யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் புதன்கிழமை
2015-11-11

புனித மாட்டீன்




முதல் வாசகம்

தூய்மையாய்க் கடைப்பிடிப்போர் தூயோர் ஆவர்
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 1-11

மன்னர்களே, நான் சொல்வதற்குச் செவிசாய்த்துப் புரிந்து கொள்ளுங்கள் உலகின் கடையெல்லை வரை நீதி வழங்குவோரே, கற்றுக் கொள்ளுங்கள். திரளான மக்களை ஆள்வோரே, பல மக்களினங்களைப் பற்றிப் பெருமை பாராட்டுவோரே, எனக்குச் செவிசாயுங்கள். ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச் சோதித்து அறிபவர் உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே. அவரது அரசின் பணியாளர்களாய் இருந்தும், நீங்கள் நேர்மையுடன் தீர்ப்பு வழங்கவில்லை திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை கடவுளின் திருவுளப்படி நடக்கவில்லை. கொடுமையாகவும் விரைவாகவும் அவர் உங்கள்மேல் வருவார் உயர் நிலையில் உள்ளவர்களுக்குக் கடும் தீர்ப்பு வழங்குவார். எளியோர்க்கு இரக்கங்காட்டி அவர்களைப் பொறுத்தருள்வார் வலியோரை வன்மையாகத் தண்டிப்பார். அனைத்திற்கும் ஆண்டவர் யாருக்கும் அஞ்சி நடுங்க மாட்டார் உயர்ந்தோர்க்கென்று தனி மதிப்பு அளிக்க மாட்டார். ஏனெனில் பெரியோரையும் சிறியோரையும் படைத்தவர் அவரே எல்லாரும் ஒன்று என எண்ணிக் காப்பவரும் அவரே. அவர் வலியோரிடம் கண்டிப்பான கணக்குக் கேட்பார். எனவே, மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளவும், நெறி பிறழாது நடக்கவும், உங்களுக்கு நான் கூறுகிறேன்@ தூய்மையானவற்றைத் தூய்மையாய்க் கடைப்பிடிப்போர் தூயோர் ஆவர் தூய்மையானவற்றைக் கற்றுக் கொண்டோர் தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர். எனவே என் சொற்கள்மீது நாட்டங்கொள்ளுங்கள் ஏக்கங்கொள்ளுங்கள். நீங்கள் அவற்றால் நற்பயிற்சி பெறுவீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே, உலகில் எழுந்தருளும், நீதியை நிலைநாட்டும்.
திருப்பாடல்கள் 82-3_ 7

3 எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள் சிறுமை யுற்றோர்க்கும் ஏழைகட்கும் நியாயம் வழங்குங்கள்! 4 எளியோரையும் வறியோரையும் விடுவியுங்கள்! பொல்லாரின் பிடியினின்று அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்! பல்லவி

6 நீங்கள் தெய்வங்கள் நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள். 7 ஆயினும், நீங்களும் மனிதர்போன்று மடிவீர்கள் தலைவர்களுள் ஒருவர் போல வீழ்வீர்கள் என்றேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள் என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார் அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே! என்றார். பின்பு அவரிடம், எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?'' (லூக்கா 17:17)

