யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 34வது வாரம் வியாழக்கிழமை
2015-11-26

முத்திப்பேறுபெற்ற ஜேம்ஸ் அல்பெரியோனோ




முதல் வாசகம்

விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!''
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 6: 11-27

அந்நாள்களில் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அந்த மனிதர்கள் உள்ளே நுழைந்து தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும் கண்டார்கள். உடனே அவர்கள் அரசனை அணுகி, அவனது தடையுத்தரவைப் பற்றிக் குறிப்பிட்டு, ``அரசரே! முப்பது நாள்வரையில் அரசராகிய உம்மிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகையில் தள்ளப்படுவான் என்ற தடையுத்தரவில் கையொப்பமிட்டுள்ளீர் அல்லவா?'' என்றார்கள். அதற்கு அரசன், ``ஆம், மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பது போல், இதுவும் மாறாததே'' என்றான். உடனே அவர்கள் அரசனை நோக்கி, ``யூதாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்களுள் ஒருவனாகிய தானியேல் உம்மை மதியாமல், நீர் கையொப்பமிட்டுள்ள தடையுத்தரவை மீறி நாள்தோறும் மூன்று வேளையும் வேண்டுதல் செய்கிறான்'' என்றார்கள். ஆனால், அரசன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினான்; தானியேலைக் காப்பாற்றத் தனக்குள் உறுதி பூண்டவனாய், அன்று கதிரவன் மறையும் வரையில் அவரைக் காப்பாற்ற வழி தேடினான். ஆனால் அந்த மனிதர்கள் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அரசனிடம் வந்து, அவனை நோக்கி, ``அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி, அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ மாற்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்'' என்றனர். ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி தானியேல் கொண்டு வரப்பட்டுச் சிங்கக் குகையில் தள்ளப்பட்டார். அப்பொழுது அரசன் தானியேலை நோக்கி, ``நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக!'' என்றான். அவர்கள் ஒரு பெரிய கல்லைப் புரட்டிக் கொண்டுவந்து குகையின் வாயிலை அடைத்தார்கள்; தானியேலுக்குச் செய்யப்பட்டதில் யாதொன்றும் மாற்றப்படாதிருக்கும்படி அரசன் தன் மோதிரத்தாலும் தம் உயர்குடி மக்களின் மோதிரங்களாலும் அதற்கு முத்திரையிட்டான். பின்னர் அரசன் அரண்மனைக்குத் திரும்பிச்சென்று, அன்றிரவு முழுவதும் உணவு கொள்ளவில்லை; வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை. உறக்கமும் அவனை விட்டு அகன்றது. பொழுது புலர்ந்தவுடன், அவன் எழுந்து சிங்கக் குகைக்கு விரைந்து சென்றான். தானியேல் இருந்த குகையருகில் வந்தவுடன் துயரக் குரலில் அவன் தானியேலை நோக்கி, ``தானியேல்! என்றுமுள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் உன்னைச் சிங்கங்களினின்று விடுவிக்க முடிந்ததா?'' என்று உரக்கக் கேட்டான். அதற்குத் தானியேல் அரசனிடம், ``அரசரே! நீர் நீடூழி வாழ்க! என் கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப் போட்டார். அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை; ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன். மேலும் அரசரே! உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே'' என்று மறுமொழி கொடுத்தார். எனவே, அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, உடனே தானியேலைக் குகையிலிருந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே தானியேலைக் குகையிலிருந்து வெளியே தூக்கினார்கள். அவருக்கு யாதொரு தீங்கும் நேரிடவில்லை; ஏனெனில் அவர் தம் கடவுளை உறுதியாக நம்பினார். பிறகு அரசனது கட்டளைக்கிணங்க, தானியேலைக் குற்றம் சாட்டியவர்கள் இழுத்துக் கொண்டுவரப்பட்டனர். அவர்களும் அவர்களுடைய மனைவி, மக்களும் சிங்கக் குகையினுள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் குகையின் அடித்தளத்தை அடையும் முன்னே சிங்கங்கள் அவர்களைக் கவ்விப் பிடித்து, அவர்களுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிட்டன. அப்பொழுது தாரியு அரசன் நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவருக்கும் நாட்டினருக்கும் மொழியினருக்கும் ஓர் அறிக்கை விடுத்தான். ``உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை. ஏனெனில், அவரே வாழும் கடவுள்; அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார்; அவரது ஆட்சி என்றும் அழிவற்றது; அவரது அரசுரிமைக்கு முடிவே இராது. தானியேலைச் சிங்கங்களின் பிடியினின்று காப்பாற்றியவர் அவரே; அவரே மீட்பவர்! விடுதலை அளிப்பவரும் அவரே! விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
தானி (இ) 1: 45. 46-47. 48-49. 50-51

45 பனித் திவலைகளே, பனி மழையே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

46 பனிக் கட்டியே, குளிர்மையே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 47 உறை பனியே, மூடுபனியே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

48 இரவே, பகலே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 49 ஒளியே, இருளே, ஆண்டவரை வாழ்த்துங்கள். -பல்லவி

50 மின்னல்களே, முகில்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள்; 51 மண்ணுலகு ஆண்டவரை வாழ்த்துவதாக. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும் வரும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-28

