யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் திங்கட்கிழமை
2015-11-16

புனித மார்கரீத்




முதல் வாசகம்

தங்கள் கண்ணில் பட்ட திருச்சட்ட நூல் ஒவ்வொன்றையும் கிழித்து நெருப்பிலிட்டு எரித்தார்கள்.
மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 10-15, 41-43, 54-57, 62-64

மன்னர் அந்தியோக்கின் மகன் அந்தியோக்கு எப்பிபான் ஆவான்; முன்பு உரோமையில் பிணைக் கைதியாக இருந்த அவன் கிரேக்கப் பேரரசின் நூற்று முப்பத்தேழாம் ஆண்டு ஆட்சி செய்யத் தொடங்கினான். அக்காலத்தில் இஸ்ரயேலில் தீநெறியாளர் சிலர் தோன்றி, ``வாருங்கள், நம்மைச் சுற்றிலும் இருக்கும் வேற்றினத்தாரோடு நாம் உடன்படிக்கை செய்து கொள்வோம்; ஏனெனில் நாம் அவர்களை விட்டுப் பிரிந்ததிலிருந்து நமக்குப் பலவகைக் கேடுகள் நேர்ந்துள்ளன'' என்று கூறி, மக்கள் அனைவரையும் தவறான வழியில் செல்லத் தூண்டினர். இது அவர்களுக்கு ஏற்புடையதாய் இருந்தது. உடனே மக்களுள் சிலர் ஆர்வத்தோடு மன்னனிடம் சென்றனர். அவர்கள் கேட்டதற்கு இணங்க, வேற்றினத்தாரின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு அவன் அவர்களுக்கு உரிமை அளித்தான். வேற்றினத்தாருடைய பழக்க வழக்கத்திற்கு ஏற்ப அவர்கள் எருசலேமில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்று ஏற்படுத்தினார்கள்; விருத்தசேதனத்தின் அடையாளத்தை மறைத்து, தூய உடன்படிக்கையை விட்டுவிட்டு, வேற்றினத்தாரோடு கலந்து, எல்லா வகைத் தீமைகளையும் செய்தார்கள். எல்லாரும் ஒரே மக்களினமாய் இருக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட பழக்க வழக்கங்களைக் கைவிட வேண்டும் என்றும் அந்தியோக்கு மன்னன் தன் பேரரசு முழுவதிலும் ஆணை பிறப்பித்தான். மன்னனின் கட்டளைப்படி நடக்கப் பிற இனத்தார் அனைவரும் இசைந்தனர். இஸ்ரயேலருள் பலர் மன்னனுடைய வழிபாட்டு முறைகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டனர்; சிலைகளுக்குப் பலியிட்டனர்; ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தினர். நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு கிஸ்லேவு மாதம் பதினைந்தாம் நாள் அந்தியோக்கும் அவனுடைய ஆள்களும் பலிபீடத்தின் மேல் நடுங்க வைக்கும் தீட்டை நிறுவினார்கள்; யூதேயாவின் நகரங்களெங்கும் சிலை வழிபாட்டுக்கான பீடங்களைக் கட்டினார்கள்; வீட்டுக் கதவுகளுக்கு முன்பும் வீதிகளிலும் தூபம் காட்டினார்கள்; தங்கள் கண்ணில் பட்ட திருச்சட்ட நூல் ஒவ்வொன்றையும் கிழித்து நெருப்பிலிட்டு எரித்தார்கள். எவரிடம் உடன்படிக்கை நூல் காணப்பட்டதோ, யார் திருச்சட்டத்தின்படி நடந்துவந்தார்களோ அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்பது மன்னனது கட்டளை. எனினும் இஸ்ரயேலருள் பலர் உறுதியாய் இருந்தனர்; தூய்மையற்ற உணவுப் பொருள்களை உண்பதில்லை என்று தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்; உணவுப் பொருள்களால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்வதை விட, தூய உடன்படிக்கையை மாசுபடுத்துவதை விடச் சாவதே சிறந்தது என்று கருதினர்; அவ்வாறே இறந்தனர். இவ்வாறு இஸ்ரயேல் மீது பேரிடர் வந்துற்றது

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது ஒழுங்கு முறைகளை நான் கடைப்பிடிப்பேன்.
திருப்பாடல்கள் 119: 53,61. 134,150. 155,158

53 உம் திருச்சட்டத்தைக் கைவிடும் தீயோரைப் பார்க்கும்போது சீற்றம் என்னைக் கவ்விக்கொள்கின்றது. 61 தீயோரின் கட்டுகள் என்னை இறுக்குகின்றன; ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன். -பல்லவி

134 மனிதர் செய்யும் கொடுமையினின்று என்னை விடுவியும்! உம் நியமங்களை நான் கடைப்பிடிப்பேன். 150 சதிசெய்து ஒடுக்குவோர் என்னை நெருங்கி வருகின்றனர்; உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும் வெகு தொலைவு. -பல்லவி