கலிலேயாவிலிருந்து எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார் இயேசு. அவரோடு சீடர்களும் நடந்துசெல்கிறார்கள். வழியில் இயேசு தம் சீடர்களுக்கு இறையாட்சி பற்றிப் போதிக்கிறார். பல புதுமைகள் நிகழ்த்தி, மக்களுக்கு நலமளிக்கிறார். அத்தகைய நலமளிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று ''பத்துத் தொழுநோயளர்கள் நோய்நீங்கப்பெறுதல்'' என்பதாகும் (லூக் 17:11-19). கலிலேயாவிலிருந்து எருசலேம் வருவதற்கு யோர்தான் பள்ளத்தாக்கைக் கடப்பதே நேர்வழி. லூக்கா கூற்றுப்படி இயேசு ஒரு சுற்றுவழியைத் தேர்ந்தெடுத்து சமாரியாப் பகுதிகள் வழியே நடந்து செல்கிறார். கடவுளின் திட்டத்தில் யூதர்களுக்கு மட்டுமன்றி எல்லா மக்களுக்கும் இடமுண்டு என்பது இங்கே குறிக்கப்படுகிறது. இயேசு இவ்வாறு வழிநடந்து செல்லும் போது பத்துத் தொழுநோயாளர்கள் அவரை அணுகிவந்து, ''ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்'' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டுகிறார்கள் (லூக் 17:13). இயேசு அவர்களுக்கு நலமளிக்கிறார். பத்துப் பேரில் ஒன்பது பேர் யூதர்கள், ஒருவர் மட்டும் சமாரியர். குணமடைந்த ஒன்பது யூதர்களும் லேவியர் நூலில் வழங்கப்பட்ட சட்டத்திற்கு ஏற்ப (காண்க: லேவி 14:2-9), குருவிடம் சென்று தங்களைக் காட்ட வேண்டும்; அவர்கள் குணமடைந்துவிட்டார்கள் என்று கண்டால் குரு சமுதாயத்தோடு அவர்கள் உறவாடலாம் என அறிவிப்பார். குணமடைந்த அந்த மனிதர்கள் இன்னும் சட்டத்தின் பிடியில் இருப்பதை இங்கே காண்கின்றோம். ஆனால் இயேசுவின் வல்லமையால் குணம்பெற்ற பத்தாவது மனிதர் ஒரு சமாரியர். அவருக்கு யூத சட்டப்படி குருவைப் போய் பார்க்க வேண்டும் என்ற கடமை இருக்கவில்லை. ஆனால் அந்த மனிதர் தாம் பெற்ற நன்மைக்கு நன்றி செலுத்த விரும்புகிறார். எனவே, இயேசுவிடம் செல்கிறார். அவ்வாறு செல்லும்போது ''கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே'' போகிறார். இயேசுவின் காலில் முகங்குப்புற விழுகிறார். இயேசுவுக்குத் தம் இதய நன்றியை வெளிப்படுத்துகிறார்.

இங்கே இரு ஆழ்ந்த கருத்துக்களை நாம் காண்கின்றோம். பத்துத் தொழுநோயாளர்களும் ஒன்று சேர்ந்து இயேசுவிடம் வருகிறார்கள். அவர்களில் ஒன்பது பேர் யூதராக இருந்தாலும், ஒருவர் சமாரியராக இருந்தாலும் ஒருவருக்கொருவர் வேறுபடுத்தி ஒதுக்கிட விரும்பவில்லை. ஒரே குடும்ப உணர்வு அவர்களைப் பிணைக்கிறது. கடவுளின் குடும்பம் சாதி இன அடிப்படையில் பிளவுபடலாகாது என்னும் உண்மையை இங்கே காண்கிறோம். இரண்டாவது கருத்து, இயேசுவைத் தேடி வந்த சமாரியத் தொழுநோயாளர் அவருக்கு நன்றிசெலுத்திய முறையாகும். லூக்கா நற்செய்திப்படி, இயேசுவிடமிருந்து நலம் பெறுகின்ற மனிதர் கடவுளைப் புகழ்வர்; இயேசு கடவுளிடமிருந்த வந்தவர் என்பதை ஏற்பர் (காண்க: லூக் 17:6). நாமும் இயேசுவின் வல்லமையால் நலம் பெறுகின்றோம்; அவருடைய சக்தியால் மீட்பு அடைகின்றோம். இந்த அரும் கொடையைப் பெற்ற பிறகு நாம் நன்றியற்றவர்களாக இருத்தல் ஆகாது. நாம் செலுத்துகின்ற நன்றி இறைப்புகழாக ஒலிக்க வேண்டும்; இயேசுவிடமிருந்து இறையருளும் வல்லமையும் ஊற்றெடுத்து எழுந்து நம்மைக் கழுவித் தூய்மையாக்குவதை உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்து, அவரை நம் ஆண்டவராக ஏற்றுப் பணிய வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் உமக்கு எந்நாளும் நன்றி செலுத்துகின்ற வரம் தந்தருளும்.