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``எருசலேமைப் படைகள் சூழ்ந்திருப்பதை நீங்கள் காணும்போது அதன் அழிவு நெருங்கி வந்துவிட்டது என அறிந்து கொள்ளுங்கள். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்; நகரத்தின் நடுவில் உள்ளவர்கள் வெளியேறட்டும்; நாட்டுப் புறங்களில் இருப்பவர்கள் நகரத்துக்குள்ளே வரவேண்டாம். ஏனெனில் அவை பழிவாங்கும் நாள்கள். அப்போது மறைநூலில் எழுதியுள்ள யாவும் நிறைவேறும். அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம்! ஏனெனில் மண்ணுலகின்மீது பேரிடரும் அம்மக்கள்மீது கடவுளின் சினமும் வரும். அவர்கள் கூரான வாளால் வீழ்த்தப்படுவார்கள்; எல்லா நாடுகளுக்கும் சிறைப்பிடித்துச் செல்லப்படுவார்கள்; பிற இனத்தார் காலம் நிறைவு பெறும்வரை எருசலேம் அவர்களால் மிதிக்கப்படும். மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மண்ணுலகில் மக்களினங்கள் கடல் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள்'' (லூக்கா 21:25)

மானிட மகன் மீண்டும் வருவார் என்னும் செய்தியை மக்களுக்கு இயேசு அறிவித்தார். அந்த இரண்டாம் வருகை எப்போது நிகழும் என்பதை நாமறியோம். ஆனால் அது கட்டாயம் நிகழும் என்பது பற்றி இயேசு நமக்கு உறுதியளித்திருக்கிறார். இறுதிக் காலம் பற்றி இயேசு கூறிய கருத்துக்களைச் சிலர் திரித்துப் பொருளுரைக்கிறார்கள். அதாவது, உலகமும் உலகத்திலுள்ள அனைத்தும் அழிந்துபோகின்ற விதத்தில் வானத்திலிருந்து நெருப்பு மழை பொழியும் என்றும், சூரியனும் சந்திரனும் இருண்டுபோய், கோள்கள் இடம் பெயர்ந்து, அதனால் ஏற்படுகின்ற பாதிப்பின் காரணமாக மனித இனமே நிலைகுலைந்துபோகும் என்றும் அவர்கள் விளக்கம் தருகிறார்கள். இந்த விளக்கம் இயேசு அறிவித்த செய்திக்கு நேர்மாறாகப் போகிறது என்பதை நாம் உணர வேண்டும். இறுதிக் காலம் பற்றி இயேசு அறிவிக்கின்ற செய்தியில் இரண்டு முக்கியமான கருத்துக்களை நாம் மறந்துவிடலாகாது. முதலாவது, இறுதிக் காலம் பற்றி இயேசு கூறுவது உருவக மொழியில் அமைந்த கூற்றே தவிர அப்படியே எழுத்துக்கு எழுத்து நிறைவேறப்போகும் முன்னறிவிப்பு அல்ல. இதை ''இறுதிக்கால மொழி வழக்கு'' (யிழஉயடலிவiஉ டயபெரயபந) என அறிஞர் கூறுவர். இம்மொழி வழக்குப்படி, பிரமாண்டமான அளவில் நிகழப் போவதாகக் கூறப்படுகின்ற காரியங்கள் மனிதரின் அன்றாட வாழ்வில் நடக்கின்ற நிகழ்ச்சிகளையும், அவர்களது உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளையும் பிரதிபலிப்பனவாகும். எனவே, இயேசு, இயற்கையில் நிகழ்கின்ற சேதங்களைக் கண்டு ''மக்கள் குழப்பம் அடைவார்கள்'' என்கிறார் (லூக் 21:25). இந்தக் குழப்பம் ஏற்படும்போது நாம் மன உறுதியோடு நிலைத்து நிற்க வேண்டும். இதுவே இறுதிக்காலம் பற்றி இயேசு அறிவிக்கின்ற இரண்டாவது கருத்து.

நாம் உறுதியாக நிலைத்து நிற்கவேண்டும் என்பதை இயேசு விளக்கிச் சொல்கிறார்: ''தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்ப நெருங்கி வருகின்றது'' (லூக் 21:28). நமக்கு மீட்புக் கொணர்கின்ற கடவுள் நம்மைத் தண்டிப்பதற்கோ நமக்குத் தீங்கிழைப்பதற்கோ வருகின்ற கொடூரமான நீதிபதி அல்ல; மாறாக, நம்மேல் அன்புகொண்டு, நம் பாவங்களை மன்னித்து நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்கின்ற நம் தந்தை. இந்த உண்மையைக் குறிக்கும் விதத்தில் இயேசு ''நம் மீட்பு நெருங்கி வருகின்றது'' என நமக்கு ஊக்கமும் ஆறுதலும் அளிக்கின்றார். இயேசுவின் சாவும் உயிர்த்தெழுதலும் நம் மீட்புக்கு அடித்தளமாக உள்ளன. நாம் ஏற்கெனவே மீட்பில் பங்கேற்கின்றோம். நம் மீட்பின் நிறைவு இறுதிக்காலத்தில் நிகழும். இது நமக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொணர்கின்ற நல்ல செய்தி. இந்த நிலை வாழ்வை நாம் பெற வேண்டும் என்றால் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு, அவர் இயேசு வழியாக நமக்கு வழங்குகின்ற மீட்பினை நாம் நன்றியோடு ஏற்றிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்வின் நிறைவு நீரே என உணர்ந்து உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.