யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
திருக்காட்சிகாலம்
2016-01-05




முதல் வாசகம்

அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்.
யோவான் முதல் திருமுகம் 4:7-10

7 அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள்.8 அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை: ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார்.9 நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.10 நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே எல்லா இனத்தாரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்
திருப்பாடல்கள் 72:1-4,7-8

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!

3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும். 4 எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக; பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக!

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:34-44

34 அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.35 இதற்குள் நெடுநேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது.36 சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு நீர் மக்களை அனுப்பிவிடும் ' என்றனர்.37 அவர் அவர்களிடம், 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்று பதிலளித்தார். அவர்கள், 'நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?' என்று கேட்டார்கள்.38 அப்பொழுது அவர், ' உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள் ' என்று கூற, அவர்களும் பார்த்து விட்டு, ' ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன ' என்றார்கள்.39 அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார்.40 மக்கள் நூறு பேராகவும், ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர்.41 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பாhத்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார்.42 அனைவரும் வயிறார உண்டனர்.43 பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.44 அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"இயேசு சீடர்களிடம், 'அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்றார்" (மத்தேயு 14:16)

இயேசுவின் போதனையைக் கேட்க மக்கள் கூட்டம் திரளாக வந்திருக்கிறது. தம்மைத் தேடி வந்த மக்களுக்கு உணவு தேவை என்பதை உணர்கின்றார் இயேசு. மக்கள் ஊர்களுக்குச் சென்று உணவு வாங்கவும் வசதி இல்லை. அப்போதுதான் இயேசு தம் சீடரை நோக்கி, மக்கள் புறப்பட்டுச் சென்று உணவு வாங்கிடத் தேவையில்லை என்று கூறுகிறார். மாறாக, அவர் தம் சீடருக்கு ஒரு கட்டளை தருகிறார்: "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்". இயேசு அப்பங்களையும் மீனையும் பலுகச் செய்த பிறகும் தாமாகவே சென்று மக்களுக்கு அவற்றைப் பகிர்ந்துகொடுக்கவில்லை. மாறாக, அவர் தம் சீடர்களிடம் அப்பணியை ஒப்படைக்கிறார். அவர்களும் மக்கள் நடுவே சென்று அவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளிக்கின்றார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஓர் ஆழ்ந்த உண்மையை நாம் காண்கிறோம். அதாவது, மக்களுக்கு உணவளிக்க இயேசு வழிவகுத்துவிட்டு, உணவைப் பகிர்ந்தளிக்கின்ற பணியைத் தம் சீடரிடமே விட்டுவிடுகின்றார். சீடர்கள் யார்? இயேசுவின் காலத்தில் அவரைப் பின்சென்றவர்கள் சீடர்களாக அழைக்கப்பட்டனர். இன்று நாம் அவருடைய சீடர்களாக இருக்கின்றோம். இயேசுவின் குரலைக் கேட்டு, அவருடைய போதனையை ஏற்று, இயேசுவின் வழியில் நடந்துசெல்ல முன்வரும்போது நாம் இயேசுவின் சீடர்களாக மாறுகிறோம். நமக்கு இயேசு வழங்குகின்ற கட்டளை என்ன? "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்". இந்த உணவு எத்தகையது? மக்களது புறப்பசியை ஆற்றுகின்ற உணவு மட்டுமா? இல்லை; மக்களது ஆன்மப் பசியை ஆற்றவும் சீடர்கள் துணைசெய்ய வேண்டும். இயேசுவின் போதனையை ஏற்று, அதன்படி வாழ்ந்து, இயேசுவுக்குச் சான்றுபகரும்போது நம் வாழ்வு பிறருடைய பசியை ஆற்றுகின்ற உணவாக மாறும். அப்போது, இயேசு தம்மையே நமக்கு உணவாக அளித்ததுபோல நாமும் பிறருக்கு உணவாக நம்மையே கையளிப்போம். அதாவது, நம்முடைய சான்று வாழ்க்கையைக் கண்டு மக்கள் தம் ஆன்மப் பசி ஆறுகின்ற அனுபவம் பெறுவர். மக்களுடைய நலனை முன்னேற்றுவதில் இயேசுவின் பணியை ஆற்றிடத் திருச்சபை முழுவதுமே அழைக்கப்பட்டுள்ளது. திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், தம்மைப் பின்செல்கின்ற எல்லா மனிதருக்கும் இயேசு வழங்குகின்ற கட்டளை: "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்". இக்கட்டளையை ஏற்றுச் செயல்படுத்துவது நம் கடமை. நாம் தயாரா?

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் உடலையும் இரத்தத்தையும் எங்களுக்கு உணவாக அளித்த உமக்கு நாங்கள் நன்றியறிந்திருக்க அருள்தாரும்.