155 தீயோர்க்கு மீட்பு வெகுதொலையில் உள்ளது; ஏனெனில், அவர்கள் உம் விதிமுறைகளைத் தேடுவதில்லை. 158 துரோகம் செய்வோரை அருவருப்புடன் பார்க்கின்றேன்; ஏனெனில், அவர்கள் உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்18;35 43

35 இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். 36 மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், "இது என்ன?" என்று வினவினார். 37 நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள். 38 உடனே அவர், "இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கூக்குரலிட்டார். 39 முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால் அவர், "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார். 40 இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார். அவர் நெருங்கி வந்ததும், 41 "நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்" என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், "ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்" என்றார். 42 இயேசு அவரிடம், "பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார். 43 அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர். -------------------------

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அவரிடம், 'பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' என்றார். அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்'' (லூக்கா 18:42-43)

இயேசு கலிலேயாப் பகுதிகளில் இறையாட்சி பற்றிய செய்தியை அறிவித்துவிட்டு அங்கிருந்து எருசலேமுக்குப் பயணமாகச் செல்கின்றார். கலிலேயாவிலிருந்து தெற்கு நோக்கிச் சென்ற இயேசு யோர்தான் பள்ளத்தாக்கை அடைந்து, எரிகோ நகரை நெருங்கி வருகின்றார். எரிகோவிலிருந்து எருசலேம் ஏறத்தாழ 27 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. எருசலேம் கோவிலில் குருக்களாகப் பணியாற்றியோர் மற்றும் அதிகாரிகள் எரிகோவில்தான் பெரும்பாலும் தங்கியிருந்தார்கள். எருசலேமை நோக்கிச் செல்கின்ற திருப்பயணிகளும் எரிகோவில் தங்கி இளைப்பாறிவிட்டுப் பயணத்தைத் தொடர்வார்கள். எனவே, ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நகரமாக எரிகோ விளங்கியது. கோவிலுக்குச் செல்வோரிடம் கையேந்தி பிச்சை கேட்கும் பழக்கம் நம் நாட்டில் இருப்பதுபோல அன்று பாலஸ்தீன நாட்டிலும் இருந்தது. ஆக, எரிகோவில் பார்வையற்ற ஒரு ஏழை மனிதர் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார். இயேசு அவ்வழியே நடந்துசெல்கிறார் என்பதை அறிந்த அந்த மனிதர் இயேசுவிடம் உதவி கேட்கிறார். ''இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்'' என அந்த மனிதர் கத்துகின்றார். இயேசு அவரை அணுகிச் செல்லவில்லை. மாறாக, தம்மோடு வந்தவர்களிடம், ''அவரை இங்கே அழைத்துவாருங்கள்'' என்று கூறுகிறார். இயேசு செய்யவிருக்கின்ற அதிசய நிகழ்ச்சியில் பிறரும் பங்கேற்க வாய்ப்புப் பிறக்கிறது. பார்வையற்றவராக இருந்ததால் யாராவது அவரை அணுகிச் சென்று, கைபிடித்து அவரை இயேசுவிடம் இட்டுச் சென்றிருப்பார்கள். அருகே வந்த அந்த மனிதரிடம் இயேசு, ''நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்கிறார்.

இயேசு கேட்ட கேள்விக்கு அந்த மனிதர் ''ஐயா, பிச்சை போடுங்கள், ஐயா'' என்று கேட்டிருக்கலாம். அதற்கு மாறாக, அவர் ''ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்'' என்னும் கோரிக்கையை முன்வைக்கிறார். இது ஓர் அதிசயமான கோரிக்கைதான். இயேசுவைப் பற்றி அந்த மனிதர் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்திருக்க வேண்டும். இயேசு கடவுளின் பெயரால் வந்தவர், கடவுளின் வல்லமையோடு செயல்படுபவர், எனவே மனது வைத்தால் அவரால் தனக்கு மீண்டும் பார்வை அளிக்க இயலும் என அந்த மனிதர் உளமார நம்புகிறார். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் அவருடைய உதடுகளிலிருந்து வெளிவந்த கோரிக்கை: ''நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்''. இயேசு அந்த மனிதரின் நம்பிக்கையைக் காண்கின்றார். தம்மில் நம்பிக்கை கொண்டவர்களைக் கடவுள் கைவிடுவதில்லை என்னும் உண்மை இங்கே தெளிவாகிறது. பார்வையற்ற மனிதருக்குப் பார்வையளிக்கிறார் இயேசு. பார்வை பெற்ற மனிதரின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவர் ''கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார்''. இயேசுவைப் ''பின்பற்றுகிறார்''. நமது உள்ளத்தில் நிலவுகின்ற இருளை அகற்றி நமக்கு உள்ளொளி தருகின்றவர் இயேசு. உலகுக்கு ஒளியாக வந்த அவர் நம் உள்ளத்தை ஒளிர்விக்கின்றார். நாமும் நலம் பெறுகின்றோம். நம் உள்ளத்தில் பெருக்கெடுக்கின்ற நன்றியுணர்வு இறைபுகழாக வெளிப்பட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் உம் வல்லமையால் அக ஒளி பெற்று உம்மைப் போற்றிப் புகழ அருள்தாரும்.