யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





பொதுக்காலம் முப்பத்திமூன்றாம் ஞாயிறு

திருவழிபாடு ஆண்டு - B



இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்./> வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு  என்றார்./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./> வழியில் அவர் தம் சீடரை நோக்கி, நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?./>


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

இறைவாக்கினர் தானியேல் நூல் 12:1-3

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் 10:21-14,18

மாற்கு எழுதிய நற்செய்தி 13: 24-32

திருப்பலி முன்னுரை - 1

தூய்மைக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் முப்பத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நம்மைத் தயார் செய்ய இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் அரசருக்குரிய மாட்சியுடன் நமக்கு தீர்ப்பிட வரும் நாளில் நிகழப்போகின்றவை பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவரின் வருகைக்காக நாம் எப்பொழும் தயாராக இருக்க வேண்டுமென இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. கிறிஸ்து இயேசுவின் பலியால் தூயவர்களாக மாற்றப்பட்டிருக்கும் நாம், தொடர்ந்து அவருக்கு உகந்தவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

திருப்பலி முன்னுரை - 2

இறை இயேசுவின் அன்புக்கும் அரவணைப்புக்கும் உரிய அன்பு மக்களே தமது நிறையன்பால் நம்மை வழிநடாத்திக்கொண்டிருக்கும் நம் விண்ணகத் தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் முப்பத்திமூன்றாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

கிறீஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய உண்மைகள் இன்றைய செய்தியாக நமக்குத் தரப்படுகின்றது. அவருடைய வருகை எப்படி இருக்கும், அது உருவாக்கும் விளைவுகள் என்ன, நாம் கிறிஸ்துவின் வருகையை எப்படி எதிர் கொள்ளவேண்டும், என்பது பற்றி தெளிவான உண்மைகள் இன்று நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்: அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்: வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொலியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர் என்னும் இறைவார்த்தைகள் நம்மை ஆழமான ஒரு ஆன்மிகச் சுத்திகரிப்பை மேற்கொள்ளத் துண்டுகின்றன. இந்த உண்மைகளை இதயத்தில் நன்கு பதித்து, முடிவில்லா வாழ்வைப் பெற்றிட, இறைவனுக்குகந்த மக்களாக மாறி அவர் காட்டும் நெறிமுறைகளின்படி வாழ இத்திருப்பலியில் அருள் கேட்டுச் செபிப்போம்.

முதல் வாசகம்

உன் இனத்தார் விடுவிக்கப்படுவர்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-3

அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
திருப்பாடல்16: 5,8. 9-10. 11

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே; 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி

இரண்டாம் வாசகம்

ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-14,18

சகோதரர் சகோதரிகளே, ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். எனவே பாவ மன்னிப்புக் கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமே இல்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார். அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன்!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எல்லாத் தலைமுறையினரையும் இரக்கத்தோடு ஆட்சி அன்புத் தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் நிறை ஞானத்தோடும், விவேகத்தோடும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளவர்களை வழி நடாத்துவதற்கு வேண்டிய அருளை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மேன்மை நிறைந்தவராம் இறைவா,

எம் நாட்டு மக்கள் அனைவரும் உம் திருமகனைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ளவும், அனைத்துக்கும் மேலாக உமது நீதியின் அரசை விரும்பித் தேடவும், பாவம் என்னும் நோயால் உலகில் நிலவும் அன்பின்மை, ஆதரவின்மை, நம்பிக்கையின்மை, உதவியின்மை போன்றவை அகன்று, மக்கள் அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைக் காணச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கும் அன்புத் தந்தையே இறைவா!

உலக நாடு முழுவதிலும் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகள், இன்னும் உதவியின்றி பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வாழும் ஏழைக் கைம்பெண்கள் ஆகியோரை உமது இரக்கத்தால் பாதுகாத்து வழி நடாத்திட வேண்டுமென்றும், நாங்கள் ஒவ்வொருவரும் கருணையும, இரக்கமும், அன்பும் உள்ளவர்களாகவும், நிபந்தனையின்றி அன்புப்பணிக்காக எம்மையே அர்ப்பணிக்கும் நல்லுள்ளத்தை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வரவேண்டும் என்ற இறைவா!

