்படுவாய்: உன் நாடு 'பெயுலா ' என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்: உன் நாடு மணவாழ்வு பெறும். இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்: மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
திருப்பாடல்96;1-3 7-10

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; பல்லவி

2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.பல்லவி

3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.பல்லவி

8 ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.பல்லவி

9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள்.பல்லவி

10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; 'ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; ப+வுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத் தொண்டுகளும் பலவகையுண்டு: ஆனால் ஆண்டவர் ஒருவரே.
திருத்தூதர் பவுல்கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-11

சகோதரர் சகோதரிகளே, அருள்கொடைகள் பலவகையுண்டு: ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத் தொண்டுகளும் பலவகையுண்டு: ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகையுண்டு: ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார். அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார். தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார். அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்: அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசுவின் தாய் பணியாளரிடம், 'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் ' என்றார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:1-11

மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி இயேசுவின் தாய் அவரை நோக்கி, 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது ' என்றார். இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே ' என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், 'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் ' என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், 'இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் ' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், 'இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை: தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, 'எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்: யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்? ' என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரருகளும் அவருடைய சீடரும் கப்பர்நாகூம் சென்று அங்குச சில நாள்ககள் தங்கியிருந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்: ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

ஆசீரும் அருளும் நிறைந்த அன்புத் தந்தையே இறைவா!

உமது பிரதிநிதிகளாக இருக்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் மக்களுக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும்: அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றவாகளாகவும், நல்ல வழிகாட்டிகளாகவும் இருந்து பணியாற்ற வேண்டிய பலத்தையும் உடல் நலத்தையும் அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அரசருக்கெல்லாம் அரசரே எம் இறைவா!

அன்னை மரியாள் வழியாக நீர் எமக்குத் தரும் செய்தியையும், உமது விருப்பத்தையும், சித்தத்தையும் நாம் சரியான விதத்திலே புரிந்துகொண்டு அந்த அன்னையைப் போன்று அடுத்தவரின் நலனில் அக்கறை கொண்டு, மற்றவர்களின் இக்கட்டான வேளைகளில் அவர்களுக்கு துணைக்கரம் கொடுக்கும் நன்மனதை எமக்குத் தந்தருள வேண்டுமென்றும், இப் புதிய ஆண்டிலே புதிய மனிதர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதீப்பிடுகளை உணர்ந்து அதன்படி அர்த்தமுள்ள புதுவாழ்வு வாழ வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்ற ஆசீரோடு குடும்ப உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது குடும்பங்களுக்காக உம்மிடம் வருகின்றோம். இன்றைய நாட்களில் குடும்ப உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவ வரமருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எமக்கு மன்னிப்பு அளித்து எமக்கு புதுவாழ்வை வாக்களித்த தந்தையே இறைவா!

எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களை கண்டுக் கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருளவேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா!

இந்த நல்ல நாளில் கணவன் மனைவி பிள்ளைகள் என்று மகிழ்வுடன் வாழ, இவ்வலகில் எதிர்நீச்சல் போட்டு அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த வரம் அருள் தரம் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அரும்பெரும் செயல்கள்; புரியும் வல்லவராம் தந்தையே இறைவா!

கீழ்த்திசை அரசர்களைப் போன்று, நாங்கள் எளிய மனத்தோடும், திறந்த உள்ளத்தோடும் வாழவும்: எவ்வளவு எதிர்ப்புக்கள், தடைகள் எம் வாழ்வில் வந்தாலும், தொடர்ந்து உம்மைத்தேடி, எம் வாழ்வில் உம்மைச் சொந்தமாக்கிக் கொள்ள அருளைத் தரவேண்டுமென்றும், புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மனிதனாக அவதரித்த மாபரனின் தந்தையே!

