யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 34வது வாரம் செவ்வாய்க்கிழமை
2015-11-24




முதல் வாசகம்

விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 2: 31-45

அந்நாள்களில் தானியேல் அரசனுக்குச் சொன்ன மறுமொழி: ``அரசரே! நீர் பெரிய சிலை ஒன்றைக் கண்டீர். உம் கண் எதிரே நின்ற அம்மாபெரும் சிலை பளபளக்கும் ஒளிமிக்கதாயும் அச்சுறுத்தும் தோற்றமுடையதாயும் இருந்தது. அச்சிலையின் தலை பசும்பொன்னால் ஆனது; அதன் மார்பும் புயங்களும் வெள்ளியால் ஆனவை; வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை. அதன் கால்கள் இரும்பினால் ஆனவை; அதன் காலடிகள் ஒரு பகுதி இரும்பினாலும் மறு பகுதி களிமண்ணாலும் ஆனவை. நீர் அச்சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது, மனிதக் கை படாத கல் ஒன்று பெயர்ந்து உருண்டு வந்தது. அந்தக் கல் இரும்பினாலும் களிமண்ணாலுமான அதன் காலடிகளில் வந்து மோதி அவற்றை நொறுக்கியது. அப்பொழுது இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவை யாவும் நொறுங்கி, கோடை காலத்தில் கதிரடிக்கும் களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளம் இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று. அரசரே! இதுவே நீர் கண்ட கனவு; அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது விளக்கிக் கூறுவோம். அரசரே! நீர் அரசர்க்கரசராய் விளங்குகின்றீர். விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், வலிமை, மாட்சி ஆகியவற்றைத் தந்துள்ளார். உலகெங்கும் உள்ள மனிதர்களையும், வயல்வெளி விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் உம் பொறுப்பில் அவர் ஒப்படைத்து, அவற்றையெல்லாம் நீர் ஒருவரே ஆளும்படி செய்துள்ளார். எனவே, பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கின்றது. உமக்குப்பின் உமது அரசை விட ஆற்றல் குறைந்த வேறோர் அரசு தோன்றும்; அடுத்து வெண்கலம் போன்ற மூன்றாம் அரசு எழும்பும்; அது உலகெல்லாம் ஆளும். பின்னர், அனைத்தையும் நொறுக்கும் இரும்பைப் போல் வலிமை வாய்ந்த நான்காம் அரசு தோன்றும்; அந்த அரசும் இரும்பு நொறுக்குவது போல் அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கும். மேலும், நீர் அச்சிலையின் அடிகளையும் கால் விரல்களையும், ஒரு பகுதி குயவனின் களிமண்ணாகவும், மறு பகுதி இரும்பாகவும் கண்டதற்கிணங்க, அந்த அரசு பிளவுபட்ட அரசாய் இருக்கும். ஆனால், சேற்றுக் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டதற்கிணங்க, இரும்பின் உறுதியும் ஓரளவு காணப்படும். அடிகளின் விரல்கள் ஒரு பகுதி இரும்பும் மறு பகுதி களிமண்ணுமாய் இருந்தது போல் அந்த அரசும் ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும். இரும்பு களிமண்ணோடு கலந்திருப்பதாக நீர் கண்டதற்கிணங்க, அவர்களும் தங்களுக்குள் திருமணத்தின் மூலம் உறவு கொள்வார்கள்; ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காதது போல், அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒன்றித்திருக்க மாட்டார்கள். அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும். மனிதக் கை படாது பெயர்ந்து மலையிலிருந்து உருண்டு வந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது; அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.
தானி(இ) 1: 34. 35-36. 37-38

34 ஆண்டவரின் அனைத்துச் செயல்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

35 வானங்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். 36 ஆண்டவரின் தூதர்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி

37 வானத்திற்கு மேல் உள்ள நீர்த்திரளே, ஆண்டவரை வாழ்த்து; 38 ஆண்டவரின் ஆற்றல்களே, நீங்களெல்லாம் ஆண்டவரை வாழ்த்துங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11

அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, ``இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்'' என்றார். அவர்கள் இயேசுவிடம், ``போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ``நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, `நானே அவர்' என்றும், `காலம் நெருங்கி வந்துவிட்டது' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது'' என்றார். மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ``நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்'' (லூக்கா 21:8)

எருசலேம் கோவில் அழகுமிக்க ஒரு கட்டடம். புகழ்பெற்ற மன்னர் சாலமோன் கட்டிய கோவில் அழிந்துபட்ட பிறகு புதிய கோவில் கட்டப்பட்டது. அதை மீண்டும் விரிவுபடுத்தி, கலையுணர்வோடு மாற்றியமைத்த பெருமை பெரிய ஏரோதுவைச் சாரும். இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட கோவில்தான் இயேசுவின் காலத்தில் வானளாவ எழுந்து நின்ற எழில்மிகு கட்டடம். இயேசுவின் சீடர்கள் கோவிலின் அழகுபற்றி விமர்சிக்கிறார்கள். அப்போது இயேசு எருசலேமும் அதன் மையமாகிய கோவிலும் ஒருநாள் அழிந்துபோகும் என முன்னறிவிக்கிறார். உண்மையிலேயே கி.பி. 70ஆம் ஆண்டு உரோமைப் படை எருசலேமை அழித்தது. அந்நிகழ்ச்சிக்குப் பின்னரே நற்செய்தி நூல்கள் தொகுக்கப்பட்டு இன்றைய வடிவம் பெற்றன. எனவே, இயேசு எருசலேமின் அழிவுபற்றி உரைத்த கூற்றுக்களோடு உலக முடிவு பற்றிய கூற்றும் இணைந்த விதத்தில் இன்று நற்செய்தி உள்ளது. இறுதிக்காலத்தில் பலர் மக்களைத் திசைதிருப்பப் பார்ப்பார்கள் என்றும் அப்போது நாம் ''ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்'' (காண்க: லூக் 21:8) என்றும் இயேசு கூறுகின்ற சொற்கள் பொருள்செறிவுள்ளன.

மனிதர் எளிதில் ஏமாந்துபோவதுண்டு. ஏமாற்றுபவர்கள் இருக்கும்வரை ஏமாறுபவர்களும் ஏமாற்றங்களும் இருக்கும். ஆனால் இயேசு தருகின்ற எச்சரிக்கையில் ஓர் ஆழ்ந்த பொருள் உள்ளது. கடவுளைப் பற்றியும் கடவுளின் பண்புகள் பற்றியும் நமக்குத் தெரியும் என நாம் நினைத்து, கவலையற்றிருந்தால் நாம் ஏமாந்துவிட்டோம் என்றுதான் பொருள். அதுபோலவே, கடவுள் பற்றிய எல்லாம் எனக்குத் தெரியும்; எனவே நான் கூறுவதைக் கேட்டு நான் கேட்டதைச் செய்யுங்கள் என்று பிறரிடம் கோருவதும் ஏமாற்றத்திற்கு வழியே. நம் உள்ளத்தைக் கடவுளிடமிருந்து திருப்பி, நம் மனம் போன போக்கில் செல்வதற்கு நமக்கு சோhதனைகள் எழுவதுண்டு. அத்தகைய ஏமாற்றத்திற்கு ஆளாகாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏமாற்றங்கள் ஏற்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் நம் எதிர்பார்ப்புக்கள் முறையின்றி அமைவதும், நம் சொந்த சக்தியால் எதையும் சாதித்துவிடலாம் என்று நாம் நினைத்துச் செயல்படுவதுமே. இந்த மனநிலை மாற வேண்டும். இயேசுவின் வருகை நிகழப்போகின்ற நேரத்தைத் துல்லியமாக அறிந்துகொள்ள நம்மால் இயலாது. இயேசுவும் தம் வருகை பற்றிய காலத்தையும் நேரத்தையும் பற்றிப் பேச மறுத்துவிட்டார். அவருடைய வருகையை ஆவலோடு எதிர்பார்ப்போருக்கு ஏமாற்றம் இராது. நாம் விழிப்போடு செயல்பட வேண்டும் என்பதே இயேசுவின் கோரிக்கை.

மன்றாட்டு:

இறைவா, உம் வார்த்தையை முழுமையாக நம்பிட எங்களுக்கு அருள்தாரும்.