யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
திருவருகைக்காலம் 2வது வாரம் செவ்வாய்க்கிழமை
2015-12-08

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா




முதல் வாசகம்

உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15,20

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, ``நீ எங்கே இருக்கின்றாய்?'' என்று கேட்டார். ``உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்'' என்றான் மனிதன். ``நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?'' என்று கேட்டார். அப்பொழுது அவன், ``என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்'' என்றான். ஆண்டவராகிய கடவுள், ``நீ ஏன் இவ்வாறு செய்தாய்?'' என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், ``பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்'' என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், ``நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்'' என்றார். மனிதன் தன் மனைவிக்கு `ஏவாள்' என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்.
திருப்பாடல் 98: 1 2-3. 3-4

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3யb இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3உ உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-6, 11-12

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப்பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின் மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! `தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ``அருள்நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ``மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ``இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர் அவரிடம், ``தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, ``நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்றார்'' (லூக்கா 1:38)

மரியாவுக்கும் யோசேப்புக்கும் மண ஒப்பந்தம் ஆகி சிறிது காலமே ஆயிற்று. அவர்கள் கூடிவந்து இல்லற வாழ்க்கை நடத்துவதற்கு முன்னர் கடவுளின் தூதர் மரியாவை அணுகி, ''தூய ஆவியின் வல்லமையால் நீர் கருவுற்று ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பீர்'' என்னும் அதிர்ச்சிதரும் செய்தியைக் கூறுகிறார். மரியாவின் உள்ளத்தில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் கடவுள் நினைத்தால் அதிசய செயல்கள் நிகழும் என வானதூதர் உறுதிமொழி கூறியதும் மரியாவின் உள்ளத்தில் தெளிவு பிறக்கிறது. அவர், ''நான் ஆண்டவரின் அடிமை'' என்று கூறி, கடவுளின் திருவுளப்படி ஆகட்டும் என்று தம்மையே முழுமையாகக் கடவுளிடம் கையளிக்கிறார். மரியா ''அருள்மிகப் பெற்றவர்'' எனப் போற்றப்பெறுகிறார் (காண்க: லூக் 1:28). இவ்வாறு சிறப்புப் பெற்ற மரியா கடவுளின் தனிப்பட்ட அன்புக்கு உரியவரானார். மனித மீட்பில் அவருக்கு ஒரு சிறப்பிடம் வழங்கப்பட்டது. உண்மையிலேயே மரியா இயேசுவின் தலைசிறந்த சீடராக மாறினார் என்றுகூடச் சொல்லலாம். நம் மீட்பரின் தாயாக அவர் விளங்குவது மாண்புமிக்க ஒன்றே. ஆயினும், கடவுளின் திருவுளத்தைத் தம் வாழ்வில் செயல்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டதால் அவர் இன்னும் அதிக பேறுபெற்றார் எனலாம் (காண்க: லூக் 8:21).

மரியாவைப் போல நாமும் இயேசுவின் சீடர்களாக வாழ்ந்திட அழைப்புப் பெறுகிறோம். மரியாவை நம் முன்மாதிரியாகக் கொண்டு நாமும் கடவுளை நம் வாழ்வின் மையமாக ஏற்றல் வேண்டும். கடவுள் நம் இதயத்தில் இடம்பெறும்போது நம் சொந்த சிந்தனைகளுக்கு ஏற்ப நாம் வாழாமல் கடவுளுக்கு ஏற்புடைய விதத்தில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வோம். மரியா திருச்சபையின் அன்னை எனவும் அழைக்கப்படுகிறார். அதாவது, கிறிஸ்துவின் பெயரால் கூடிவருகின்ற நம்பிக்கைச் சமூகம் தன்னையே மையமாகக் கொள்ளாமல் கடவுளை மையமாகக் கொள்ளும்போது கிறிஸ்துவின் ஒளி அங்கே தோன்றி ஒளிரும். உலக மக்கள் அந்த ஒளியைக் கண்டு நன்வழியில் நடக்கவும் கிறிஸ்துவைப் பின்செல்லவும் முன்வருவர். மரியாவைப் போல, ''நான் ஆண்டவரின் அடிமை'' என ஒவ்வொருவரும் கூறிட இயல வேண்டும். இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல, ''வானதூதர் தூது சொன்னதும் கன்னி மரியா தன் உடலிலும் உள்ளத்திலும் கடவுளின் வார்த்தையை ஏற்றார்; வாழ்வை உலகிற்கு அளித்தார்'' (திருச்சபை, எண் 53).

மன்றாட்டு:

இறைவா, உம் திருவுளத்தை நிறைவேற்ற நாங்கள் மரியாவைப் போல முன்வர அருள்தாரும்.