எங்கள் சமூகத்தில் இடம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் ஏழைகள், அநாதைகள், கைவிடப்பட்டோர், மாற்று திறனாளிகள் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்கள் மறுவாழ்வு பெறவும், எங்கள் ஒவ்வொருடைய உள்ளத்திலும் அவதரித்து அன்பு, அமைதி, சமாதானம் போன்ற புண்ணியங்களை எங்களுக்கு பொழிந்தருள வேண்டுமாய், பிறந்திருக்கின்ற இயேசுபாலன் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சிய+ட்டும் நற்செய்தியை வழங்கும் தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்குகொள்ளமுடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்களில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்றும், நிலையற்ற இந்த உலகின் செல்வங்களைத் தேடி மன நிம்மதியை இழந்து நிற்கும் மக்கள் அனைவரும், நிலையான செல்வமாகிய உம்மில் நிம்மதி காண அருள்புரியவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

தாயும் தந்தையுமான இறைவா,

உடல், உள நோயினால் வேதனையுறும் அனைவரையும் நீர் இரக்கத்துடன் கண்நோக்கி: அவர்களின் வேதனையைத் தணித்து, நிறைவான உடல், உள நலத்தை அளித்துக் காத்திட வேண்டுமென்றும், இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான போதனைகளாலும், பிடிவாதத்தாலும், உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை மாறிச் செல்லும் அனைவர்மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்றும், எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

அன்னை மரியாவின் இட ஒதுக்கீடு !

அன்னை மரியாவை இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் தாரகை என்று வர்ணித்தால் அது மிகையல்ல. ஒடுக்கப்பட்டோருக்கும், ஓரங்கட்டப்பட்டோருக்கும் சார்பாக வாதிட்டதோடு நின்றுவிடாமல், அவர்களுக்கு உயரிய பங்கைப் பெற்றுத் தந்தார் அன்னை மரியா. திருமண வீடுகளில் முதற் பந்திகளில் பணக்காரர்களும், செல்வாக்கு நிறைந்தவர்களும்தான் அமர்வர்.

அவர்களுக்கெல்லாம் திராட்சை ரசம் குறைபடாமல் கிடைத்து விட்டது. ஆனால், கடைசிப் பந்தியில் அமர்ந்த ஏழை, எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், திருமண வீட்டாரால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கருதப்படாதோர் முதலியோரே அமர்ந்திருப்பர். இவர்களுக்குத்தான் இரசம் குறைபட்டுவிட்டது. மற்றவர்கள் அதைப் பற்றி அதிகம் அக்கறைப்பட்டுக்கொள்ளாத சூழலில்தான் அன்னை மரியா துணிந்து, நீதியுணர்வுடனும், நம்பிக்கையுடனும் இறைமகன் இயேசுவை அணுகுகிறார். தனது நேரம் வரவில்லை என்று இயேசு மறுப்பு தெரிவித்தபிறகும்கூட அவரை வலியுறுத்தி தண்ணீரைத் திராட்சை இரசமாய் மாற்றும் அருஞ்செயலை, தன் முதல் அற்புதச் செயலை இயேசு நிறைவேற்றக் காரணமானார். எனவே, ஒதுக்கப்பட்ட கடைசிப் பந்தில் அமர்ந்திருந்தவர்கள் முதல் பந்திகளில் அமர்ந்து இரசம் குடித்த செல்வாக்கு மிக்கோரைவிட அதிக சுவை நிறைந்த, நல்ல இரசத்தை அவர்கள் மனம் நிரம்பும்வரை அனுபவிக்க முடிந்தது. இவ்வாறு, ஒதுக்கப்பட்டோருக்கு அதிக தரமும், அளவும் மிக்க திராட்சை இரசம் கிடைத்தது. எனவே, அன்னை மரியாவை இட ஒதுக்கீட்டின் தாய் என்று பெருமையுடன் அழைக்கலாம்.

மன்றாட்டு:

வானகத் தந்தையே இறைவா, உம்மை வாழ்த்திப் போற்றுகிறோம். அன்னை மரியாவை எங்கள் அனைவருக்கும் தாயாகத் தந்ததற்காக நன்றி கூறுகிறோம். அந்த அன்னையைப் பின் பற்றி நாங்களும் ஏழை, எளியோர், ஓரங்கட்டப்பட்டோர்மீது சிறப்புக் கவனம் செலுத்தி, அவர்களுக்கு உரிய தரமும், அளவும் மிக்க ஒதுக்கீட்டைப் பெற உழைப்போமாக!