யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 2வது வாரம் சனிக்கிழமை
2015-12-12

குடாலுவே அன்னை




முதல் வாசகம்

எலியா மீண்டும் வருவார்.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11

இறைவாக்கினர் எலியா நெருப்புப்போல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள்மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்? தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்துகொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.
திருப்பாடல்80: 12. 14-15. 17-18

12 பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச்செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே! பல்லவி

13 காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன. பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! பல்லவி

15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! பல்லவி

16 அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்; அதை வெட்டித்; தள்ளிவிட்டார்கள்; உமது முகத்தின் சினமிகு நோக்கினால், அவர்கள் அழிந்துபோவார்களாக! பல்லவி

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! பல்லவி

18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். பல்லவி

19 படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை. � அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13

இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், �எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?'' என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, �எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்'' என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தம் சீடர்களை நோக்கி, 'எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்' என்றார்'' (மத்தேயு 17:12)

எலியா இறைவாக்கினர் இஸ்ரயேல் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெறுகிறார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் சமய நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்று அவர் மிகுந்த ஊக்கத்தோடு போதித்தார்; போராடினார் (காண்க: 1 அர 18:17-30). எலியா ''சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார்'' என்று வருகின்ற விவிலியக் கூற்றை ஏற்று (காண்க: 2 அர 2:11), மக்கள் அந்த இறைவாக்கினர் பிற மனிதர்களைப் போல இறக்கவில்லை என்றும், மீண்டும் ஒருமுறை மெசியாவின் வரவை அறிவிக்க இவ்வுலகிற்கு வருவார் என்றும் நம்பினார்கள். இந்த நம்பிக்கையின் பின்னணியில் நாம் இயேசுவின் கூற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இயேசு தம் சீடர்களிடம், ''எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்'' என்று கூறுகிறார். ''திருமுழுக்கு யோவானைப் பற்றியே இயேசு தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது புரிந்துகொண்டார்கள்'' என மத்தேயு குறிப்பிடுகிறார் (காண்க: மத் 17:13). இயேசுவின் வருகையை முன்னறிவித்த திருமுழுக்கு யோவான் கொடுமைப்படுத்தப்பட்டார்; அவரது தலையைக் கொய்து அவரைக் கொன்றுபோட்டார்கள் (காண்க: மத் 14:1-12). எனவே, இயேசு மக்கள் எதிர்பார்த்த எலியா என்பவர் திருமுழுக்கு யோவான்தான் என அடையாளம் காட்டுகிறார். ஆனால் திருமுழுக்கு யோவான் அறிவித்த செய்தியை ஒருசில மக்கள் ஏற்றாலும் பலர் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. அதுபோலவே தம் வாழ்விலும் நிகழப்போகிறது என இயேசு தம் சீடர்களை எச்சரிக்கின்றார். மானிடமகனாக வந்த இயேசுவையும் துன்புறுத்துவார்கள், இறுதியில் கொன்றுபோடுவார்கள். இந்த உண்மையை ஏற்க சீடர்கள் மிகுந்த தயக்கம் காட்டினார்கள்.

ஆனால் இயேசு தாம் துன்பத்தின் வழியாகவே மாட்சி பெறப்போவதை மீண்டும் மீண்டும் தம் சீடர்களுக்கு உணர்த்தினார். குறிப்பாக, ஓர் உயர்ந்த மலையில் இயேசு ''தோற்றம் மாறிய''போது சீடர்கள் இயேசுவை ஒளிமயமாகக் கண்டார்கள். இயேசுவுக்கும் விண்ணகத் தந்தைக்கும் இடையே நிலவிய ஆழ்ந்த உறவு பற்றி ஓரளவு தெரிந்துகொண்டார்கள். இயேசுவின் இறைமாட்சி அவர்களது கண்களுக்குச் சிறிதளவேனும் புலப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாட்சி பெறப்போகின்ற இயேசு முதலில் துன்பங்கள் அனுபவிக்க வேண்டும். இந்த உண்மையை ஏற்கத் தயங்கிய சீடர்களை இயேசு கடிந்துகொண்டதும் உண்டு. நாமும் இயேசுவை அணுகிச் செல்லும்போது அவருடைய சிலுவையும் துன்பமும் நம் வாழ்வின் ஒரு பகுதியாக உள்ளதை உணர்ந்திட வேண்டும். சிலுவையின்றி மாட்சி இல்லை. சாவின்றி வாழ்வில்லை.

மன்றாட்டு:

இறைவா, துன்பமும் சாவும் எங்களை வருத்தினாலும் வாழ்வளிக்கும் வள்ளலாக நீர் இருக்கிறீர் என்பதை உணர்ந்தறிய எங்களுக்கு அருள்தாரும்.