யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 1வது வாரம் திங்கட்கிழமை
2016-01-11




முதல் வாசகம்

அன்னா மலடியாக இருந்ததால், அவருடைய சக்களத்தி அவரை எள்ளி நகைத்து வந்தார்.
சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 1-8

எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிம் சோப்பிமில் எல்கானா என்ற ஒருவர் இருந்தார். இவர் எப்ராயிமைச் சார்ந்த சூப்பின் மகனான தோகூவின் மைந்தனான எலிகூபின் புதல்வனான எரொகாமின் மகன். அவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரு மனைவியர் இருந்தனர்; பெனின்னாவுக்குக் குழந்தைகள் இருந்தனர். அன்னாவுக்கோ குழந்தைகள் இல்லை.
எல்கானா ஆண்டுதோறும் சீலோவில் படைகளின் ஆண்டவரை வழிபடவும் அவருக்குப் பலி செலுத்தவும் தம் நகரிலிருந்து சென்று வருவார். அங்கே ஆண்டவரின் குருவான ஏலியின் இரு புதல்வர்கள் ஓப்னியும் பினகாசும் இருந்தனர். எல்கானா, தாம் பலி செலுத்திய நாளில், தம் மனைவி பெனின்னாவுக்கும் அவளுடைய புதல்வர் புதல்வியர் அனைவருக்கும் பங்கு கொடுப்பதுண்டு.
அன்னாவின்மீது அவர் அன்புகொண்டிருந்தும் அவருக்கு ஒரே பங்கைத்தான் அளித்தார். ஏனெனில் ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார். ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்ததால், அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள். இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது; அவர் ஆண்டவரின் இல்லம் வந்தபோதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள்.
அன்னா உண்ணாமல் அழுவார். அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி, ``அன்னா, நீ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரைவிட மேலானவன் அன்றோ?'' என்பார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன். அல்லது: அல்லேலூயா.
திபா 116: 12-13. 14,17. 18-19

12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

14 இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். 17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். பல்லவி

18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். 19 உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மனம் மாறி, நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20

அக்காலத்தில் யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். ``காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்'' என்று அவர் கூறினார்.
அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது, சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, ``என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார்.
உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
பின்னர், சற்று அப்பால் சென்றபோது, செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின்சென்றார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"என் பின்னே வாருங்கள்"

நல்லவைகள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது. நல்லவைகள் தொடர்வதை நிறுத்த முடியாது. நல்லவர்கள் தொடர்ந்து வருவர். நல்லவைகள் தொடர்ந்து நடக்கும். அதைத் தடுத்து நிறுத்த முடியாது.

திருமுழுக்கு யோவானைக் கொன்றதால் மனமாற்றப் பணிகள் முடங்கிப் போய்விடுவதில்லை."காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற்1'15) என்ற முழக்கம் இயேசுவால் தொடர்ந்து முழக்கப்பட்டது. இயேசுவைச் சிலுவையில்; அறைந்து கொன்றதால் அந்த புது வாழ்வின் முழக்கம் முடமாகிவிடவில்லை. உயிர்த்த இயேசுவின் சீடர்கள் ஓங்கி ஒலித்தனர். ஒன்று பன்னிரெண்டாகி பல மடங்காகியது.

இன்றும் நல்லவைகள் தொடரந்த வண்ணம் உள்ளன. நல்லவர்கள் இன்றும் ஆங்காங்கே உதயமாகிக்கொண்டு இருக்கிறார்கள். நற்செயலாற்ற அழைப்புக்கு அர்ப்பணிப்போர் இன்றும் ஏராளம் ஏராளம். இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. பணியையும் பணியாளர்களையும் தடுக்க முடியாது. இந்த எண்ணிக்கை பெருகிக்கொண்N;ட இருக்கும்.

அருட்பணியும் அருட்பணியாளர்களும் புரட்சியாளர்கள். ஆன்மீகத்தை ஆழப்படுத்தி மனித வாழ்வை புதுப்பிக்கும் புரட்சிப் பணியாளர்கள். இவர்கள் அழிக்கப்படுவதில்லை, புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள். பெரும் விழைச்சலைத்தான் தருவார்கள்.

மன்றாட்டு:

அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இயேசுவை உமக்கு மகிழ்ச்சி தரும் மகனாக அறிக்கையிட்டதுபோல, என்னையும் உம்மை மகிழ்ச்சிப்படுத்தும் மகனாக, மகளாக மாற்றுவீராக. உம்மை மாட்சிமைப்படுத்துவதே என் வாழ்வின் நோக்கமாக இருக்கட்டும். அதற்கான ஆற்றலைத் துhய ஆவி வழிhயக எனக்கு வழங்குவீராக.