நாங்கள் நீர் கொடுத்த பரிசுத்தம் என்றும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப் புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் இறைவா,

இறந்து போன அனைத்து ஆன்மாக்களுக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்றும், எமது நாட்டில் ஏற்பட்ட போரில் இறந்து போன அனைவருக்கும் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டுமென்றும், யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக சிறப்பாக மன்றாடுகிறோம். அவர்கள் தாங்கள் செய்த பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும் அவர்கள் வேதனை குறைந்து உம் தெய்வீக விருந்தில் பங்குபெற அவர்களை ஆசிர்வதித்து உம்மிடம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தூயவரான அன்புத் தந்தையே இறைவா!

இன்று எமது சமூகத்திலே வீணான விவாதங்களாலும், குழப்பங்களாலும், தவறான போதனைகளாலும், பிடிவாதத்தாலும், உறவை முறித்து, விசுவாசத்தை மறந்து பாதை மாறிச் செல்லும் அனைவர்மீதும் மனமிரங்கி உமது வழியில் செல்ல அவர்களை வழிப்படுத்தியருள வேண்டுமென்றும், எமது இளைஞர்களை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களது இளமைப் பருவத்தின் பாவங்களையும், குற்றங்களையும் நினையாது உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் அவர்கள் மேல் பொழிந்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய சிந்தனை

இரண்டாம் வருகை !

கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றுதான் இரண்டாம் வருகை. முதல் வருகையின்போது, மானிட உருவெடுத்து, பாடுபட்டு, மரித்து, உயிர்த்த இறைமகன் இயேசு இரண்டாம் முறையாக மீண்டும் வருவார். அந்த வருகையின்போது அவர் நடுவராக உலகைத் தீர்ப்பிடுவார் என்பதுவே இரண்டாம் வருகையின் பொருள். ;இதை நாம் ஒவ்வொரு நாளும் திருப்பலியிலும், விசுவாசப் பிரமாணத்திலும், இன்னும் வேறு பல வேளைகளிலும் அறிக்கையிடுகிறோம். இந்த விசுவாச அறிக்கையை எப்படி வாழ்வில் பயன்படுத்துவது? நல்ல கேள்வி. நடுவராக இயேசு மீண்டும் வரவிருக்கிற அந்த இரண்டாம் வருகை உலக முடிவில்தான் இருக்கும். உலக முடிவு எப்போது என்று மனுமகனுக்கே தெரியாது என்று இயேசுவும் கூறிவிட்டார். எனவே, நம்மைப் பொறுத்தவரை, உலக முடிவு என்பது நம் ஒவ்வொருவரின் முடிவுதான். அதாவது, நமது இறப்புதான். நாம் இறக்கின்றபோது நடுவராம் இயேசு நம்மைச் சந்தித்து நம்மைத் தீர்ப்புpடுவார். அந்தத் தீர்ப்பின் வேளைக்காக நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நாம் இறைவனுடைய பிரசன்னத்தை உணர்ந்து வாழ்வதும், நமது பணிகளை நேர்மையாக, நேர்த்தியாக ஆற்றுவதுமே இரண்டாம் வருகைக்கான நமது தயாரிப்பு. ஒவ்வொரு ஆண்டும் திருவருகைக் காலம் இதை நமக்கு நினைவூட்டுகிறது,

மன்றாட்டு:

வருகையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். முதல் முறை வந்து எங்களை மீட்டவரே, உமக்கு நன்றி. இரண்டாம் முறை உலகிற்குத் தீர்ப்பு அளிக்க இருப்பவரே, உமக்குப் புகழ். ஆண்டவரே, எல்லாக் காலத்திலும், எல்லா வேளையிலும் உமது திருவுளத்தை நிறைவேற்றி, எங்கள் மரணத்துக்கு, உமது இரண்டாம் வருகைக்கு எப்போதும் தயாராக இருக்கும் அருளைத் தந்தருளும்.