யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
கிறிஸ்து பிறப்புக்காலம்
2015-12-31




முதல் வாசகம்

நீங்கள் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் அறிவு பெற்றுள்ளீர்கள்.
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 18-21

குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக் காலம் இதுவே என அறிகிறோம். இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்; உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல; நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது வெள்ளிடைமலை. நீங்கள் தூயவரால் அருள்பொழிவு பெற்றிருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் அறிவு பெற்றுள்ளீர்கள். நீங்கள் உண்மையை அறியவில்லை என்பதால் நான் உங்களுக்கு எழுதவில்லை; மாறாக, அதை அறிந்துள்ளீர்கள் என்பதாலும் பொய் எதுவும் உண்மையிலிருந்து வராது என்பதாலுமே நான் எழுதியுள்ளேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக.
திருப்பாடல்: 96: 1-2. 11-12. 13

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18

தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை. கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ள வில்லை. அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல; மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள். வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார். யோவான் அவரைக் குறித்து, �எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்'' என உரத்த குரலில் சான்று பகர்ந்தார். இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது; அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

அன்பே தாய்மொழி

ஆண்டவர் இயேசுவின் அருள் வாக்கு உங்கள் வாழ்வில் விளக்காக இருந்து வெளிச்சம் தந்து, செல்வங்கள் அனைத்தும் தந்து உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வதாக. உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இயேசுவின் அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் என்றும் உங்களோடு இருப்பதாக.

மனிதனோடு மிக நெருங்கி தொடர்புடையது அவனது தாய் மொழி. அவன் மதமும் மொழியும் அவனிலிருந்து பிறிக்கமுடியாதவை. இந்த இரண்டுக்கும் நெருக்கம் அதிகம். ஓன்றிலிருந்து ஒன்றைப் பிறிக்கமுடியாது. எனவேதான் மதத்திற்காகவும் மொழிக்காகவும் தன் உயிரையும் இழக்கத் தயாராக இருக்கிறான்.

மனிதனை இந்நிலையில் படைத்த இறைவன், அதே நிலையில் அவனைச் சந்திப்பது அருமையிலும் அருமை. "தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது; வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லைஅவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது." (யோவா 1:1-4) இப் பகுதியில் "வாக்கு" மனிதனான இறைவன் இயேசுவைக் குறிப்பிடுகிறது. இறை தந்தையோடு உள்ள தொடர்பையும், மனிதனின் படைப்பில் அவருக்குள்ள ஈடுபாட்டையும் சொல்கிறது.மனிதனை மீட்க, அவரே(வாக்கு) மனிதனானதை விவரிக்கிறார். மனிதனான வாக்கு இறைவன் பாடுகள் பட்டு மீட்டதையும் படிக்கிறோம். மனிதனின் மொழியின் பிற வடிவங்கள், "வார்த்தை, 'வாக்கு'. மனிதனான இறைவன் இயேசுவைக் குறிப்பிடும்போது, யோவான் நற்செய்தியாளர், 'வாக்கு' என்னும் மொழி தொடர்பான பதம் ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம் மனிதனுக்கும் வாக்கு மனிதனான இயேசுவுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை சுட்டிக்காட்டுகிறார். இத்தயை நெருக்கம் உள்ள மனிதன், இயேசுவை எவ்வாறு புறக்கணிக்க முடியும் என்பதே நற்செய்தியாளர் கேள்வி. "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை."(யோவா 1:11) உன் தாய்மொழியை உதறித்தள்ள முடியுமா?! அவ்வாரே, இயேசுவையும் மறுக்கமுடியாது. ஆண்டின் இறுதி நாளில், அற்புதமாக, எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை தாங்கி, காத்து, நற்சுகம், போதுமான செல்வம், பிறியாத உறவுகள்,நிம்மதியான வாழ்வு தந்த இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

மன்றாட்டு:

இறைவா, என் இயேசுவே, உமக்கு என் நன்றி. தொடர்ந்து உம் ஆசீர் தாரும்.